அது ஒரு பாடம்!



பணி நீக்கம் செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நினைத்தாலே பரிதாபமாக இருக்கிறது. அவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு அரசு கருணையோடு முடிவெடுக்க வேண்டும். தகுந்த நேரத்தில் அவர்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டிய கல்வி வேலை வழிகாட்டிக்கு மிக்க நன்றி.
- எச்.ரேவதி சுகுமார், சேலம்.

குப்பை பிரச்னை நாட்டையே ஸ்தம்பிக்க வைக்கிறது. ‘கிளீன் இந்தியா’ என்று அதற்காக தனித் திட்டமே தீட்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடித்திருக்கும் குப்பைகளை தரம் பிரிக்கும் எந்திரம், நாட்டின் பிரச்னைக்கு மிகச்சிறந்த தீர்வு.
- டி.வி.ரமா கோவிந்தன், செங்கல்பட்டு.

‘வெறும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையில்லை’ என்ற உண்மையை பொட்டில் அடித்தது போல சொல்லியிருக்கிறார் ‘மைண்ட் ஃபிரெஷ்’  நிறுவனத்தின் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி. மிகச்சரியான நேரத்தில் வெளிவந்த கட்டுரை. மதிப்பெண் குறைந்ததற்காக விரக்தி, பதற்றம், சோகமான மனநிலையில் இருக்கும் மாணவர்களுக்கு அந்தக் கட்டுரை ஒரு பாடம்.
- ஜி.டி.கிருஷ்ணமூர்த்தி, திருச்சி.

ஏராளமான பிரிவுகள், ஐந்நூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகள்... பொறியியல் படிப்பில் எதைத் தேர்வு செய்வது என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்த எங்களுக்கு பேராசிரியர் ப.வே.நவநீதகிருஷ்ணன் தந்த ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது. பேராசிரியருக்கும், கல்வி - வேலை வழிகாட்டிக்கும் நன்றிகள்.
- எச்.அப்துல்லா, நாகை.

அரசுப் பள்ளிகளில் 4360 ஆய்வக உதவியாளர்களை நியமிப்பது பற்றிய கட்டுரை விரிவாகவும், விளக்கமாகவும் இருந்தது. அந்த தேர்வுக்குரிய வினாத்தொகுப்பையும், டிப்ஸையும் அடுத்த இதழில் எதிர்பார்க்கிறோம்.
- எஸ். கில்பர்ட் மார்ட்டின், வந்தவாசி.