மும்மொழிக் கொள்கை தேவைதானா?



புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டதால் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து கல்வியாளர் பி.இரத்தினசபாபதியிடம் பேசியபோது அவர் எடுத்துரைத்த கருத்துகளைப் பார்ப்போம்…

‘‘கடந்த 50 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் இருமொழிகளே கற்றல் மொழிகளாக இருந்துவருகிறது. ‘வரைவு தேசியக் கல்விக் கொள்கை 2019’ல் மும்மொழித் திட்டம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்று மொழிகள் தேவையா? இரண்டு மொழிகளோடு இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்வதில் என்ன தவறு? பல மொழிகளைக் கற்றுக்கொள்வது நல்லதுதானே? என்றெல்லாம் பேசப்படுகிறது. ஒருவர் இயலுமாயின் எத்தனை மொழிகளையும் கற்கலாம். ஆனால், கல்வியில் தேவைக்குமேல் மொழிச் சுமையினைக் கூட்டக்கூடாது.

இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திமொழி கற்றாக வேண்டும் என்ற கல்வித்திட்டம் வந்தபோதெல்லாம் தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. அவ்வெதிர்ப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கும் அளவில் 1969-ல் இந்தி மொழி கல்வித் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணாவால் நீக்கப்பட்டது. இந்நாள் வரை எந்த இடரும் இல்லாமல் தமிழ்நாட்டுக் கல்வி தன் பாதையில் செல்கிறது. இந்தி கற்காததால் மாணவர்கள் எந்த வேலையும் கிடைக்காமல் திண்டாடவில்லை. மத்திய அரசுப் பணிகளுக்கு இந்திமொழி அறிவு விரும்பத்தக்கது (preferred) என்ற அளவில் விளம்பரப்படுத்தப்படுகிறதே தவிர, இந்திமொழி அந்தப் பணிகளுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை.

தகவல் தொழில்நுட்பம் பெருகியுள்ள இக்காலத்தில் ஆங்கில அறிவே போதுமானது. இருப்பினும்  இந்திக்கு ஓர் உயர்வு தரவேண்டும் என்ற வேண்டாத எண்ணத்தால் இந்தியைத்  தூக்கிப்பிடிக்கின்றனர். எப்படியாவது இந்தியை இந்தியாவில் பொதுமொழியாக்கும் வெறியிலும் அதன் வாயிலாக சமஸ்கிருதத்தினையும் திணிக்கும் நோக்கிலும் இன்று மத்தியில் ஆட்சி செய்வோர் மும்மொழித் திட்டம் என்று வேண்டாத ஒன்றை வேண்டு மென்றே கட்டாயப்படுத்துகிறார்கள்’’ என்று பொட்டில் அடித்தாற்போல் கூறுகிறார் இரத்தினசபாபதி.

‘‘இந்தியா பல மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென தனிச் சிறப்புண்டு. ஒருவேளை சமஸ்கிருத மொழியை அடிப்படையாகக் கொண்டு தோன்றிய மொழியைத் தம் தாய்மொழியாகக் கொண்டிருந்தால் அவர்கள் சமஸ்கிருத மொழியை ஏற்றுக்கொள்வர். ஏனெனில் மொழியும் பண்பாடும் ஒன்றுக்கொன்று இணைந்தவை. ஆனால், தமிழ் தனித்தன்மையும் சிறப்பும் வாய்ந்தது. சமஸ்கிருதம் போல ஓர் ஆச்சார மொழியன்று; அறிவியல் மொழி.  இக்கால மொழியியலாரும் வியக்கும் அளவில் தொல்காப்பியம் போன்ற அரிய இலக்கண நூல்களைக் கொண்ட மொழி தமிழ்மொழி. மனித நேயத்தை 2500 ஆண்டு களுக்கு முன்னரே வெளிப்படுத்திய மொழி. வளமையும் வலிமையும் கொண்ட இந்த மொழியைத் தவிர்த்து இன்னொரு மொழியைப் பொதுமொழியாக ஏற்க முடியாது. அவ்வாறு ஏற்பதும் தமிழ்ப் பண்பாட்டினையே புறக்கணிப்பபதாகும்.

சமயத்தின் வாயிலாக புகுந்த சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டமையால் தமிழ் நீச பாஷை எனச் சமஸ்கிருதப் பற்றாளர்களால் கூறப்பட்டது. “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”, “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” போன்ற அரிய கருத்துகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறிய சான்றோர்கள் நம்மவர்கள். அதை வளப்படுத்தவும் வலுப்படுத்தவும் தேவையான மொழிக்கல்வித் திட்டம் நமக்குத் தேவை. அதை விடுத்து வாழ்வியல் பயன் குன்றிய மொழியொன்றைக் கல்வித் திட்டத்தில் புகுத்து வானேன்?

மொழிகள் பல பேசப்பட்டுவரும் பகுதி களைக் கொண்ட நாட்டில். ஒருவர் எந்தப் பகுதியில் வாழ நேருகிறதோ அந்தப் பகுதி மொழியை அவ்வப்போது வாழ்க்கைப் பயன்நோக்கிக் கற்றுக்கொள்ளவியலும். கல்வித் திட்டத்தில் அதைப் புகுத்தி கற்கவேண்டும் என வலியுறுத்துவது கற்றலைச் சுமையாக்கும் வேலையாகும். கல்வி சுமையாக இருக்கக் கூடாது. கற்றல் இனிமையாக இருத்தல் வேண்டும் என்றெல்லாம் பேசப்படும் இந்நாளில் இந்திமொழியை அதுவும் எந்த நிலையிலும் தேவையில்லா ஒரு மொழியினை ‘பொது மொழி ஆக்கவேண்டும்’ என்ற குறுகிய நோக்கில் கல்வித் திட்டத்தில் புகுத்துவது முறையன்று.

சில வகைப் பள்ளிகளில் இந்தி கற்றுக்கொடுக்கப்படுகிறதே! அரசுப் பள்ளிகளில் இல்லையே? என்று சிலர் அங்கலாய்த்துக் கொள்கின்றனர். மத்திய அரசுப் பள்ளிகளில் பெருக்கத்தைத் தடுப்பதற்காக மெட்ரிக் பள்ளிகள் ஏற்பட்டன. ஆனால், பொதுப்பாடத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் அவையும் அரசுப் பள்ளிகள் போல இயங்கிவருகின்றன. பெற்றோர்களின் குன்றிய விழிப்புணர்வினைக் கருவியாக்கிக்கொண்டு மெட்ரிக் பள்ளிகளில் வருவாய் தரும் வாயிலாக இந்திமொழி கற்பிப்பினைக் கொள்கின்றனர். இதுவும் தடுக்கப்படவேண்டும்’’ என்கிறார்.

மேலும் அவர், ‘‘தமிழ்நாட்டுக் கல்வியில் இந்தி மொழி புகுந்து அதன் வாயிலாக சமஸ்கிருதம் நுழையுமாயின் தந்தை பெரியார், மறைமலை அடிகள், திரு.வி.க போன்றோர் மீட்டெடுத்த தமிழ்ப் பண்பாடு சிதையும். இவர்களின் மீட்டெடுப்பிற்கு ராபர்ட் கால்டுவெல் என்னும் பிரிட்டானியரின் மொழி ஆய்வு பயன்பட்டது. இன்றோ தமிழ் மொழியையே கல்வித் திட்டத்திலிருந்து நீக்கும் முயற்சி மெல்ல மெல்ல ஊடுருவுகிறது.

தமிழ்மொழியை தமிழ்ப் பண்பாட்டைச் சிதைக்கும் நோக்கில் கல்விக் கொள்கை வாயிலாக இந்தி வருகிறது. தமிழர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.  தமிழர்கள் மட்டுமல்ல மொழி உணர்வுடைய எந்த மாநிலத்தவரும் ஏற்கமாட்டார்கள். பஞ்சாப், வங்காளம், தென்கிழக்கு மாநிலங்கள் என இவையெல்லாம் இந்தியின் நுழைவினை ஏற்கவில்லை’’ என்றார்.  

- தோ.திருத்துவராஜ்