அரசு வேலைக்குத் தகுதியற்ற படிப்புகள்…கலக்கத்தில் மாணவர்கள்!



*சர்ச்சை

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி சமீபத்தில் 66-வது அரசாணையை வெளியிட்டது. அதில், தமிழகத்திலுள்ள சுமார் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்குகின்ற கல்லூரிகளில் இதுவரை நடத்தப்பட்டு வரும் 53 இளங்கலைப் பட்டப்படிப்புகளும் இதர பட்ட மேற்படிப்புகளும் அரசு வேலை பெறுவதற்குத் தகுதியானவை இல்லை என்று வெளியிட்டுள்ளது.

தமிழக உயர்கல்வித் துறை, கல்லூரி மாணவர்களின்  நலனைக் கருத்தில் கொள்ளாமல் வெளியிடும் இதுபோன்ற திடீர் முடிவுகள், பெற்றோர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. `தகுதியில்லாத படிப்புகளுக்கு ஏன் அனுமதி கொடுக்க வேண்டும்?’, `இந்தப் பட்டப்படிப்புகளுக்கு அனுமதி கொடுத்தது யார்?’ எனப் பல கேள்விகள் பாதிக்கப்படும் மாணவர்களிடமிருந்து பூகம்பமாய்க் கிளம்பிவருகிறது. இதுகுறித்து கல்வியாளரும் கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான ஆசிரியர் சு.மூர்த்தி கூறும் கருத்துகளைப் பார்ப்போம்.

‘‘படிப்பு என்பது வேலைக்காக என்றாகிவிட்டது. ஆனால், இன்று படித்த படிப்புக்கேற்ற வேலை என்பது ஒரு சிலருக்குத்தான் வாய்க்கிறது. எம்.பி.ஏ., எம்.சி.ஏ படித்தவர்கள் அரசாங்க அலுவலகத் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிக்கும் அளவிற்கு படிப்புக்கு மதிப்பற்ற நிலை உருவாகிவிட்டது. நான்கில் ஒருவர் பட்டதாரியாக இருக்கும் நிலையிலேயே இப்படி என்றால், பட்டதாரிகளின் எண்ணிக்கை இருமடங்கானால் என்னவாகும்? இதை நினைத்தால் படிப்பே வேண்டாம் என்ற எண்ணம்தான் வரும்.

இன்னொரு புறம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் நடத்திய 53 பட்டப்படிப்புகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்ற படிப்புகள் என்று அறிவித்துள்ளது. இது பட்டம் பெற்றவர்களையும் பெற இருப்பவர்களையும் கலக்கமடையச் செய்துள்ளது. இளைஞர்களுக்கு வாழ்வளிக்க வேண்டிய கல்வி, இளைஞர்களின் வாழ்வை வெறுமையாக்கிவிட்டது. ஆட்சியை நடத்துபவர்களால், கல்வித்துறையை நிர்வகிப்பவர்களால் இளைஞர்கள் பலருடைய எதிர்காலம் நாசமாக்கப்படுவது ஏற்றுக்கொள்ளவே முடியாது’’ என்று ஆதங்கப்படுகிறார் மூர்த்தி.

‘‘மக்கள் நலன் குறித்த அக்கறை கொண்ட ஆட்சியாளர்கள், கல்விக்கொள்கை வகுப்பவர்கள் உள்ள நாடுகளில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடப்பதில்லை. அரசு மற்றும் தனியார் நிர்வாகத்துறை, சேவைத்துறை, தொழில் துறை ஆகியவற்றின் கொள்கைகளுக்கும் கல்வித்துறையின் கொள்கைகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கும். நாட்டில் உள்ள அனைத்து வகைத் துறைகளின் வேலைவாய்ப்புகள் குறித்த தெளிவான ஆய்வுகள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகின்றன. இதற்கேற்பவே கல்வித்துறை கொள்கைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், இங்கு அப்படிப்பட்ட நல்ல அரசாளுகை முறைகள் ஒழிந்துவிட்டன.

தமிழ்நாட்டில் ஓர் ஆண்டில் 20 ஆயிரம் பொறியாளர்களுக்குக் கூட வேலைவாய்ப்பை வழங்கும் தொழில் துறை வளர்ச்சி இல்லை. ஆனால், ஆண்டுக்கு 2 லட்சம் பொறியாளர்களை உருவாக்கும் அளவிற்கு தனியார் பொறியியல் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஓர் ஆண்டில் 5 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மட்டுமே வேலை அளிக்க முடியும். ஆனால், ஆண்டுக்கு 50 ஆயிரம் ஆசிரியர்களை பயிற்சி பெற வைக்கும் அளவிற்கு தனியார் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. தேவைக்கு அதிகமாக பொறியாளர்களை, ஆசிரியர்களை உருவாக்குவதால் பெரும்பாலானவர்களுக்கு படிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை.

வேலைக்கேற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. எம்.எஸ்சி., பி.எட் முடித்துவிட்டு முதுகலை ஆசிரியராகப் பணியாற்றத் தகுதியுள்ளவர்கள் தனியார் பள்ளிகளில் மழலையர் வகுப்பு ஆசிரியர்களாக மாதம் வெறும் 5 ஆயிரம் ஊதியத்திற்கு பணியாற்றும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அரசு வேலைக்குத் தகுதியுடைய படிப்புக்கே இந்த நிலை என்றால் தகுதியற்ற படிப்புகள் என்று அறிவிக்கப்பட்டவர்களின் நிலை மேலும் மோசமாகவே இருக்கும்’’ என்கிறார்.  மேலும் தொடர்ந்த அவர், ‘‘தமிழக அரசாணையில் கூறப்பட்டுள்ள பட்டப்படிப்புகள் அரசு வேலைக்கு தகுதியில்லை என்று அறிவிக்கவில்லை. பிற பட்டப்படிப்புகளுக்கு சமமானவை அல்ல என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சிலர் பேசுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் முப்பதுக்கும் மேற்பட்ட படிப்புகள் சமமானவை அல்ல என்று ஆறு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வழங்கிய பி.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் கணிதவியல் நான்காண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பி.எஸ்சி. கணினி அறிவியலுக்கு சமமானதல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பட்டப்படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழகங்கள் பட்டப்படிப்புகளைத் தொடங்கும்போதே மத்திய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் படிப்புக்கான தகுதி அறிவிப்பைப் பெற்றுத் தொடங்கியிருக்கவேண்டும். ஒரு படிப்பைத் தொடங்கும்போது படிப்புக்கான காலம், கட்டணம், தேர்வு முறை ஆகியவை வெளியிடப்படுகின்றன. ஆனால், படிப்புக்கான வேலைவாய்ப்புத் தகுதிகள், அரசுப் பணிக்கான தகுதிகள் போன்றவை குறித்தும் வெளியிடவேண்டும். இப்படிப்பட்ட முறைகள் பின்பற்றப்படாததால் பணத்தையும் காலத்தையும் மாணவர்கள் வீணடித்துவிட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் ஒரு நாட்டின் முதன்மையான அமைப்புகள். இளைஞர்களின் வேலைவாய்ப்பு, முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு செயல்படவேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பெற்ற இழப்பீட்டுக் கட்டணத்தோடு கல்விக் கட்டணத்தையும் திருப்பிக் கொடுப்பதே நியாயமானது’’ என்று கலக்கமடைந்திருக்கும் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத் தீர்ப்பையும் சொல்லி முடித்தார்.

- தோ.திருத்துவராஜ்