கடல் சாமியின் வயது 165 ஆண்டுகள்!




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

  நெப்டியூன் கோள் கண்டு பிடிக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 165 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. இதிலென்ன விசேஷம்? இந்தக் கோள் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இப்போதுதான் சூரியனை முழுமையாக சுற்றி முடித்திருக்கிறது! அதாவது இக்கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் காலம் 165 ஆண்டுகள். இது கண்டுபிடிக்கப்பட்டதன் பின்னணியை கொஞ்சம் பார்ப் போமா?

18ம் நூற்றாண்டு அது. அப்போது யுரேனஸ்தான் சூரியக் குடும்பத்தின் கடைசி கோள் என கருதப்பட்டது. ஆனால், யுரேனஸின் சுற்றுப்பாதையில் அடிக்கடி மாற்றங்கள் ஏற்பட்டன. எப்படி ஏற்படுகிறது என விஞ்ஞானிகள் குழம்பினர். உடனே ஆய்வில் மூழ்கினர். இந்த மாற்றங்களுக்கு, அருகில் உள்ள ஏதோ ஒரு கோளே காரணம் என்ற முடிவுக்கு வந்தனர் விஞ்ஞானிகள். இதன்பிறகே யுரேனஸைத் தாண்டி கோள்கள் இருக்கின்றனவா என்ற ஆய்வு சூடுபிடிக்கத் தொடங்கியது.

இப்படி ஆய்வில் விஞ்ஞானிகள் மூழ்கிய வேளையில், பிரிட்டிஷ் வானியல் ஆய்வாளர் வில்லியம் ஹெர்செல் மற்றும் அவரது சகோதரி கரோலின் ஆகியோர் 1781ம் ஆண்டு நெப்டியூன் என்ற கோள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், அவர்கள் அதைப் பார்க்கவில்லை. உத்தேசமாகவே கண்டுபிடித்தனர்.

நெப்டியூன் இருக்கும் இடத்தை மிகச்சரியாகக் கணித்தவர்கள் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாட்டு கணிதவியல் - வானியல் ஆய்வாளர்களான லெ வெர்ரியரும் ஜான் கௌச் ஆடம்சும்தான். ஆனால், இவர்களும் இதைப் பார்க்கவில்லை. சூரியனில் இருந்தும் மற்ற கோள்களில் இருந்தும் எவ்வளவு தொலைவில் இது இருக்கலாம் என்பதை மட்டுமே இவர்கள் கணித்தனர்.

லெ வெர்ரியர் கணித்த ஆய்வை வைத்துக் கொண்டு ஜெர்மனி வானியல் ஆய்வாளர் ஜோகன் கல்லே ஆய்வில் இறங்கினார். இவர் 1846ம் ஆண்டு நெப்டியூன் கோளை தொலைநோக்கி மூலம் முதன்முதலாக அடையாளம் கண்டார். இதனால் இக்கோள் அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கப்பட்டது 1846ம் ஆண்டு என்றானது!

சூரியனில் இருந்து 450 கோடி மைல்கள் தொலைவில் உள்ள இக்கோளில் இருப்பதெல்லாம் ஹைட்ரஜன், மீத்தேன் மற்றும் ஹீலியம்தான். இக்கோள் நீல நிறத்தில் இருக்கும். இங்கு தரை என்பதே இல்லை. வாயுக்களால் சூழப்பட்ட ஒரு மலை உருண்டு திரண்டது போல இருக்கும்!

1846ம் ஆண்டு நெப்டியூன் கோள் எந்த இடத்தில் இருந்ததோ, அந்த இடத்தை கிட்டத்தட்ட 164.8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டுதான் வந்தடைந்துள்ளது. இக்கோளில் ஓராண்டு என்பது 165 ஆண்டுகள் (நாம் வாழும் பூமி ஓராண்டிலேயே சுற்றி முடித்து விடுகிறது).

‘நெப்டியூன்’ என்பது ரோமன் பெயர். இதன் அர்த்தம் ‘ஸீ ஆஃப் காட்’. அதாவது, ‘கடல் சாமி’!

புளூட்டோ இருக்கா?

யுரேனஸின் சுற்றுப் பாதையை ஏதோ ஒரு கிரகம் தொந்தரவு செய்கிறது என்பதை ஆய்வு மூலம் எப்படி விஞ்ஞானிகள் கண்டு பிடித்தார்களோ, அதுபோல கண்டுபிடிக்கப்பட்டதுதான் புளூட்டோ. நெப்டியூனின் சுற்றுப்பாதையை ஏதோ ஒரு கிரகம் பாதிக்கிறது என்ற கோணத்தில் ஆய்வுகள் நடந்தபோதுதான் புளுட்டோவும் விஞ்ஞானிகளின் கண்ணில் சிக்கியது. ஆனால், இது முழுமை பெறாத ஒரு கோள் என்பதை சமீபத்தில் கண்டுபிடித்து வெளியிட்டனர் விஞ்ஞானிகள். இதனால், சூரியக் குடும்பத்தின் கடைசி கோள் நெப்டியூன் மட்டுமே.
  டி.கார்த்திக்