மயிலிறகே... மயிலிறகே...!




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

   கலாப மயில் தன் அழகிய தோகையை, ஒரு மெகா விசிறி போல் விரித்து நடன மாடும் கண்கொள்ளாக் காட்சி, வசீரகத்தின் உச்சம்! இத்தனை எழில்மிகு சிறகு வண்ணத் தீற்றல்கள் லோகத்தில் வேறெந்தப் பறவைக்கும் இல்லை. கண் கோடி தேவைப்படும் இக்காட்சியைக் கண்ணுற்ற மாவீரன் அலெக்சாண்டர், இந்தியாவின் மீது படையெடுத்து விட்டுத் திரும்பும்போது பெரும் பொக்கிஷமாக ஏராளமான மயில்களை அள்ளிக் கொண்டு சென்றானாம். புவிப்பெயர்ச்சி!

ஆண் மயில்கள் அவ்வளவு எளிதில், தம் கண் கவர் தோகையை விரித்து விடுவதில்லை. ‘ட்ரெயின்’ எனப்படும் இந்த தோகை விஸ்தீரணம், ஆண் மயிலுக்கு சற்றே கூடுதலான பாரம்தான். எனவேதான் தரையில் இருக்கும் போது அதனை ஒரு கற்றை போல் நிலத்தில் போட்டு விடுகின்றன. பின் எளிதில் இழுத்துக் கொண்டு நடக்கின்றன. இனச் சேர்க்கைக்கு பெண் மயிலை ஈர்ப்பதற்காக, மழை பெய்து ஓய்ந்த மாலை வேளை அல்லது மேக மூட்டம் சூழ்ந்த மாலை வேளைகளில் ஆண் மயில் பெண் மயில்களுக்கு முன்பு தோகை விரித்தாடுவதுண்டு. விஸ்வரூப பிரசன்னம்!

ஆண் மயிலின் பளபளப்பான தோகையில் உள்ள சிறகுகள் நீலம் மற்றும் பச்சை கலந்த நிறத்திலிருக்கும். இதில் உள்ள கண் வடிவ அமைப்புகள், தோகை விரிக்கப்படும்போது, வரிசைக் கிரமமாக நீள் சிறகு மயிர்கள் ஒரு நெசவுப் பாவு போல் அருகருகே ஒருங்கிணைவதால்தான் உரு வாகிறது. இந்த கண் வடிவ அமைப்பு களை மட்டுமின்றி, தோகையின் இன்னபிற விஸ்தீரணத்திலும் காணப்படும் ஒருவித ஜிகினா பளபளப்புதான் நம் கண்களை ஈர்க்கிறது. வர்ண ஜாலம்!

பூமியில் வாழும் பறவையினங் களில் பலவற்றிற்கு ஆழ்ந்த வண்ணங்களிலும் அழகிய தோற்றத்திலும் சிறகு வண்ணங்கள் அமைந்துள்ளன. எனினும் இவை யெல்லாம் மயிலின் தோகை விரிப்பிற்கு முன்னால் கப்சிப்! மனிதர்களுக்கு தோலில் உள்ள ‘மெலனின்’ எனப்படும் ஒருவித நிறமிதான் உடலுக்கு வண்ணம் கொடுக்கிறது. மெலனின் மிகுந்தால் கருப்பு; குறைந்தால் சிவப்பு. இது போன்ற ஒருவித நிறமிதான் பிற பறவைகளின் சிறகுகளுக்கும் வண்ணம் தீட்டுகிறது. ஆனால், மயிலின் சங்கதி முற்றிலும் வேறு பட்டுள்ளது.

மயில்களின் சிறகுகளில் பார்பியூல்ஸ் எனப்படும் நார் போன்ற சமாச்சாரங்கள் எக்கச்சக்கமாக உள்ளன. இந்த பார்பியூல்களுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் ஒரு நுண்ணிய மாற்றம் ஏற்பட்டாலும் வேறுபட்ட நிறங்கள் உருவாகும். இந்த பார்பியூல்ஸ் எனப்படும் நார் போன்ற சங்கதிகளின் அமைப் பில் கண்டபடி மாற்றங்கள் நிகழ்வதில்லை. அதாவது சீரான மாறுபட்ட இடைவெளிதான் ஒரே மாதிரியான நிரந்தர வண்ணத்தைக் கொடுக்கிறது.

மேலும் மயில¢ தோகையில் காணப்படும் பளபளப்பும் மினு மினுப்பும் கொண்ட வண்ணங் கள் எல்லாமே ஒரு கலவை வண்ணம்தான்! அதாவது சிகப்பும், நீலமும் சேர்கையில் பழுப்பு வண்ணம் தோன்றுகிறது. இப்படிக் கலவையாகத் தோன்றும் வண்ணத்தின் மூல வண்ணங்களில¢ ஒன்று நிறமிகளாலும் மற்றொன்று மேலே குறிப்பிட்ட நார்களாலும் உருவாகின்றன. எனவேதான் மயிலின் தோகை வானவில் போல் ஜொலிக்கிறது!

மயிலின் தோகையென்பது வாலின் மேற்புறத்துச் சிறகுகளால் உருவானதேயாகும். பொதுவாக பறவைகளுக்கு வாலின் மேற்புறத்தில் 20 சிறகுகள் இருக்கும். மயிலுக்கு 200 சிறகு கள் இருக்கின்றன. இவை விரைப்பாகவும் உறுதியாகவும் நீண்டிருப்பதால்தான் தோகை விரித்தாட முடிகிறது. ஆண் மயில் களுக்கு மட்டுமே இத்தோகை அமைப்பு உள்ளது.

இந்தியத் தோகை மயில்களின் உடலில¢ காணப்படும் பெரும் பான்மையான நிறம் நீலம்தான். எனவேதான் இந்திய மயில்களுக்கு இன்னொரு பெயர் இருக்கிறது. நீல மயில்கள்!
ஆண் மயிலின் மற்ற அங்க லட்சணங்களிலும் வர்ண ஜாலங் கள் உள்ளன. உலோக நீலம் கொண்ட உச்சந்தலையில் அழகிய விசிறிக் கொண்டை இருக்கும். கரிய விசிறிக் காம்புகளின் முடிவில் நீலப் பச்சையில் மொசுமொசு முடி இருக்கும். கண்களின் மேலும் கீழும் உரோமமற்ற வெண்ணிறத் தோல். வெங்கலப் பச்சையில் முதுகுப் பகுதி. இளமஞ்சள் மற்றும் கரிய வரிகளுடன் இறக்கைகள். இவையெல்லாம் மயிலின் ஆணலங்காரம்.

பெண் மயில்களுக்கு மார்க் கம்மி. இவற்றுக்கு ஆர்ப்பாட்ட மான தோகையமைப்பு கிடையாது. இவற்றின் தலை செம்பழுப்பு நிறத்திலும், உடலின் மேற்பகுதி பழுப்பு நிறத்திலும், வால் கரும் பழுப்பு நிறத்திலிருமிருக்கும். கழுத்துப் பகுதி மட்டும் உலோகப் பச்சை நிறத்தில் காட்சி தரும். உடலின் அடிப்பகுதி, வெறுமனே வெள்ளை நிறத்திலிருக்கும். அழகற்ற குட்டையான வால் சிறகு களைக் கொண்ட இந்த பெண் மயில்கள் கூட சமயத்தில் பிற பெண் மயில்களைத் துரத்தவும், குஞ்சுகளுக்கு அபாயத்தை உணர்த்தவும் சொற்பமாக தோகை விரிப்பதுண்டு. இந்திய மயில்கள் போக வேறு சில மயில்களும் உண்டு. அவை எல்லாமே ஆசியவாசிகளே!
தோகை விரியும்
டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்