கண்டுபிடிச்சாங்க! சோலார் ஸ்கூட்டர்!




Mutharam magazine, Mutharam weekly magazine, Tamil Magazine Mutharam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

     சோலார் ஸ்கூட்டர்!

மும்பையைச் சேர்ந்த அயூப்கான் பதான் என்பவர் சோலார் ஸ்கூட்டர் ஒன்றை தயாரித்திருக்கிறார். இவரது சாதாரண ஸ்கூட்டரையே சோலார் சக்தி மூலம் இயங்கும்படி மாற்றி அமைத்திருக்கிறார் இவர். இதற்கு 3 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது இவருக்கு. இதே போல் விருப்பம் உள்ளவர்களுக்கும் ஸ்கூட்டரில் சோலார் தகடுகளை பொருத்தித் தருகிறார். ஒரு முறை முழுமையாக சார்ஜ் ஏற்றினால் போதும், 60 கிலோமீட்டர் வரை ஹாயாக பயணம் செய்யலாம். பெட்ரோல் இன்ஜினில் ஓடும் ஸ்கூட்டரை சோலார் சக்தியில் ஓட வைக்க 27 ஆயிரம் ரூபாய் செலவாகுமாம்.

குளுகுளு சட்டை!

ஜப்பானைச் சேர்ந்த ஹிரோஷி இசிகயா புதுமையாக குளுகுளு ஏ.சி. உடையை அறிமுகம் செய்திருக்கிறார். தன் நிறுவனத்தில் வியர்க்க விறுவிறுக்க வேலை செய்பவர்களுக்காக இந்த உடையை  இவர் உருவாக்கி யிருக்கிறார். இது ரெயின் கோட் போலவே இருக்கிறது. இரு புறம் பாக்கெட் உள்ள இடத்தில் இரண்டு மின் விசிறிகளைப் பொருத்தி யுள்ளார். பேட்டரி மூலம் இவை இயக்கப்படுகின்றன. ஒரு முறை சார்ஜ் செய்தால் தடை இல்லாமல் 16 மணி நேரம் மின்விசிறி செயல்படும். மின்விசிறி காற்றின் வேகத்தை நம் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம். மின்விசிறி சுழலும்போது அதில் வெளியாகும் காற்று உடலில் உள்ள வியர்வையை போக்கி குளுமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. உடை அழுக்கானால், மின்விசிறியைக் கழற்றி விட்டு சுத்தம் செய்துகொள்ளலாம். இந்த உடையை அணிவதன் மூலம் ஏ.சி. உபயோகத்தை குறைத்து மின் சிக்கனமும் செய்ய முடியும். இந்த குளுகுளு சட்டையின் விலை ரூ.6300.

ட்ராஜன் கோள்

சூரிய ஒளியில் இருந்து புறப்பட்டு பச்சை நிறத்திற்கு மாறியது போல காட்சியளிக்கும் இது ட்ராஜன். சிறு கோள். இந்த சிறு கோளை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சிறு கோள் பற்றி பல ஆய்வுகளை செய்துவிட்ட விஞ்ஞானிகள், அதற்கு ‘ட்ராஜன்’ என பெயரிட்டிருக்கிறார்கள். 200 முதல் 300 மீட்டர் அகலமான பாறை வடிவில் உள்ள இது பூமியின் புவிஈர்ப்பு பகுதிக்கு சிறிது தூரத்தில் உள்ளது. இதுவும் மற்ற கோள்களைப் போல சூரியனைச் சுற்றி வருகிறது. இக்கோளால் பூமிக்கு பாதிப்பும் இல்லை. நன்மையும் இல்லை.
ஷம்ரிதி