பாக்டீரியாவின் தந்தை



சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரிய கண்டெய்னர்களில் எண்ணெய் ஏற்றுமதி செய்தார்கள். அப்போது எண்ணெய்க் கசிவால் கடல் மாசுபட்டது. இதனால் பல்வேறு கடல் வாழ் உயிரினங்கள் பாதிப்படைந்தன. இதைத் தடுக்க என்ன செய்யலாம் என உலகமே யோசித்தது. இப்படிக் கடல் மாசடைவதை சரி செய்ய ஒரு செயற்கை பாக்டீரியாவைக் (Bug) கண்டறிந்தவர்தான் ஏ.எம்.சக்ரவர்த்தி.  

இவர் 1938ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். பேலூர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாமந்திர் பள்ளியிலும், பிறகு கல்கத்தாவில் இருக்கும் செயின்ட் சேவியர்ஸ் கல்லூரியிலும் படித்தார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் வேதியியலில் பிஹெச்.டி செய்தார். சக்ரவர்த்தியின் அறிவியல் ஆர்வம், பேராசிரியர் எஸ்.சி.ராயை வெகுவாகக் கவர்ந்தது. பயோகெமிஸ்ட்ரியில் இருந்து மூலக்கூறு மரபணுத் துறைக்கு (Molecular Genetics) சக்ரவர்த்தியின் லட்சியத்தை மடை மாற்றினார் ராய்.

கார்பனும் ஹைட்ரஜனும் ஒன்றிணைந்துதான் ஹைட்ரோகார்பன் உருவாகிறது  . அப்படிப்பட்ட ஒரு கலவைதான் க்ரூடு   எனப்படும் கச்சா எண்ணெய். ஹைட்ரோ கார்பனின் வெவ்வேறு காம்பவுண்டுகளை (கலவைகளை) சாப்பிட ‘சீடோமோனாஸ்’ என்கிற பாக்டீரியாவால் முடிந்தது. இந்த பாக்டீரியாவால் கடல் நீரை அசுத்தப்படுத்தும் க்ரூடு ஆயிலை உட்கொள்ள முடியும்.

ஒவ்வொரு வித பாக்டீரியாவும் ஒவ்வொரு வித ஹைட்ரோ கார்பன் காம்பவுண்டை மட்டுமே சாப்பிடும். மாறாக வேறுவிதமானதை சாப்பிட்டால் இறந்து போகும். எனவே பல்வேறு விதமான ஹைட்ரோ கார்பன் காம்பவுண்ட்களை ஜீரணிக்கும் வல்லமையுள்ள பாக்டீரியா இனம் ஒன்று தேவை என்பதை உணர்ந்த சக்ரவர்த்தி, ‘சூப்பர் ஸ்ட்ரெயின்’ பாக்டீரியாவைக் கண்டுபிடித்தார்.

இது ஹைட்ரோ கார்பனை விழுங்கி ஜீரணம் செய்தது. விழுங்கப்பட்ட இந்த ஹைட்ரோ கார்பன்கள் சத்து நிறைந்த புரோட்டீனாக பாக்டீரியாக்களிடமிருந்து வெளியேறி கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகவும் மாறியது. தொடர்ந்த ஆராய்ச்சியின் முடிவில், மிதமான தட்பவெப்பநிலையில் ஹைட்ரோ கார்பனைச் சாப்பிடும் நான்கு வித வித்தியாசமான பாக்டீரியாக்களை ஒரே இனமாக மாற்ற முடியும் என்பதைக் கண்டறிந்தார்.

மேலும் இந்த சூப்பர் ஸ்ட்ரெயின் பாக்டீரியா தனக்குத் தானே இனவிருத்தி செய்து கொள்ளும் தன்மையும் பெற்றிருந்தது கூடுதல் வரம். சக்ரவர்த்தியின் சேவையைப் பாராட்டி அவருக்கு மத்திய அரசு 2007ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது.

 சி.பரத்