அழகிய அருவி இகுவாசு!



சிலிர்ப்பூட்டும் சுவாரஸ்யங்கள்

உலகின் மிக அழகிய, கம்பீரமான நீர்வீழ்ச்சிகளில் இகுவாசுவும் ஒன்று. மிக பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்கும் இகுவாசு நீர்வீழ்ச்சி பற்றிய சில சுவையான தகவல்கள்...
 
இந்த இயற்கை அதிசயம், அர்ஜென்டினா  பிரேசில் நாடுகளின் எல்லையில் அமைந்துள்ளது. ‘இகுவாசு’ என்றால் ‘பெரிய தண்ணீர்’ என்று அர்த்தம். அதன் பெயரை விட மிக பிரமாண்டமானது, இகுவாசு நீர்வீழ்ச்சி.
 
1.7 மைல் நீளமுள்ள இந்நீர்வீழ்ச்சி, இகுவாசு நதியை மேல் அடுக்கு, கீழ் அடுக்கு என இரண்டு அடுக்குகளாகப் பிரித்துள்ளது. மொத்தம் 275 நீர்வீழ்ச்சிகளைக் கொண்ட ஒரு கூட்டமைப்பு இது.
 
அர்ஜென்டினாவில் 220 அருவிகளும், பிரேசிலில் 55 அருவிகளும் காணப்படுகிறதாம். தண்ணீரின் அளவைப் பொறுத்து நீர்வீழ்ச்சிகளின் எண்ணிக்கை மாறுபடும். சில சமயங்களில் 300 நீர்வீழ்ச்சிகள் வரை கூட அதிகரிக்கும்.
 
2011ல் புதிய ஏழு இயற்கை அதிசயங்களில் ஒன்றாக இது தேர்ந்தெடுக்கப்பட்டது.

எரிமலை வெடிப்பின் விளைவாக இகுவாசு அருவி உருவானதாம். அப்போது ஏற்பட்ட பள்ளத்தினால்தான் அருவியாக ஓடுகிறது இகுவாசு.
 
இந்த அருவி உருவானதைப் பற்றி ஒரு புராணக் கதையும் நிலவுகிறது. நைபி என்ற ஒரு அழகிய பெண்ணை மணக்க ஒரு கடவுள் ஆசைப்பட்டாராம். அதில் விருப்பமில்லாத அந்தப் பெண், தன் காதலனுடன் ஒரு கட்டுமரத்தில் ஏறி, இகுவாசு ஆற்றில் தப்பித்துச் சென்றாளாம். அப்போது கடவுளின் கோபப் பார்வை பட்டு, ஆறு பிளந்தது. ‘இரு காதலர்களும் உலகம் அழியும் வரை, அருவியாக விழக் கடவது’ என்று கடவுள் சபித்ததாக கதை.
 
நயாகராவை விட உயரமான இகுவாசு நீர்வீழ்ச்சி, அகலத்திலும் அதைவிட இரண்டு மடங்கு பெரியதாம். உலகிலுள்ள நீர்வீழ்ச்சிகளில் நயாகராவுக்கு அடுத்து, அதிகமான நீரோட்டமுள்ள அருவி இதுதான். சராசரியாக, ஒரு நொடிக்கு 62,000 கன அடி நீர் வரத்து உள்ளது.
 
நவம்பர் முதல் மார்ச் வரை இகுவாசு நீர்வீழ்ச்சியைப் பார்க்க ஏற்ற காலம். மழை நேரங்களில் இதன் நீர்வரத்து ஒரு நொடிக்கு 4,50,000 கன அடி வரை கூட அதிகரிக்குமாம்.
 
இதன் சக்தியைப் பயன்படுத்தி, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் நாடுகளின் தேவையில் நாற்பது சதவீத மின்சாரத்தைத் தயாரிக்கின்றனர்.
 
இந்த அருவித் தொகுப்பில் மிக அழகான இடம், ‘பேயின் குரல்வளை’ (Devil‘s throat) என்றழைக்கப்படும் அருவியாகும். ஆங்கில ‘யு’ எழுத்து வடிவில் காணப்படும் இந்த அருவி, 14 கிளை அருவிகளைக் கொண்டது. 82 மீட்டர் உயரமும், 150 மீட்டர் அகலமும், 700 மீட்டர் நீளமும் கொண்ட இந்த ‘பேயின் குரல்வளை’யில் இகுவாசு நதியின் நீரோட்டத்தில் பாதி அளவு பாய்கிறதாம். இந்த இடத்தில் அடிக்கும் சாரல், 490 அடியைத் தாண்டி விழுமாம்.
 
இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றி சுமார் 2000 தாவர வகைகளைக் கொண்ட ஒரு பெரிய மழைக் காடே உருவாகி உள்ளது. இதில் 66 வகை பாலூட்டிகளும், 436 வகை பறவைகளும், 38 ஊர்வன வகைகளும், 18 வகை நிலநீர் வாழ் உயிரினங்களும் காணப்படுகின்றன.

‘கிரேட் டஸ்கி ஸ்விஃப்ட்’ (Great dusky swift) என்ற பறவை, அருவிக்குப் பின்புறம் சென்று கூடுகட்டுமாம். நீரைக் கிழித்துக் கொண்டு கூட்டிற்குள் இந்தப் பறவைகள் செல்வதைக் காண முடியுமாம்.
 
அருவியின் அடிவாரத்தில் உலகின் மிகப் பெரிய நன்னீர் நீரடி  (underwater)   நீர்த்தேக்கம் உள்ளது. இதன் பெயர் ‘குவாரனி அக்விஃபர்’ (guarani aquifer). தாதுக்கள் நிரம்பிய இந்த நீரில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பது வழக்கம்.
 
இகுவாசு நீர்வீழ்ச்சியை உலக பாரம்பரியத் தலங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
 
 ஹெச்.தஸ்மிலா, கீழக்கரை.