ஈ உண்மைக் கதை



பூச்சிப் பூக்கள் 38


இந்த இன்டர்நெட் யுகத்தில் வாழும் ஜீவராசிகளில் ஆறில் ஐந்து மடங்கு பூச்சியினங் களே! முக விலாசம் தெரிந்த எண்ணற்ற பூச்சியினங்களில் ஆறு லட்சத்திற்கும் மேலானவை கணுக்காலிப் பூச்சிகள்தான். இவற்றுள்ளும் பல்வேறு ஜாக்கிரதைப் பேர்வழிகள் மானிட அருகாமையில் வாழ்ந்தாலும், அவனை எளிதில் நெருங்குவதில்லை. பூதாகரமான இந்த மனிதன் எதாவது டகால்டி வேலை செய்து தன்னைக் கொன்று விடுவானோ என்ற வழிவழி வரும் பாரம்பரிய குல எச்சரிக்கை. சின்னஞ்சிறு பூச்சிகளெனினும் உயிர் கவனம் ஜாஸ்தி. ஆனால் ஈக்களுக்கு மட்டும் முரட்டுத் தெனாவெட்டு!

கணினிகளைக் காலாவதி ஆக்கிவிட்டு, அதனினும் நுட்பமாய் சட்சட்டென்று அதிவேகத்தில் இயங்கும் ஈக்களைக் கொல்ல  முயல்பவர்களில் பெரும்பாலானோர் தங்களை மட்டுமே அடித்துக் கொள்வது தவிர்க்க முடியாத ஏமாற்றம். மனிதத் தாக்குதலிலிருந்து சாகசமாய் தப்பிக்கும் இந்த ஈக்கள், அப்படியொன்றும் ‘தப்பித்தோம்... பிழைத்தோம்...’ என்றெல்லாம் ஓடியொளிந்து கொள்வதில்லை. சில நொடி அவகாசத்திலேயே மறுபடியும் அதே மனிதனின் உடலில், அதே ஸ்பாட்டில் அமர்ந்து மறுபடி முஷ்டியை மடக்கிக் குறுகுறுக்கும். ராஜ தைரியம்!

ஈக்களை ‘வாமிட்டிங் இன்செக்ட்’ என்றே லோகமெங்கிலும் வாழும் மனிதர்கள் யாவரும் சொல்கின்றனர். இப்பூச்சிகள் தாம் உட்காரும் இடங்களில் எல்லாம், தாம் உட்கொண்ட அயிட்டங்களை கக்கிவிட்டுப் போவது இயல்புதான். கூடவே இவை தம் உடலில் ஒட்டியிருக்கும் கணக்கற்ற நச்சு நோய்க்கிருமிகளையும் போனஸாகக் கொடுக்கின்றன.

 ஈக்கள் இப்படி நல்கும் எண்ணற்ற நோய்களில் டைபாய்டு, காலரா, சால்மொனெல்லோசிஸ், டிசென்டரி, ஆப்தால்மியா மற்றும் ட்ராக்கோமா போன்றவை முக்கியமானவை. இந்த ஈக்கள் சுத்தமான இடத்திலிருந்தே கூட இருபது லட்சம் கிருமிகளை அலட்டிக் கொள்ளாமல் தம் உடலில் சுமந்து சென்று பரப்புவதாக ஆய்வுக் குறிப்புகள் சொல்கின்றன. அப்படியெனில் சுகாதார மற்ற சூழல்களிலிருந்து எத்தனை கிருமிகளைக் கொண்டு செல்லும் என்பதை யோசித்துப் பாருங்கள்! அப்புறம் தெரியும் உங்களுக்கு ஈக்களின் ஆகிருதி!

1898ல் அமெரிக்காவிற்கும் ஸ்பெயின் நாட்டிற்கும் இடையே நடந்த போரில், ஸ்பெயின் நாட்டுப் படைகளில், துப்பாக்கி ரவைகளுக்குப் பலியானதை விட ஈக்களால் நோயுற்று இறந்த வீரர்களின் எண்ணிக்கையே அதிகமாம். அதாவது, இவர்களது ராணுவ முகாம்களில் இருபது சதவீத வீரர்களின் இறப்பிற்கு ஈக்களால் பரவிய டைபாய்டு காய்ச்சல்தான் காரணம். இதேபோல் தென் ஆப்ரிக்காவில் நடந்த போயர் சண்டையின்போது முப்பது சதவீத வீரர்களைக் கொன்ற டைபாய்டு நோய்கும் இந்த ஈக்களே பிரதான காரணகர்த்தா!

நமக்கு நேரடியாக நியூசென்ஸ் கொடுக்கும் பூச்சி, இந்த ஈக்கள்தான். ஜாலியாக நாம் எதாவது ஒரு ட்ரிங்ஸை குடிக்க முயற்சிக்கையில் டம்ளரின் விளிம்பில் அமர்ந்து கொண்டு இந்த ஈக்கள் சிரிப்பதுண்டு. சில விசேஷமான விருந்தினர் நிறைந்த மகிழ்ச்சியான தருணத்தில், இந்த ஈக்கள் டைனிங் டேபிளில் எண்ணற்ற சகாக்களுடன் ரெய்டு நடத்தி எல்லோரையும் முகம் சுளிக்க வைத்து விடுவதுண்டு. நாசூக்கு தெரியாத நச்சுப்பூச்சிகள்!

ஈ என்னும் இந்த ஜீவராசி இப்பூமியில் எப்போது தோன்றியது என்பது பற்றிய ஆய்வுகள் ஏராளம். எனினும் இதில் மிகச்சரியான ஆதாரங்கள் எதுவும் ஆணித்தரமாய்க் கிடைக்கவில்லை. டிப்தேரா என்னும் பூச்சியின வகைப்பாடு மிகவும் பழமை வாய்ந்தது. இந்தப் பழமையினத்தைச் சேர்ந்த ஈக்கள், அதன் கடைக் கோடியில் நிகழ்ந்த க்ளைமாக்ஸ் பகுதியில்தான் இப்பூமி யில் முதலில் உதித்திருக்கின்றன என்று கண்டறியப்படுள்ளது. அதாவது, 65 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய செனோஸாயிக் யுகத்தில்தான் இவற்றின் பூமிப்பிரசன்னம்!

இப்பூமியில் எப்பகுதியில் ஆதி முதலில் ஈக்கள் தோன்றின என்கின்ற சங்கதி எல்லாம் ஆராய்வில் வெகுவாக அறியப்பட்டுள்ளது. உயிரினப் புவியியல் அமைப்பில், யூரேசியாவின் வடக்கு இமயமலைப் பகுதியோடு வட ஆப்ரிக்கா மற்றும் அரேபிய தீபகற்பத்தை உள்ளடக்கிய வெப்ப மண்டலப் பிரதேசங்களில்தான் ஈக்களின் விதை ஆரம்பத்தில் துளிர்த்திருக்கிறது. இதன் பிறகு மானிட அருகாமையை எளிதில் எதிர் கொள்ளும் இப்பூச்சிகள், தம் வாழ்வியல் நிமித்தம் மனிதனின் குடியிருப்புகளை ஒட்டியே வாழப் பழகிக் கொண்டன.

உலகில் மனிதன் வாழும் இடங்களிலெல்லாம்  அது உயர் வெப்பம் நிலவும் பாலைப் பிரதேசமாகட்டும், அல்லது ஊசியாய்க் குத்தும் குளிர் தேசங்கள் ஆகட்டும்... எந்த இடத்தையும் விட்டு வைக்காமல்  இவை டேரா போட்டு விடுகின்றன. சைக்ளோர்ரஃபா என்னும் துணை வகுப்பையும் மியூஸிடே என்னும் குடும்பத்தையும் சேர்ந்த ஈக்களில் மூன்று பார்ட்டிகள் இருக்கின்றன.

கேஷுவலாக நம் வீட்டிற்குள் ஆஜராகும் டர்ட்டி ஈக்களுக்கு முதுகில் கருப்பு வரிகள் இருக்கும். கொட்டில் புறக்கடை போன்ற வெளிப்புறங்களில் இருக்கும் சற்றே பெரிய ஈக்களுக்கு ‘லெஸ்ஸர் ஈ’ என்று பொருந்தாத பெயர். இவற்றிற்குக் கொஞ்சம் கவர்ச்சியான மஞ்சள் நிறத்தில் முதுகுவரி!

மூன்றாவது பார்ட்டிக்கு மானிட அருகாமை பிடிக்குமெனி னும் உத்தரவின்றி அவை வீட்டிற்குள் பிரவேசிப்பதில்லை. ஜோராய்க் குளிரும் கூதிர் காலங்களில் மட்டும் கூதல் பொறுக்க முடியாமல் வெதுவெதுப்பிற்காக வீடுகளுக்குள் தலைகாட்டுவதுண்டு. ‘ஃபேஸ் ஈ’ எனப் பெயர் கொண்ட இவ்வகை ஈக்களும் லோகமெங்கிலும் மனித சஞ்சாரமுள்ள இடமனைத்திலும் தேனீக்களாய்த் திரிந்து கொண்டிருக்கின்றன. பிஸி இன்செக்ட்!

இதில் முதலிரண்டு பார்ட்டிகளும் ரெஸ்ட் எடுக்கும்போது தம் இறக்கைகளை ஹாயாக பக்க வாட்டில் விரித்து வைத்திருக்கும். கூச்ச சுபாவமுள்ள ‘ஃபேஸ் ஈக்கள்’ மட்டும் அடக்கத்தோடு தம் இறக்கை உடையை உடலோடு ஒடுக்கமாய்ப் போர்த்திக் கொண்டிருக்கும். எல்லா வகை ஈக்களுமே எஞ்சின் வேகத்தில் படா சுறுசுறுப்பு. எப்போதும் தமது ஃபேவரைட் பஸ்ஸிங் இசையொலியை எழுப்பியவாறு எதையாவது விஞ்ஞானி போல் ஓய்வில்லாமல் தொடர்ந்து ஆராய்ச்சி பண்ணிக் கொண்டேயிருக்கும். இலக்கற்ற தேடல்!

(தொடரும்...)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்