வழுக்கைத் தலையில் முடி வளரும்!



வந்தாச்சு புது மருந்து

இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும் உள்ள ‘தலை’யாய பிரச்னை தலைமுடி உதிர்வதுதான். தலைமுடி பாரமரிப்புக்காக காலங்காலமாக நாம் பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. முன்பு 60 வயதுக்கு மேல் விழுந்த வழுக்கை, இப்போது 30 வயதிலேயே விழுகிறது. முன்பெல்லாம் 40 வயதுக்கு மேல்தான் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். இப்போதோ 20 வயதிலேயே நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.

இளநரையைக் குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இப்போதைக்கு நரைமுடியில் கறுப்புச் சாயம் பூசித்தான் மறைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், வழுக்கையை மாற்ற   பல சிகிச்சைகள் ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. உதாரணத்துக்கு மினாக்சிடில் மருந்து, முடி மாற்றுச் சிகிச்சை, பி.ஆர்.பி. (Platelet   Rich  Plasma )  சிகிச்சை.

 இவற்றையெல்லாம் மிஞ்சும்படியாக, ஒரே ஒரு ஊசியில் வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளரச் செய்கின்ற புதிய மருந்து ஒன்றை அமெரிக்காவில் இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். அதைச் சொல்வதற்கு முன்பு முடி பற்றிய அடிப்படை அறிவியலைக் கொஞ்சம் பார்த்துவிடுவோம்!

முடி என்பது கரோட்டீன் எனும் புரதத்தால் ஆனது. ‘ஃபாலிக்கிள்’ எனும் ரோமக்காலில் இருந்து வளரக்கூடியது. நம் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கின்றன. தினமும் சராசரியாக 100 முடிகள் உதிர்வது இயற்கை. முடியின் வளர்ச்சி 3 பருவங்களைக் கொண்டது. ‘அனாஜன்’ (Anagen) என்பது வளரும் பருவம். ஒரு முடியானது தினமும் சராசரியாக அரை மில்லி மீட்டர் நீளத்துக்கு வளர்கிறது. இது 3 முதல் 7 வருடங்கள் வரை நீடிக்கும்.

அடுத்தது ‘கெட்டாஜன்’ (Catagen) பருவம். இதில் முடி இயற்கையாகவே உதிர ஆரம்பிக்கும். இது 2 வாரம் நீடிக்கும். மூன்றாவது பருவம் ‘டீலாஜன்’ (Telogen). இது முடி ஓய்வெடுக்கும் பருவம். இது சுமார் 2 முதல் 4 மாதங்கள் வரை நீடிக்கும். இந்தச் சுழற்சி முடிந்து, மீண்டும் வளர்ச்சிப் பருவத்துக்குத் திரும்பும். முடி உதிர்ந்த இடத்தில் புதிதாக வேறு முடி முளைக்கும்.

தலைமுடி ஒவ்வொன்றும் ஒவ்வொரு பருவத்தில் இருக்கும். பெரும்பாலான முடிகள் வளரும் பருவத்தில் இருந்தால், முடி தொடர்ந்து வளரும். உதிரும் பருவத்தில் அதிக முடிகள் இருந்தால், முடி கொட்டும். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முளைக்கா விட்டால் வழுக்கை விழும். உடல் வளர்ச்சியின் நியதிப்படி வயது ஆக ஆக செல்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்வதை தாமதப்படுத்தும்.

இதன் விளைவால், புதிய செல்களின் உற்பத்தி குறையும். இது தலைமுடிக்கும் பொருந்தும். ஒரு கட்டத்தில் முடியின் வளர்ச்சியே நின்றுவிடும். முதுமையில் வழுக்கை விழுவது இப்படித்தான். சிலருக்கு பரம்பரை காரணமாக வழுக்கை விழும். இதை மாற்றமுடியாது. டைஹைட்ரோ டெஸ்டோஸ்டீரோன் (Dihydro testosterone) என்ற ஹார்மோன் அதிகமாகச் சுரந்தால் வழுக்கை விழும்.

சுயதடுப்பாற்றல் கோளாறு உள்ளவர்களுக்கும் தலையில் வழுக்கை விழுகிறது. இதைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும். உடலுக்குத் துன்பம் தரும் நோய்க் கிருமிகளுக்கு எதிராக, ‘எதிர்ப்பு அணுக்கள்’   (Antibodies)   எனும் சிப்பாய்களை அனுப்பி, அந்த எதிரிகளை அழித்து நம்மைக் காப்பது நமது நோய் எதிர்ப்பு சக்தி. சமயங்களில் நம் உடலில் இருக்கும் உறுப்புகளையே தன் எதிரியாக நினைத்துச் செயல்பட்டுவிடும்.

அப்படித்தான் சிலபேருக்குத் தலைமுடி வளர்கின்ற ரோமக்கால்களையே (Hair Follicle) தன் எதிரியாக நினைத்து அழித்துவிடுகிறது. அப்போது அந்த இடங்களில் வழுக்கை விழுகிறது. தொடக்கத்தில் பழைய ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு இந்த வழுக்கை காணப்படும். போகப் போக இது உள்ளங்கை அகலத்துக்குப் பரவிவிடும். இதற்கு ‘அலோபீசியா ஏரியேட்டா’ என்று பெயர்.

உடல் தன்னைத் தானே கெடுத்துக்கொண்டு இப்படி ஒரு நோயை ஏற்படுத்துவதால், இதை ‘சுயதடுப்பாற்றல் தரும் நோய்’ (Auto Immune Disease) என்கிறார்கள். இந்த வழியில் வழுக்கை விழுந்தால், மீண்டும் முடி வளர வாய்ப்புள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். இந்தக் குழுவின் தலைவர் ரபீல் கிளைன்ஸ் மற்றும் பேராசிரியர் ஏஞ்சலா எம்.கிறிஸ்டியானா சொல்வதைக் கேட்போம்.

‘‘அலோபீசியா ஏரியேட்டா’ (Alopecia Areata) என்ற இந்த வழுக்கையானது எந்த வயதிலும் வரலாம். ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. இதுவரை ஸ்டீராய்டு ஊசிகளையும் களிம்பு களையும்தான் இதற்குப் பயன்படுத்தி வந்தோம். ஆனால் எல்லோருக்குமே இவை பலன் கொடுக்கவில்லை. ஆக, புது மருந்து தேடத் தொடங்கினோம். நாங்கள் சுண்டெலிகளிடம் ஆராய்ச்சியைத் தொடங்கி அவற்றின் ரோமக்கால்களை அழிக்கின்ற செல்களை முதலில் ஆராய்ந்தோம்.

நோய்த் தடுப்பாற்றல் தருகின்ற தைமஸ் லிம்போசைட்ஸ் அணுக்களில் குறிப்பிட்ட சில மட்டும் தவறுதலாக ரோமக்கால் வேர்களை எதிரியாக நினைத்து அழித்துவிடுவதால் இது நிகழ்கிறது என்பதைத் தெரிந்து கொண்டோம். மேலும் இவை எப்படி ரோமக்கால் வேர்களை அழிக்கின்றன என்ற சூட்சுமத்தையும் கண்டுபிடித்தோம்.

ருக்சோலிடினிப் (Ruxolitinib), டோஃபாசிடினிப் (Tofacitinib) என்ற மருந்துகளை வழுக்கையில் செலுத்தினோம். இவை தைமஸ் அணுக்கள் ரோமக்கால் வேர்களை அழிக்கின்ற வழிகளை அடைத்துடுவதால், வழுக்கை விழுவது தடுக்கப்படுகிறது.

ஏற்கனவே வழுக்கை விழுந்த இடத்தில் 5 மாதங்களில் மீண்டும் முடி முளைக்க ஆரம்பிக்கிறது. இது எங்களுக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றி. இதைத் தொடர்ந்து சமீபத்தில் மூன்று பேருக்கு இந்த மருந்தைக் கொடுத்துப் பார்த்தோம். மூவருக்குமே சரியாக 5 மாதம் கழித்து வழுக்கையில் முடி முளைத்து விட்டது’’ என்றார்கள் சாதனை செய்த பெருமிதத்துடன். அது சரி, நாளைக்கே போய் கடைகளில் ‘இந்த மருந்து இருக்கா?’ என்று கேட்காதீர்கள். இது இந்தியாவுக்கு வர இன்னும் சில வருடங்கள் ஆகும்!   
 
(இன்னும் இருக்கு)

டாக்டர் கு.கணேசன்