மலையேற்றச் சிறுவன்



எந்த வயதில் ஒரு மலை ஏறலாம்? யோசியுங்கள். அதற்கு முன் புனேவைச் சேர்ந்த சிறுவன் அத்வைத் பார்த்தியாவின் கதையைப் பார்ப்போம். மலை ஏறுவதற்கு வயது ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபித்திருக்கும் இச் சிறுவனின் வயது 9.அவன் ஏறிய மலை கிளிமஞ்சாரோ. ஆப்பிரிக்காவின்  டான்சானியாவில் வீற்றிருக்கும் ஒரு மலை இது. ஆப்பிரிக்க மலைகளிலேயே உயர்ந்தது இதுதான். கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் உயரத்தில்  இருக்கும் கிளிமஞ்சாரோவின் உயரம் 4900 மீட்டர். இந்த மலையில் ஏறி அதன் உச்சியை அடைந்து சாதனை புரிந்திருக்கிறான் அத்வைத். இதற்காக  அவன் எடுத்துக்கொண்ட நாட்கள் ஏழு. கடுங்குளிர், பனிப்பொழிவைத் தாங்கிக்கொண்டு இச்சாதனையைப் படைத்திருக்கிறான் அத்வைத்.

மலை ஏறுவதற்கு முன்பாக இரண்டு மாதங்கள் கடுமையாக பயிற்சி செய்துள்ளான். இடைவிடாமல் தினமும் ஒரு மணி நேரம் நீச்சல், கால்பந்து,  டென்னிஸ், கிரிக்கெட் விளையாடுதலும் இந்தப் பயிற்சியில் அடங்கும். அத்துடன் தாண்டித் தாண்டி ஓடுதல், 100 மாடிகளைக் கொண்ட  படிக்கட்டுகளில் ஏறுதலும் இதில் அடக்கம்.சமிர் என்ற மலேயேற்ற பயிற்சியாளரின் கண்காணிப்பில், வழிகாட்டுதலில்தான் கிளிமாஞ்சாரோ சாகச  பயணத் தினை நிறைவு செய்திருக்கிறான் அத்வைத். இது ஒன்றும் அத்வைத்துக்கு முதல் தடவை அல்ல. அவனுக்கு 6 வயதாக இருந்தபோது  எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் ஏறி அனைவரையும் விழி பிதுங்கச் செய்திருக்கிறான். அத்வைத் மலையேறும்போது அவனின் தாயாரும் உடன் வருகிறார். ஆனால், அவரால் அத்வைத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

‘‘கிளிமஞ்சாரோவில் ஏறியது கடினமாகவும், அதே நேரத்தில் ஃபன்னாகவும் இருந்தது. எவரெஸ்ட் பேஸ் கேம்ப்பில் ஏறியபோது மர வீட்டில்  தங்கினோம். ஆனால், கிளிமஞ்சாரோவில் ஏறியபோது கொட்டகையில் தங்க வேண்டிய நிலை. இந்த அனுபவம் நன்றாக இருந்தது. பனி சூழ்ந்த சூழல்  ரொம்பவே அழகாக இருந்தது...’’ என்கிற அத்வைத்திற்கு உலகிலுள்ள எல்லா மலைகளிலும் ஏற வேண்டும் என்பது கனவு.