கின்னஸ் சாதனை



இன்றைய தலைமுறை இழந்து வருகின்ற முக்கிய பழக்கம் புத்தக வாசிப்பு. முகநூல், டுவிட்டர் என்று சமூக வலைத்தளங்களிலேயே பலரின் வாசிப்பு பழக்கம் முடிந்துவிடுகிறது. கடைக்குப் போய் காசு செலவு பண்ணி புத்தகம் வாங்கிப் படிக்கணுமா? என்ற எண்ணமும்  வாசிப்பு குறைந்ததற்கு முக்கிய காரணம். இந்நிலையில் ஆன்லைனில் உங்களுக்கு விருப்பமான புத்தகத்தை ஆர்டர் செய்தால் போதும். உங்கள் வீடு  தேடி வந்துவிடும்.  அதைப் படித்து முடித்த பிறகு ஆன்லைன் வழியாகவே திருப்பிக் கொடுத்து விடலாம். உங்கள் வீடு தேடி வந்து புத்தகத்தைப்  பெற்றுக்கொள்வார்கள். இந்த சேவை எல்லாமுமே இலவசமாக. ஆனால், இந்தச் சேவையைப் பெற மதுரை, கோமதிபுரத்தில் இயங்கி வரும்  ஆன்லைன் நூலகமான ‘ரீடபிட்’டில் சந்தா செலுத்தி உறுப்பினராக வேண்டும்.

சமீபத்தில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மாநாடு நடந்தது. அதில் ஒரு ஸ்டால் மக்கள்  கூட்டத்தால் அலைமோதியது. அது ‘ரீடபிட்’ நூலகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான ஸ்டால் என்பது தெரிய வரவே பல மணி நேரம் பிடித்தது.  காரணம், மக்கள் கூட்டத்தில் அந்த ஸ்டால் மூழ்கிவிட்டது. காலை 9 மணிக்கு ஆரம்பித்த ஆன்லைன் உறுப்பினர்  பதிவு இரவு 9 மணிக்குத்தான்  முடிந்தது. 12 மணி நேரத்தில் 2,210 பேர் நூலக உறுப்பினர்களாகப் பதிவு செய்து அசத்திவிட்டனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் புதிதாக நூலக  உறுப்பினர்களாக பதிவு செய்தது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் பதிவாகிவிட்டது. இதற்கு முன் இந்தூரில் உள்ள ஒரு நூலகத்தில் 12 மணி  நேரத்தில் 1,922 பேர் உறுப்பினராகச் சேர்ந்ததுதான் சாதனையாக இருந்துவந்தது.

‘‘சில மாதங்களுக்கு முன்பு கல்லூரி மாணவர்களுடன்  கலந்துரையாடினேன். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளி மற்றும் கல்லூரி  பாடப்புத்தகங்களைத் தாண்டி வேற எந்தப் புத்தகங்களையும் படிக்கவில்லை. அப்படி படிப்பதற்கான அவசியத்தையும் அவர்கள் கண்டடையவில்லை.  நிறைய மாணவர்கள் வாசிப்பு பழக்கத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன். இதுதான் இந்த ஆன்லைன் நூலகம் உருவாக அடித்தள மிட்டது.  பொதுமக்களிடமிருந்து கவனத்தை பெறவும், வாசிப்பு பழக்கத்தைத் தூண்டவும்தான் இந்தச் சாதனைக்கான முயற்சியை மேற்கொண்டோம்...’’ என்கிறார்  இந்த நூலகத்தின் நிர்வாகியான கோவர்த்தனன்.