பறவைகளைக் குறிவைக்கும் ஒளி மாசுபாடு



காற்று, நிலம், தண்ணீர் மாசுபாடுபோல இப்போது புதிதாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறது ஒளி மாசுபாடு. பொருத்தமற்ற மற்றும் அதிகப்படியான  செயற்கை ஒளிகளால் இயற்கையின் வெளிச்சத்தைக் குறையச்செய்வதுதான் ஒளி மாசுபாடு.  பல வருடங்களாக ஒளி மாசுபாடு  இருந்தாலும் இப்போதுதான் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. கடந்த வருடத்தில் மட்டும் ஒளி மாசுபாடு 4.8% அதிகரித்துள்ளது.முன்பெல்லாம் இரவானதும்  ஒவ்வொருவரும் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைக் கண்டு அகமகிழ்வோம். இப்போது இரவு இரவாக இல்லை.  மின்விளக்குகளால் இரவும் பகலைப் போல மாறிவிட்டது. செயற்கையான ஒளியால் பிரபஞ்சத்தின் அழகை தரிசிக்க மறந்துவிடுவது ஒரு பக்கம்  இருந்தாலும், இன்னொரு பக்கம் அதனால் உண்டாகும்

ஒளி மாசுபாட்டினால் மனித னுக்கும், வன உயிரினங்களுக்கும், இயற்கைக்கும் ஆபத்து. குறிப்பாக பறவைகளின் உயிரைப் பறிக்கிறது இந்த ஒளி  மாசுபாடு.கண்களைக் கூசச் செய்யும் விளம்பரப் பலகைகளின் விளக்குகள், ஆடம்பர அலங்கார விளக்குகள் போன்றவற்றால் அதிகளவில் ஒளி  வீணடிக்கப்படுகிறது. இப்படி வீணாகும் ஒளியானது சுற்றியுள்ள இடங் களில் பிரதிபலித்து சிதறடிக் கப்படுகிறது. இதனால் சில நேரங்களில்  பொருட்கள் மற்றும் இடங்களைப் பிரித்துப் பார்க்க முடியாத பார்வைப் பிரச்சினை ஏற்படுகிறது. தவிர, விலங்குகளுக்கும் இரவு எது? பகல் எது? என்று  பிரித்துப் பார்க்க முடியாத ஒரு நிலை உண்டாகிறது.அதனால் விலங்குகளின் வாழ்க்கை சுழற்சி பெருமளவில் பாதிக்கப்படுகிறது.

அதிக திறன் கொண்ட மின் விளக்குகள், பகல் நேரத்தில் கூட தேவையில்லாமல் மின் விளக்குகளை உபயோகப்படுத்துதல், விளக்குகளை சரி யாக  அணைக்காமல் இருப்பது  போன்றவை ஒளிமாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள். தவிர, இப்போது உலகம் முழுவதும் மின்சார சேமிப்பு பற்றிய  விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக எல்லா இடங்களிலும் எல்இடி விளக்குகள் பெருகிவிட்டன. இந்த எல்இடி விளக்குகள் இயற்கையின்  சமநிலையைக் குலைக்கத் தொடங்கியுள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள். இன்று பலரும் தூக்கம்  வராமல்  தவிக்கிறார்கள். இதற்கு ஒளி  மாசுபாடுதான்  முக்கிய காரணம். மனச்சோர்வு,  நீரிழிவு போன்றவற்றுக்கும் மறைமுகமான காரணமாக இருப்பது ஒளி மாசுபாடுதான். முடிந்தவரை  இரவை இரவாக வைத்திருப்பதுதான் ஒளி மாசுபாட்டைக் கட்டுப்படுத்த ஒரே வழி.