ஹமாம் வழங்கிய தினகரன் கொலு கோலாகல கொண்டாட்டம்!





9  அறைகளில் ஓஹோ கொலு!

“மூன்று தலைமுறைகளா வருஷம் தவறாம கொலு வெச்சிட்டு வர்ற குடும்பம் எங்களுது. தினகரன் பேப்பர்ல கொலுப்போட்டி அறிவிப்பைப் பார்த்து கலந்துக்க அழைப்பு அனுப்பினேன். புதுசா எதாவது முயற்சி பண்ணணும்னு தோணுச்சு. அது சமூகம் சார்ந்தும் இருக்கணும்னு நினைச்சோம். வீட்டுல 9 அறைகளை ஒதுக்கினோம். பெண்கள் முன்னேற்றம், குழந்தைத் தொழிலாளர் முறை, ரத்த தானம், 108 ஆம்பு லன்ஸ் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்துற விதமா ஒரு அறை முழுவதும் பொம்மை கள் வெச்சோம். இரண்டாவது அறையில், திருவண்ணாமலை கிரிவலம், ரமண மகரிஷி வாழ்ந்த விருபக்ஷா குகை செட்டப்.

மூன்றாவது அறையில் 70 ஆண்டுகள் பழமையான பாத்திரங்களை காட்சிக்கு வெச்சோம். நான்காவது அறையில், 27 நட்சத்திரங்களுக்கும் வணங்க வேண்டிய தெய்வங்களுடைய பொம்மைகளை வெச்சிருந்தோம். ஐந்தாவது அறையில், சதுரகிரி மலை செட்டப்ல 18 சித்தர்களுடைய உருவத்தையும் வெச்சிருந்தோம். சிட்டி வாழ்க்கை முறை எப்படியிருக்குங்கிறதை வெளிப்படுத்துற விதமா திரும்பின திசையெங்கும் கடைகளா நிறைஞ்சிருக்கிற மாதிரி ஆறாவது அறையில் வெச்சிருந்தோம். ஏழாவது அறையில், ஸ்னோ வேர்ல்டு வெக்கலாம்னு நினைச்சு பனிக்குப் பதிலா பஞ்சு வெக்காம, கெமிக்கல்ஸ் மூலமா உண்மையான பனி மாதிரியான செட்டப் செஞ்சோம்.

எட்டாவது அறை முழுக்க கிருஷ்ணர்தான். யானையை வதம் பண்ணினது, கோவர்த்தனகிரியை தூக்கியிருக்கிறது, குசேலன் சந்திப்பு,  கீதாசாரம்னு... ஒன்பதாவது அறையில் குழந்தைகளுக்கான அறநெறிக்கதைகள்... காக்கா கதை, மனுநீதிச்சோழன் கதை, பொன் முட்டையிடும் வாத்து, புறா - வேடன் கதைகளை சொல்ற மாதிரி பொம்மைகளை சேகரிச்சு வெச்சிருந்தோம்.

5 படி நிலைகள்ல வழக்கமான கொலு வெச்சிருந்தாலும் அதுக்குள்ள 70 ஆண்டுகள் பழமையான பொம்மைகளை வெச்சிருந்தோம். எங்க கொலு பத்தி கேள்விப்பட்டு 500 பேருக்கும் மேல் வந்து பார்த்துட்டு போயிருக்காங்க. இது பல நாள் உழைப்பு, என்னோட வேலை தொடர்பா வெளிநாடுகளுக்கு போறப்பவெல்லாம், அங்க கிடைக்கக்கூடிய பொம்மைகளை வாங்கிட்டு வருவேன். கிடைக்காத பொம்மைகளை நாங்களே உருவாக்கினோம்.

வேலை முடிஞ்சு வீட்டுக்கு வரவே இரவு 10 மணி ஆகிடும். அதுக்கு மேல தூங்காம கண் முழிச்சுதான் இந்த வேலைகளையெல்லாம் செஞ்சோம். இப்படி முயற்சி பண்ணினதுக்கு அங்கீகாரம் கொடுக்கிற மாதிரி எனக்கு முதல் பரிசு கிடைச்சதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு!” என்கிறார் லலிதா.

- கி.ச.திலீபன்