அம்மாதான் என் உலகம்!



நடிகர் சாந்தனு

‘‘எல்லா வீடுகளையும் மாதிரிதான் எங்க வீடும். பொண்ணு அப்பாவுக்கு செல்லம். பையன் அம்மா வுக்கு செல்லம். நான் அம்மா செல்லம்...’’ தன் அம்மா பூர்ணிமா பாக்யராஜ் பற்றி பேசத் தொடங்குவதற்கு முன், நடிகர் சாந்தனு கொடுத்த ஓப்பனிங் பஞ்ச் இது. பூர்ணிமாவை நடிகையாக நமக்கெல் லாம் தெரியும். எண்பதுகளில் முன்னணி நடிகையாக நம்மை வசீகரித்தவர். பின்னர் கே.பாக்யராஜை திருமணம் செய்து கொண்டு, நடிப்பிலிருந்து விலகி, முழுநேர இல்லத்தரசியாகி, ஊடகத்தின் பார்வையிலிருந்தே விலகினார்.தன் அம்மாவைப் பற்றிய சாந்தனுவின் பேச்சு, நடிகையாக மட்டுமே அறிந்திருந்த பூர்ணிமாவின் இன்னொரு முகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அந்த முகம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. அதுமட்டுமல்ல... தாயாக பூர்ணிமாவின் மற்றொரு பரிமாணம்... மனசை நெகிழவும் செய்கிறது!

‘‘என் அம்மா ரொம்பவே பாவம். அவங்க பஞ்ச்சிங் பேக் மாதிரி... ஒரு பக்கம் என் அப்பாவும் திட்டுவாரு... இன்னொரு பக்கம் நானும் திட்டுவேன். நான் ஏதாவது நல்லதாப் பண்ணினா, ‘என் பையன்’னு பெருமைப்பட்டுக்குவார் அப்பா. ஏதாவது தப்பு பண்ணிட்டா, ‘உன் பையன் இப்படிப் பண்ணிட்டான்’னு பழியை அம்மா மேல் திருப்புவார். அம்மா அதைப் பத்தி எல்லாம் கவலையே படமாட்டாங்க.எங்க ஃபேமிலி பேலன்ஸ்டா இருக்க என் அம்மாதான் காரணம்... அம்மாவோட பிரதர் ஃபேமிலி, எங்க ஃபேமிலின்னு நாங்க ஜாயின்ட் ஃபேமிலியா மட்டுமில்லாம பெரிய ஃபேமிலியாவும் இருக்கோம். அது உடையாம கொண்டு போறது என் அம்மாதான்... அம்மாவோட பொறுமைதான் காரணம்.

நான் குழந்தையா இருந்தப்ப அப்பா பீக்ல இருந்தார். அதனால் நான் தூங்கிக்கிட்டிருக்கும்போது ஷூட்டிங்குக்கு கிளம்பிடு வார். நைட் அவர் திரும்பி வரும்போது நான் தூங்கிக்கிட்டிருப்பேன். அதனால என் சைல்ட்ஹுட் பூரா அம்மா கூடத்தான் அதிகமா இருந்தேன். அதனாலோ என்னவோ, அம்மா எனக்கு ஃப்ரண்ட் மாதிரி ஆகிட்டாங்க. அப்பவும் இப்பவும் அம்மா எனக்கு ஃப்ரண்ட்தான். எல்லா விஷயத்தையும் என் அம்மாக்கிட்ட நான் ஷேர் பண்ணியிருக்கேன். அவங்கக்கிட்ட  எதையுமே மறைச்சதில்லை.எப்பவாவது லேட்நைட் பார்ட்டிக்கு போகணும்னா அம்மாக்கிட்டதான் பர்மிஷன் கேப்பேன்.

அப்பாவுக்கு தெரிஞ்சாத் திட்டு விழும்னு தெரிஞ்சும் என் சந்தோஷத்துக்காக, ‘சரி’ன்னு போகச் சொல்லிடுவாங்க. நான் பார்ட்டியில இருக்கிறப்ப அம்மாகிட்டேருந்து போன் வரும்... ‘திடீர்னு அப்பா வந்திட்டாரு... என்ன பதில் சொல்றது’ன்னு என்கிட்டேயே அப்பாவியாக் கேப்பாங்க. ‘எதையாவது சொல்லி சமாளிச்சுக்கம்மா’ன்னு சொல்லுவேன். எனக்காக அவங்க அவஸ்தைப்படுவாங்க. இப்படி அடிக்கடி நடக்கும்!

ஸ்கூல் டேஸ்ல நான் பயங்கரமான வாலு. ஸ்கூல்ல நான் பண்ணுற சேட்டைகளினால, ‘பேரன்ட்ஸை கூட்டிட்டு வா’ன்னு சொல்லிடுவாங்க. இந்த பிரச்னையினால ஒருநாள் விட்டு ஒருநாள் அம்மா ஸ்கூல்ல வந்து நிப்பாங்க. ஒரு தடவை, பியூனை ஒரு ரூம்ல வச்சு பூட்டிட்டேன். அது பெரிய பிரச்னையாகி, அப்புறம் அம்மா வந்துதான் தீர்த்து வச்சாங்க. ஸ்கூல் டேஸ்ல நான் பண்ணின வால்தனங் களை வச்சு ஒரு சினிமாவே எடுக்கலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கு!ஒரு தடவை... ஃபேமிலியோட பாரீஸ் போயிருந்தோம். அங்கே அப்பாவோட ஃப்ரண்ட் ஃபேமிலி இருக்காங்க. அவங்க வீட்டுக்குப் போனப்ப, அங்கே காஸ்ட்லியான பெயின்ட்டிங் ஒண்ணு இருந்தது. அதை நான் கீழே போட்டு உடைச்சுட்டேன். அப்பாவுக்கு செம கோபம்... பெல்ட்டால அடிக்க வந்துட்டார். அம்மாதான் குறுக்கே புகுந்து தடுத்தாங்க.

இப்படி பல தடவை என்னை அம்மாதான் காப்பாத்தி இருக்காங்க.‘வேட்டிய மடிச்சுக் கட்டு’ படத்திலதான் நான் முதன்முதல்ல நடிச்சேன். அந்தப் படத்தில என்னை நடிக்க வைக்கிறதைப் பத்தி அப்பா, அம்மாக்கிட்டதான் முதல்ல  கேட்டார். ‘நடிக்கப் போனா படிப்பு பாதிக்கப்படும்... எக்ஸாம் வேற வருதே’ன்னு அம்மா
தயங்கினாங்க. எக்ஸாம் முடிஞ்ச பிறகு ஷூட்டிங் வச்சுக்கலாம்னு சொன்னப்புறம்தான் அம்மா ‘ஓகே’ சொன்னாங்க. என் முதல் படத்தைப் பார்த்துட்டு அம்மாவுக்கு தாங்க முடியாத சந்தோஷம். அதே நேரம் நிறைய டிப்ஸும் கொடுத்தாங்க. அப்பா பெரிசா குறை சொல்ல மாட்டார். நான் எப்படி நடிக்கிறேன்னு மட்டும்தான் ஒரு டைரக்டரோட பார்வையில பார்ப்பார். அம்மா அப்படி இல்லை... ஒரு அம்மாவாகவும் ஒரு நடிகையாவும் கருத்து சொல்வாங்க. ‘இந்த காஸ்ட்யூம் உனக்கு நல்லா இருக்கு, நல்லா இல்லை... இந்த ஷாட்ல நீ அழகா இருந்தே... இந்த புரஃபைல் ஷாட்ல நீ இப்படி நிக்கணும்... இப்படி பாக்கணும்’னு நிறைய சஜஷன்ஸ் சொல்வாங்க.

அம்மா கூட சண்டை போடாத நாளே இல்லை. யார் மேல கோபம்னாலும் அதை அம்மா மேலதான காட்டுவேன். காரணமே இல்லாம திட்டுனா யார்தான் பொறுத்துக்குவாங்க? என் அம்மா பொறுத்துக்குவாங்க. திருப்பித் திட்டமாட்டாங்க. ஆனா, கண் கலங்கிடுவாங்க. அம்மா கண் கலங்கினதைப் பார்த்த உடனே என் கோபம் போன இடம் தெரியாது. உடனே அம்மாகிட்ட ஸாரி கேட்பேன்.நான் பயங்கர கோபக்காரன். இந்த கோபம் என் அப்பாக்கிட்டேருந்து எனக்கு வந்ததுன்னு சொல்லலாம். அதே நேரம், எனக்கு பொறுமையும் அதிகம். நான் ரொம்பவும் சென்சிட்டிவ். சின்ன விஷயத்துக்கெல்லாம் ஹர்ட்டாகிடுவேன். இதெல்லாம் அம்மாகிட்டேருந்து வந்தது. அப்புறம்... எனக்கு உள்ள சாஃப்ட் நேச்சரும் அம்மாகிட்டேருந்து வந்ததுன்னு சொல்லலாம்.

என் அம்மாவும் பாட்டியும் கிளாஸிகல் டான்ஸர்ஸ். ஃப்ரண்ட்ஸ் வீட்டுல சங்கீத் நடக்கிறப்ப அம்மாவை டான்ஸ் பண்ணச் சொல்வோம். அவங்களும் ஆடுவாங்க. அவங்களோட டான்ஸ் பழைய காலத்து ஸ்டைல்ல இருக்கும். அதை வச்சு அவங்களை செமத்தியா ஓட்டுவேன். அவங்க பொய்யா கண்ணைக் கசக்குவாங்க. நான் போய் சமாதானப்படுத்துவேன்.நான் நடிச்ச படங்கள் பெரிசா ஹிட்டாகலைன்னாலும், ‘சாந்தனு நல்ல டான்சர்’னு பேர் வாங்கி இருக்கேன். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் ஒரு காட்சியில் நான் டான்ஸ் பண்ணியிருக்கேன். அதை ஷூட் பண்ணினப்ப பார்த்திபன் சார் பாராட்டினார். ‘ரௌடி ரத்தோர்’ ஹிந்தி படத்துக்கு டான்ஸ் கம்போஸ் பண்ணினப்ப, என்னை ஆட வச்சுதான் பிரபுதேவா சார் கம்போஸ் பண்ணினார். இந்தளவுக்கு டான்ஸ் எனக்கு வர்றதுக்கு என் அம்மாவும் கிளாஸிகல் டான்ஸரா இருந்ததுதான் காரணம்னு நினைக்கிறேன். என் கன்னத்தில சின்னதா குழி இருக்கும். அது கூட என் அம்மாக்கிட்டேருந்து வந்ததுதான்.

‘சக்கரக்கட்டி’ படம் கமிட்டானப்ப, அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுத்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு தடவை டயமண்ட் ரிங் வாங்கிக் கொடுத்தேன். அஞ்சு வருஷத்துக்கு இது தாக்குப் புடிக்கும்னு சொல்லி அந்த டயமண்ட் ரிங்கை அம்மாவுக்கு கிஃப்ட் பண்ணினேன். நான் இப்படி எப்பவாவதுதான் அம்மாவுக்கு கிஃப்ட் வாங்கிக் கொடுத்திருக்கேன். ஆனால், அம்மா அப்படி இல்லை. அவங்க ஷாப்பிங் போறதே எனக்கு கிஃப்ட் வாங்கத்தான்னு சொல்ற அளவுக்கு எக்கச்சக்கமா வாங்கிக் கொடுத்திருக்காங்க. சின்ன வயசுல அம்மா எனக்கு வாங்கிக் கொடுத்த வீடியோ கேம்ஸை கூட  இன்னமும் பத்திரமா வச்சுருக்கேன்.எங்கேயாவது வெளியூர் டூர் போனா அம்மா முதல்ல எனக்காக ஷாப்பிங் பண்ணிட்டுத்தான் மத்தவங்களுக்கு ஷாப்பிங் பண்ணுவாங்க. ‘உன் புள்ளைக்கு ஷாப்பிங் பண்ண ஆரம்பிச்சுட்டியா’ன்னு அப்பா கிண்டல் பண்ணுவார். அதை காதிலேயே வாங்கிக்காம ஷாப்பிங் பண்ணுவாங்க. எனக்கோ ஷாப்பிங் பண்ற பொறுமையே கிடையாது. அதனால் அவங்க கூட நான் போகவே மாட்டேன்.

மணிக்கணக்குல ஷாப்பிங் பண்ணி எனக்காக பத்து செட் டிரஸ் வாங்கிட்டு வருவாங்க. அதைப் பார்த்துட்டு, ‘இது சரி இல்லை... அது சரி இல்லை’ன்னு திருப்பிக் கொடுத்துடுவேன். வேற வழியில்லாமல், நான் வேணாம்னு சொன்னதை எல்லாம் எடுத்துக்கிட்டுப்போய் திருப்பிக் கொடுத்துட்டு வேற டிரஸ் மாத்தி வாங்கிட்டு வருவாங்க. இப்படி எல்லாம் சேட்டைகள் நிறைய பண்ணினாலும், அம்மா மேல எனக்கிருக்கிற பாசத்துக்கு அளவே இல்லை. எங்கேயாவது வெளி ஊருக்குப் போனா அங்கே போய் கால் வச்சதுமே முதல்ல அம்மாவுக்குத்தான் போன் பண்ணுவேன்.

அம்மா ஒரு காலத்தில டாப் ஹீரோயினா இருந்தவங்க... அவங்களுக்கு எக்கச்சக்க ஃபேன்ஸ் இருந்ததெல்லாம் கேள்விப்பட்டிருக்கேன். எனக்கு என் அம்மா நடிச்ச பல படங்கள் பிடிக்காது. காரணம்... அவங்க நடிச்ச பல படங்கள்ல கடைசியில அவங்க செத்துடுவாங்க. அதனாலேயே அவங்க நடிச்ச படங்களை பார்க்க விரும்ப
மாட்டேன். அதையும் மீறி அம்மா நடிச்சதுல ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘விதி’, ‘கிளிஞ்சல்கள்’, ‘மஞ்ஞில் விரிஞ்ச பூக்கள்’னு சில படங்கள் ரொம்பவும் பிடிக்கும்.
அப்பா, அம்மா ரெண்டு பேருமே சினிமாவுல பெரிய ஸ்டாரா இருந்தவங்க. ஆனாலும், எனக்கு இன்னும் பெரிய அளவு பிரேக் கிடைக்கலை. அந்த பிரேக்குக்காகத்தான் நான் போராடிக்கிட்டு இருக்கேன். என்னோட போராட்டத்தில நிச்சயமா ஜெயிப்பேன். அந்த வெற்றியை அடைஞ்சு என் அம்மாவை சந்தோஷப்படுத்தணும்.என்னைப் பொறுத்தவரை அம்மாதான் என்னோட உலகம். அவங்களை சுற்றியே என் வாழ்க்கை இருக்கு. இப்ப மட்டுமில்லே... எப்பவும் இப்படியே இருக்கணும்.

என் அம்மாவை எத்தனையோ தடவை கோபப்படுத்தி இருக்கேன். திட்டி இருக்கேன், ஹர்ட் பண்ணியிருக்கேன்... எல்லாமே பாசத்திலதான். இந்த பேட்டி மூலமா அம்மாகிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஸாரிம்மா... அண்ட் ஐ லவ் யூ மா!’’‘‘ஸ்கூல் டேஸ்ல நான்  பண்ணின வால்தனங்களை வச்சு ஒரு சினிமாவே எடுக்கலாம். அவ்வளவு விஷயங்கள் இருக்கு!’’நினைச்சதை சாதிப்பான்... நிறைய நிறைய சாதிப்பான்! சாந்தனுவின் அம்மா பூர்ணிமா பாக்யராஜ்

‘சின்னத்தாயவள் தந்த ராசாவே...’ என பூர்ணிமாவின் செல்போனின் அழைப்புப் பாடலிலேயே தெரிகிறது அவரது அளவுகடந்த அம்மா பாசம்!
‘‘சாந்தனு எனக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு சொல்லத் தெரியலை. அவனே எனக்கு ஸ்பெஷல்தான். நானும் அவனும் ரொம்ப க்ளோஸ். அவனோட சந்தோஷம், கோபம்னு எல்லாத்தையும் என்கிட்ட ஷேர் பண்ணிப்பான். அவனோட ஒவ்வொரு அசைவுக்கும் எனக்கு அர்த்தம் தெரியும்.ஒவ்வொரு வருஷமும் என் பர்த்டேவுக்கு என் குடும்ப நபர்கள் எல்லாரும் என்கூட இருக்கணும்னு ஆசைப்படுவேன். போன வருஷ பர்த்டே டைம்ல சாந்தனு பெங்களூர்ல ஷூட்டிங்ல இருந்தான். அவனால வர முடியாத சூழ்நிலை. நான் ரொம்ப அப்செட். பர்த் டே அன்னிக்குக் காலையில சர்ப்ரைஸா வந்து என் முன்னாடி நின்னான். ஒரு டயமண்ட் ரிங் ப்ரெசன்ட் பண்ணினான். அந்தக் கணத்தை என்னால வாழ்நாள் முழுக்க மறக்க முடியாது. என் ஹஸ்பெண்டோட கிஃப்டை விட அது எனக்கு ஸ்பெஷலா இருந்தது.ரொம்ப மெச்சூர்டான பையன். அவன் கூட இருக்கிற நேரம் நான் ரொம்ப சந்தோஷமா ஃபீல் பண்ணுவேன். நைட் வீட்டுக்கு வர கொஞ்சம் லேட் ஆனாலும் போன் பண்ணிட்டே இருப்பேன். ‘அம்மா நான் ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லம்மா... விடும்மா... வந்துடுவேன்’பான். எல்லா அம்மாக்களுக்கும் இருக்கிற தவிப்புதானே இது...தன்னை ப்ரூவ் பண்ணிக் காட்டணும்கிற வெறியோட உழைச்சிட்டிருக்கான். அந்த உழைப்புக்கான பலன் நிச்சயம் அவனுக்குக் கிடைக்கும். அவன் நினைச்சதை சாதிக்க, நிறைய நிறைய சாதிக்க... நான் ஒவ்வொரு நிமிஷமும் கடவுளை வேண்டிக்கிட்டிருக்கேன்...’’

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்