பெருவெள்ளம் ஆன சிறுதுளிகள்!



பெருவெள்ளம் ஆன சிறுதுளிகள் பற்றிய நிஜக்கதை இது!பொருளாதார உதவிகள், புத்தகங்கள், மருத்துவ வசதிகள் போன்ற மாணவர்களின் அடிப்படை பிரச்னைகளை களைவதற்கான முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறது ‘சிறுதுளிகள் சாரிட்டரி க்ளப்’. மாணவர்களால் மாணவர்களுக்காக நடத்தப்படும் இந்த அமைப்பு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வருகிறது. ‘சிறுதுளிகள்’ செயல்படத் தொடங்கிய பிறகு, பணம் காரணமாக படிப்பை நிறுத்திய பொறியியல் மாணவர்கள் யாரும் இல்லை என்பதுதான் ஹைலைட்!


சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் ஜெயஸ்ரீ, ஸ்வேதா, அமிர்தினி, அமலா, ஃபாத்திமா என சிறுதுளிகளின் 5 தோழிகளும் ஆஜரானார்கள். ‘‘அண்ணா பல்கலைக்கழகத்துல படிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாங்களோ, அதே அளவுக்கு மாணவர்களோட தனித் திறமைகளுக்கும் ஆர்வங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. ஆளுமைத்திறன், பசுமைப் புரட்சி, தமிழ் மாணவர் மன்றம் மாதிரி 16 அமைப்புகள் இங்க இருக்கு. இந்த அமைப்புகள்ல ஒண்ணுதான் நம்ம சிறுதுளிகள்’’ என்று ஜெயஸ்ரீ அறிமுகப்படுத்திக் கொள்ள...‘‘மத்தவங்களோட நல்லதுக்காக செயல்படுற அமைப்பு சிறுதுளிகள் என்பது எங்களுடைய ஸ்பெஷல். இந்த அமைப்பைத் தொடங்கியதும் மாணவர்கள்தான் என்பது இன்னும் ஸ்பெஷல்!’’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் அமிர்தினி.  ‘‘2011 பேட்ச்ல சைதன்யான்னு ஒரு அக்கா படிச்சாங்க. பர்த்டே பார்ட்டி, சினிமா செலவு, அவுட்டிங்னு மாணவர்கள் நிறைய செலவு பண்றது அவங்களுக்குப் பிடிக்கல. குறிப்பா பிறந்த நாள் பார்ட்டிங்கற பேர்ல பண்ற வீண் செலவை இல்லாதவங்களுக்குக் கொடுத்தா பெரிய உதவியா இருக்குமேன்னு சொல்லியிருக்காங்க.

அவங்களோட ஐடியாவை ஏத்துக்கிட்டவங்க ஒரு குழுவா சேர்ந்திருக்காங்க. யாருக்காவது பிறந்த நாள் வந்தா ஏதாவது ஒரு ஆதரவற்றோர் இல்லத்துல கொண்டாடுற பழக்கத்தை ஆரம்பிச்சிருக்காங்க. கொஞ்ச நாளுக்கு அப்புறம், நம்மகூட இருக்கற மாணவர்கள்லயே படிக்க முடியாம கஷ்டப்படுறவங்களுக்கு ஏதாவது செய்யலாமேன்னு யோசிச்சப்பதான் ‘சிறுதுளிகள்’ உருவாகியிருக்கு. அதுக்கப்புறம் முறைப்படி அனுமதி வாங்கி இந்த அமைப்பைத் தொடங்கியிருக்காங்க’’ என்று ஃப்ளாஷ்பேக் சொல்கிறார் ஸ்வேதா.

‘‘வருஷத்துக்கு இரண்டு முறை நன்கொடை வசூலிப்போம். ஒரு மாணவர் 2 ரூபாய் கொடுத்தால் கூட போதும்... அதிகபட்சம் அவங்க விருப்பம். உண்மையிலயே கஷ்டப்படறவங்க யாருன்னு கண்டுபிடிச்சு அந்த மாணவர்களுக்கு உதவிகள் போய்ச்சேரும்...’’ என்று திட்டத்தை விளக்குகிறார் அமலா.‘‘யுனிவர்சிட்டி காம்பவுண்ட்டுக்குள்ள முக்கிய இடங்கள்ல எங்களோட புகார் பெட்டி இருக்கும். எந்த வகுப்பு, என்ன உதவி தேவைன்னு ஒரு படிவத்துல குறிப்பிட்டு புகார் பெட்டில போட்டுரணும். சம்பந்தப்பட்ட மாணவரை நாங்க நேர்ல விசாரிச்சு, எங்க அமைப்பு ஆலோசகரான பேராசிரியர் பிரவீண்கிட்ட அனுப்புவோம். அவரும் சரிபார்த்ததுக்கு அப்புறம், அவங்களுக்குத் தேவைப்படுகிற உதவிகள் கிடைக்கும். அதோடு, ஒவ்வொரு வகுப்பிலும் எங்க ஆளுங்க இருப்பாங்க. அதனால, கஷ்டப்படுற மாணவர்களைக் கண்டுபிடிக்க முடியும். மாணவர்களுக்கு உதவி செஞ்சுட்டு, பெற்றோருக்கும் தகவல் கொடுத்துருவோம்.

சிலர், வீட்டிலும் பணம் வாங்கிட்டு ஏமாற்ற வாய்ப்பிருக்கில்லையா? அதுக்காகத்தான் இந்த நடவடிக்கைகள் எல்லாம். ஆனா, உதவி செய்யப்படுகிற நபர் யார் என்பது பரம ரகசியமாக இருக்கும். அது தெரிஞ்சா, மற்ற மாணவர்களை எதிர்கொள்ள அந்த மாணவர் சங்கடப்படுவார்...’’ என்கிறார் ஃபாத்திமா.

ஏன் சேர்ந்தீர்கள் இந்த அமைப்பில்?

‘‘முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக ‘க்ளப் ஓரியண்டேஷன்’ நிகழ்ச்சி நடக்கும். அந்த நிகழ்ச்சியில ஒவ்வொரு அமைப்பைச் சேர்ந்தவங்களும் அவர்களின் செயல்பாடுகள் பற்றிச் சொல்வாங்க. அதுல நமக்குப் பிடிச்ச ஏதாவது ஒரு க்ளப்ல சேர்ந்துக்கலாம். ‘நம்மால முடிஞ்சதை நாம மத்தவங்களுக்கு செய்யணும். வாழறதுக்கே அதுதான் அடையாளம்’னு எங்க அப்பா சொல்வார். அது மனசுலயே இருந்தது. வேலைக்குப் போய் சம்பாதிச்சாதான் மத்தவங்களுக்கு உதவி பண்ணணும்னு இல்லை. இப்ப படிச்சுட்டு இருக்கும்போது நம்மால இந்த ‘சிறுதுளிகள்’ மூலம் மத்தவங்களுக்கு உதவி பண்ண முடியுமேன்னு இதுல சேர்ந்தேன்’’ என்பது அமலாவின் பதில்.

‘‘எனக்கு ஃப்ரண்ட்ஸ் அதிகமா இல்ல. மத்தவங்ககிட்ட கலந்து பழக ஒரு வாய்ப்பு இருக்குமேன்னுதான் இந்த க்ளப்ல சேர்ந்தேன். அதுக்கப்புறம்தான் இவங்களோட நடவடிக்கைகள் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன். இப்போ மனசுக்கும் திருப்தியா இருக்கு’’ என்கிற ஜெயஸ்ரீ, சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் கூறுகிறார்...‘‘பல கேலி, கிண்டல்கள் வரும். முக்கியமா நன்கொடை வசூல் பண்ணும்போது நிறைய சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருநாள் ஒரு வகுப்புக்குள்ள போனவுடனே ‘ஆஹா சிறுதுளிகள்’னு பாய்ஸ் எல்லாரும் கும்பலா வெளியில ஓடிட்டாங்க... ‘ஒரு பொண்ணு பக்கத்துல உட்காரச் சொல்லி, பொறுமையா பர்ஸைத் திறந்து காமிச்சா. வடிவேல் சொல்ற மாதிரி பர்ஸுல ஒண்ணும் இல்லாம வெட்ட வெளியா இருந்தது. இதையெல்லாம் கஷ்டமா நினைக்காம ஜாலியா எடுத்துக்க வேண்டியதுதான்!’’

‘‘இதாவது பரவாயில்லை. எங்க டீம்ல ஜெயராஜ்னு ஒரு ஸ்டூடண்ட் இருக்கார். அவரை ஒரு பையன், ‘ஏ.டி.எம். வரைக்கும் வர முடியுமா’ன்னு கேட்டிருக்கான். சரின்னு இவரும் போயிருக்கார். ஏ.டி.எம். போய் பேலன்ஸ் செக் பண்ணா 40 ரூபாய்தான் அக்கவுன்ட்ல இருந்திருக்கு. ‘பாத்தியா மச்சான். நான் பணம் இல்லன்னு சொன்னா நீ நம்ப மாட்டியேன்னுதான் உன்னை கூடவே கூட்டி வந்தேன்’னு அந்தப் பையன் சொல்லியிருக்கான். வெயில்ல 2 கி.மீ. நடந்து போன ஜெயராஜுக்கு எப்படி இருந்திருக்கும்னு பாருங்க!’’ என்றார் ஸ்வேதா.

‘‘டொனேஷன்கிறது கொஞ்சம் டெக்னிக்கான வேலை. அதுக்கு சில விதிகள் இருக்கு’’ என்று ‘சூது கவ்வும்’ பாணியில் சொன்ன அமிர்தினி, ‘‘10 தேதிக்குள்ளேயே வசூல் பண்ணிரணும்... அன்னிக்கு புதுப்படம் ஏதும் ரிலீசாகாம இருக்கணும்... ஊருக்குப் போயிட்டு வர்றவங்ககிட்ட கண்டிப்பா பணம் இருக்கும்’ என்று சொன்னதும், ‘ஃபைனான்சியர் பொண்ணுங்கறதால எப்படி கலெக்ஷன் பண்ணணும்னு நல்லாத் தெரியுது’ என்று ஜெயஸ்ரீ கலாய்க்க, அங்கே ஒரே கலகல!‘‘இதுவரை ஆறரை லட்சம் ரூபாய்க்கும் அதிகமான உதவிகள் செய்திருக்கோம். படிக்கறதுக்குப் பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாதுங்கறதுதான் எங்களோட முதல் நோக்கம். பொழுதுபோக்குங்கிற பேர்ல பணத்தை வீணாக செலவழிக்காம, மற்ற கல்லூரிகளிலும் இதேமாதிரி அமைப்புகள் உருவாகி செயல்படணும்’’ என்ற ஃபாத்திமாவின் கருத்துக்கு அனைவரும் தலையசைக்கிறார்கள்.
பொழுதுபோக்குங்கிற பேர்ல பணத்தை வீணாக செலவழிக்காமல், மற்ற கல்லூரிகளிலும் ‘சிறுதுளிகள்’ போன்ற அமைப்புகள் உருவாகி செயல்படணும்...


- ஞானதேசிகன்
படங்கள்: ஆர்.சந்திரசேகர்