ஃபேஸ்புக்கில் பாடல் கேட்கிறேன்!





ஒரு பின்னணிப் பாடகிக்கு உச்சரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கடந்த காலத்தில் மட்டுமல்ல... நிகழ்காலத்திலும் ஒரே உதாரணம்... பி.சுசீலா!
தாய்மொழி தெலுங்கு என்றாலும், பி.சுசீலாவின் உச்சரிப்பில் தமிழ் கொஞ்சி விளையாடும். உதாரணம் தேட விழைந்தால்... நேரங்கள் விரையும்... விரயம். சுசீலா பாடிய அத்தனை பாடல்களையுமே உச்சரிப்புக்காக உச்சிமுகரலாம்!

‘‘அந்தக் காலத்தில் என் வேலை
வெறுமனே பாடுறது
மட்டும்தான்
என்பதால் கணக்கு வைத்துக்
கொள்ளவில்லை...’’


‘சுகமான குரல் யார் என்றால் சுசீலாவின் குரல் என்றேன்... எனக்கும் அந்தக் குரலில் ஏதோ மயக்கம் என நீ சொன்னாய்...’ என்கிற வைரமுத்துவின் வரிகளுக்கேற்ப, எல்லோரையும் மயங்கச் செய்கிற அந்த மாயக் குரலழகியுடன் ஒரு நேர்காணல்...

உங்களுடைய மிகப்பெரிய பிளஸ் என்றால் அது உங்களது ஸ்பஷ்டமான தமிழ் உச்சரிப்பு. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நீங்கள் தமிழின் மீதான
ஆர்வத்தை எப்படி வளர்த்துக் கொண்டீர்கள்?

‘‘உச்சரிப்பின் முக்கியத்துவம் கீர்த்தனைகள் கற்றுக்கொள்ளும்போதே உணர்ந்த விஷயம். வார்த்தை சரியில்லையென்றால் பாடுவது என்ன என்பது தெரியாதே... அதாவது, எனக்குத் தானாகவே வந்த சில விஷயங்களில் ஒன்று உச்சரிப்பும். எந்த மொழியானாலும் அப்படித்தான். தமிழ் உச்சரிப்பதும் அப்படி வந்ததுதான். உச்சரிப்பு சரியாக இருப்பதைத் தவிர்த்து அழகாகவும் இருக்க வேண்டும். ஏவிஎம் செட்டியார்  ஒரு வாத்தியாரை வைத்தும் கற்றுக் கொடுத்தார்...’’கர்நாடக சங்கீதத்திலும் ஹிந்துஸ்தானியிலும் நீங்கள் பெற்ற பயிற்சி பற்றி சொல்லுங்களேன்...

‘‘நான் கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்ட விஜயநகரத்தில்தான் இசையில் டிப்ளமா முடித்தேன். 14 வயதில் என்னுடைய முதல் கர்நாடக சங்கீத கச்சேரி நடந்தது. அதற்குப் பிறகு கர்நாடக சங்கீதப் படிப்பை நான் தொடரவில்லை. ஆதிநாராயண ராவ், ராஜேஸ்வரராவ், பெண்டியாலா மாதிரியான ஜாம்பவான்களும் இன்னும் பல இசையமைப்பாளர்களும் எனக்கு ஹிந்துஸ்தானி பாணியில் நிறைய பாடல்களைக் கொடுத்தார்கள்...’’

பாடல்களால் பாடகர்களுக்குப் பெருமையா? பாடகர்களால் பாடல்களுக்குப் பெருமையா? என்ன நினைக்கிறீர்கள்? ‘உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...’ பாடலையோ, ‘லவ் பேர்ட்ஸ்...’ பாடலையே உங்கள் குரலைத் தவிர வேறு யார் குரலிலும் கேட்பதைக் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடிவதில்லை. அப்படியிருக்கையில் பாடகர்களால்தானே பாடல்களுக்குப் பெருமை?

“இரண்டிலும் உண்மை இருக்கிறது. ஒரு பாடலுக்கு சரியானபடி குரல் வாகை வைத்துக்கொண்டு, சரியான பாணியில் பாடினால், அதாவது, பாடலுக்கு வேண்டிய விஷயங்களோடு பாடினால், பாடல் சிறப்பு பெறுகிறது...’’உங்களுடைய குரலின் இனிமையைத் தக்க வைக்க என்னவெல்லாம் செய்தீர்கள்?‘‘எனக்கு எல்லாமே பிடிக்கும். அதாவது, எண்ணெய்ப் பதார்த்தங்கள், குளிர்ந்த தண்ணீர் எல்லாம். என் கணவர் குரலைக் கெடுக்கக்கூடிய எதையும் சாப்பிட விடாமல் பார்த்துக் கொண்டார். அவ்வளவுதான்... வீட்டில் நான் சமையலறைக்கு செல்வதுகூட தடை செய்யப்பட்டது!’’

உங்கள் வாரிசாக யாரை நினைக்கிறீர்கள்? ஏன்? உங்களுடைய மருமகள் சந்தியா ஜெயகிருஷ்ணாவும் பாடகியல்லவா? “மருமகள் நன்றாகப் பாடக்கூடியவர்தான். நல்ல குரல். யாரையும் வாரிசு என்று ஏன் கூற வேண்டும்? அவரவர் தங்கள் சொந்த பாணியில் பாட வேண்டும். யாரை மானசீக குருவாக வைத்துக் கொண்டாலும் தனித் தன்மை தேவை...’’

உங்கள் காலத்தில் பாடகர்களின் எண்ணிக்கை குறைவு. இன்று ஏகப்பட்ட பாடகர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். இதை வளர்ச்சியாகப் பார்க்கிறீர்களா? வீக்கமாகப் பார்க்கிறீர்களா?‘‘எவ்வளவு பாடகிகள், பாடகர்கள் வந்தாலும் தனித்தன்மை தேவை. அந்தக் காலத்தில் டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, ஜிக்கி, கண்டசாலா, பி.லீலா எல்லாருக்குமே இருந்த தனித்தன்மை பாராட்டத்தக்கது. ஒருவரின் நிழல்கூட மற்றவரின் மேல் படாது. இப்போது சில பாட்டுக் கலைஞர்களிடம் மட்டுமே அதைப் பார்க்க முடிகிறது...’’

இந்தத் தலைமுறையில் உங்களைக் கவர்ந்த பாடகர், பாடகி யார்?‘‘பாகுபாடு பார்ப்பதில்லை. எல்லோர் மீதும் அன்பு செலுத்துவதால், எல்லாரையுமே பிடிக்கும்...’’உங்கள் பார்வையில் இன்றைய திரை இசை எப்படி இருக்கிறது?‘‘வேகமான துள்ளல் பாடல்களும் வருகின்றன. சில வித்தியாசமான பாடல்களும் வருகின்றன. சில மெலடி பாடல்களும் வருகின்றன. திறமையுள்ள இசையமைப்பாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்...’’உங்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்ட விருதுகள், பாராட்டுகள், அங்கீகாரங்கள் எல்லாமே போதுமானதாக இருப்பதாக நினைக்கிறீர்களா? அல்லது அவை குறித்த குறைகள் ஏதும் உண்டா?

‘‘குறைகள் எல்லாம் இல்லை. விருதுகள் வந்தால் சந்தோஷம். அதைவிட, தினந்தோறும் வரும் ரசிகர்களின் முகத்தில் பார்க்கும் சந்தோஷமே ஒரு பெரிய விருதுதான்...’’‘பி.சுசீலா டிரஸ்ட்’ பற்றி சொல்லுங்களேன்...‘‘நலிந்த இசைக் கலைஞர்களுக்காக நடத்தப்படுவது அது. ஒவ்வொரு மாதமும் கலைஞர்களுக்கு பென்ஷன் கொடுக்கப்படுகிறது. வருடா வருடம் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி, முக்கியமான கலைஞர்களை கவுரவித்து அதில் வரும் பணத்தை டிரஸ்ட் கணக்கில் சேர்த்து விடுகிறோம்.

பல கலைஞர்களுக்கு மருத்துவ வசதியும் செய்து கொடுத்திருக்கிறோம்...’’அன்றும் இன்றும்... வாழ்க்கை எப்படி இருக்கிறது?‘‘அன்றைய நிலையில் ஜாம்பவான் இசையமைப்பாளர்கள், நிறைய கடினமான பாடல்கள், நவீன வசதிகள் இல்லாத காலம் என சூழலே வேறு. எல்லா கருவிகளுடன் சேர்ந்து பாட வேண்டிய சூழ்நிலை. ஆகவே, இதில் யார் ஒரு சிறிய தவறு செய்தாலும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். கடிகாரம் பார்க்க நேரமிருந்ததில்லை.இன்றும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. ரசிகர்களுடன் சேர்ந்து இசையைப் பற்றிப் பேசுவதும் கேட்பதுமாக நேரம் செல்கிறது...’’

இந்தத் தலைமுறையில் பிறந்திருக்கலாமோ’ என என்றாவது நினைத்ததுண்டா? எந்தப் பாடகராவது அப்படி நினைக்க வைத்திருக்கிறார்களா?
 ‘‘அப்படியெல்லாம் நினைப்பதில்லை!’’இன்றைக்கு நிறைய பாடகர்கள் இசையமைப்பாளர்களாக அவதாரம் எடுக்கிறார்கள். உங்களுக்கு அப்படி ஓர் எண்ணம் தோன்றவில்லையா? ‘‘இப்போது சில டிவோஷனல் ஆல்பம் செய்து கொண்டிருக்கிறேன். பல ரசிகர்கள் இன்னும் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்...’’
டீபெண்களில் இசையமைப்பாளர்கள் வராதது ஏன்?

‘‘சரியான காரணம் சொல்ல முடியவில்லை. இந்தியில் ஜடான் பாய், உஷா கண்ணா, சரஸ்வதி தேவி, தெலுங்கில் பி.லீலா என பல பெண்கள் இசையமைத்திருக்கிறார்கள்...’’உங்களுடைய காலத்தில் சக பாடகிகளுடன் உங்களது நட்பு எப்படி இருந்தது? ‘‘சுமுகமாகத்தான் இருந்தது. வேலைப்பளு அதிகமாக இருந்ததால், பாடல் பதிவின்போது சந்தித்துக் கொள்வோம்... அதாவது, சேர்ந்து பாடும் வாய்ப்பு வந்தால். என்னுடன் கோரஸ் பாடிய பாடகிகளுடன் இன்று வரை நல்ல உறவு இருக்கிறது. அதில் சில கோரஸ் பாடகிகளுக்கு டிரஸ்டில் இருந்து பென்ஷன் கொடுக்கப்படுகிறது...’’

இசைத் துறையில் இன்று வரை தொடர்கிற நட்பு பற்றி?

‘‘பி.பி.ஸ்ரீனிவாஸ் உயிருடன் இருந்தவரை அடிக்கடி வீட்டுக்கு வந்து கொண்டிருப்பார். டி.எம்.எஸ். அவர்களுடன் அவ்வப்போது சந்திப்பு ஏற்படும். தொலைபேசியில் அளவளாவுவது உண்டு. கண்டசாலாவின் புதல்வரை சந்திக்கும்போது சந்தோஷமாக இருக்கும். பி.ஜெயச்சந்திரன் வீட்டுக்கு வருவார். சில ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப சில அரிய பாடல்களைக் கேட்பார்... பதிவு செய்து எடுத்துக்கொள்வார். ஜேசுதாஸ் மற்றொரு அன்புச் சகோதரர். சமீபத்தில் கூட எம்.எஸ்.வி. வீட்டுக்குச் சென்று வந்தேன்...’’

உங்களுடைய பழைய பாடல்களைக் கேட்பதுண்டா?

‘‘ரசிகர்கள் பதிவு செய்து தரும் பாடல்களைக் கேட்பதுண்டு!’’பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்கிற இன்றைய டிரெண்டில் உங்களுடைய எந்தப் பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட வேண்டும் என நினைக்கிறீர்கள்?‘‘அப்படி ஒரு பாடலைச் சொல்ல முடியாது. எதையும் எடுத்து அதன் ஆத்மா சிதையாமல்  பரிமாறினால் நன்றாகத்தான் இருக்கும்...’’

நீங்கள் பாடியதிலேயே மாஸ்டர் பீஸ் என்றால் எந்தப் பாடலைச் சொல்வீர்கள்?

‘‘ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி., ராஜேஸ்வர ராவ், பெண்டியால நாகேஸ்வர ராவ், சுதர்சனம், கோவர்தனம், வி.குமார் ஆகியோர் ஆர்மோனியத்தில் கை வைத்தாலே மாஸ்டர் பீஸ்தான் உருவாகும். நான் மழுப்பவில்லை. ஒன்றை எடுத்துச் சொன்னால் மற்றொன்று விட்டுப் போய்விடுமோ என்கிற எண்ணம்தான்...’’

இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

‘‘டிவோஷனல் ஆல்பம் கம்போஸ் செய்து கொண்டிருக்கிறேன். ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக ஃபேஸ்புக்கில் உரையாடுகிறேன். நேரம் போவது
தெரிவதில்லை. அவர்கள் ஃபேஸ்புக்கில் அரிய பாடல்களைப்  போடுகிறார்கள்... கேட்கிறேன். அவர்கள் எழுதும் ஆய்வுக் கட்டுரைகளை மற்றவர்கள் படித்துக் கேட்டுக் கொள்கிறேன்...’’

சமீபத்தில் உங்களைக் கவர்ந்த பாடல்..?

‘‘‘நினைத்து நினைத்து பார்த்தேன்...’ - என் மனதைத் தொட்ட பாடல்!’’

உங்கள் குடும்பத்தார் பற்றிச் சொல்லுங்களேன்...

‘‘மகன் ஜெயகிருஷ்ணா, மருமகள் சந்தியா, பேத்திகள் ஜெயஸ்ரீ, சுபஸ்ரீ...’’எத்தனை மொழிகளில், எத்தனை பாடல்கள் பாடியிருக்கிறீர்கள்?
‘‘துலு, ஒரியா உள்பட 12 மொழிகளில் பாடியிருக்கிறேன். அத்தனை மொழிகளிலும் நான் பாடிய பாடல்களின் பட்டியலைத் தயாரிக்கிற வேலையை என் ரசிகர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில் நான் பாடிய தனிப்பட்ட ஆல்பங்களும் அடக்கம். 30 ஆயிரத்தைத் தாண்டிவிடும் எனச் சொல்கிறார்கள். அந்தக் காலத்தில் என் வேலை வெறுமனே பாடுறது மட்டும்தான் என்பதால் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை...’’

டி.எம்.எஸ்., பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ஏ.எம்.ராஜா உடனான உங்கள் அனுபவங்கள்...‘‘டி.எம்.எஸ்... என்னுடைய பாடல், தன்னுடைய கம்பீரமான குரலுக்குக் கச்சிதமாகப் பொருந்துவதாக பலமுறை பாராட்டியிருக்கிறார். ரெக்கார்டிங் முடிந்த பிறகுகூட, நாங்கள் பாடிய பாட்டை இன்னும் எப்படி சிறப்பாகப் பாடியிருக்கலாம் என அடிக்கடிப் பேசியிருக்கிறோம். ஒரு பாடலை எப்படிப் பாட வேண்டும், ஒரே மூச்சில் பாடலாமா, வேண்டாமா என்பதைக் கூட நாங்கள் விவாதிப்போம். மிகப்
பெரிய இசை ஜாம்பவனான அவர், பிரமாதமாக சமைப்பார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்!

ஏ.எம்.ராஜா... ரொம்பவும் ரிஸர்வ்டு டைப். அவரின் மென்மையான அந்தக் குரல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் பக்கத்தில் இருந்தால் யாரும் எந்த ஜோக்ஸும் பரிமாறிக் கொள்ள மாட்டோம். சூழலே சீரியஸாக இருக்கும். டூயட் பாடல் பாடும் போது கூட இதே நிலைமைதான்!பி.பி.ஸ்ரீனிவாஸ்... ரொம்ப அன்பான ஒரு
மனிதர். என்னை சந்திக்க வரும்போதெல்லாம் உட்லண்ட்ஸ் டிரைவ் இன்னில் இருந்து லேட்டஸ்ட் இனிப்புகளுடன்தான் வருவார். ‘ஒடிவது போல் இடையிருக்கும், யார் யார் யார் அவர் யாரோ’ மாதிரி நானும் அவரும் சேர்ந்து பாடிய பாடல்களை அவ்வளவு ரசித்திருக்கிறேன். அவருடைய இசையமைப்பில் துளசிதாஸ், கபீர்தாஸ், மீரா பஜன்களை எல்லாம் பாடும் வாய்ப்பு பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது...’’

பி.சுசீலா