நீங்கதான் முதலாளியம்மா



ஆரி ஒர்க்

பீரோ நிறைய பட்டுப் புடவைகளாக அடுக்கி வைத்திருந்தாலும், ஆசைக்கொரு டிசைனர் சேலை வைத்திருக்க விரும்பாத பெண்களை எண்ணிவிடலாம். பட்டு உடுத்த முடியாத பல விசேஷங்களுக்கும் டிசைனர் சேலைதான் அவர்களுக்கு கை கொடுக்கும். டிசைனர் சேலையில் ‘ஆரி வேலைப்பாடு’ என்பது எல்லாக் காலங்களிலும் ரொம்பவே ஸ்பெஷல். சிம்பிளாகவோ, ஆடம்பரமாகவோ எப்படி வேண்டுமானாலும் ஆரி வேலைப்பாடு செய்யலாம். அந்த வேலைப்பாடு கூட்டத்தில் உங்களை தனித்துக் காட்டும்.ஆரி வேலைப்பாடுகளில் அசத்திக் கொண்டிருக் கிறார்கள் சென்னையைச் சேர்ந்த பவானியும் கல்பனாவும்.

‘‘அதிகம் படிக்கலை. பொழுதுபோக்கா ஆரி ஒர்க் கத்துக்கிட்டேன். 15 வயசுலேருந்து பண்ணிட்டிருக்கேன். பிசினஸா எடுத்துப் பண்ண ஆரம்பிச்ச பிறகு
கல்பனாவும் என்கூட சேர்ந்தாங்க. இப்ப எங்க ரெண்டு பேருக்கும் முழு நேரத் தொழிலேஇதுதான்’’ என்கிறார் பவானி.‘‘எம்பிராய்டரில எத்தனையோ வகை உண்டு. அதுல ஆரி ரொம்பவே ஸ்பெஷல். சில்க் காட்டன், சிந்தெடிக், நெட் துணினு எல்லா மெட்டீரியல்லயும் இந்த ஒர்க்கை பண்ண முடியும். பிளவுஸ், சுடிதார், லெஹங்கா, சேலைனு எதுல வேணாலும் போடலாம். இதுல 21 வகை  தையல் இருக்கு. அவங்கவங்க தேவைக்கேத்தபடி காம்பினேஷனை மாத்திப் பண்ணலாம். அடிப்படை தையலோ,எம்பிராய்டரியோ தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்லை. ஆர்வமும் உழைக்கிற தைரியமும் இருந்தால் போதும்...’’ என்கிறவர்கள், இந்தத் தொழிலைத் தொடங்க வெறும் 300 ரூபாய் முதலீடு போதும் என ஆர்வம் கிளப்புகிறார்கள்.

‘‘ஆரி ஸ்டாண்டு, துணி, நூல், நாலு வகையான ஊசினு இதுக்குத் தேவையான பொருட்கள் ரொம்பக் கம்மி. ஒரு ஜாக்கெட்டுக்கு ஆரி ஒர்க் பண்ண 1 நாள் போதும். கலர் காம்பினேஷன், கிரியேட்டிவிட்டியை பொறுத்துதான் உங்களுக்கு ஆர்டர் வரும். உங்க வீட்டுக்குப் பக்கத்துல உள்ள பொட்டிக், தையல் கடைகளோட பேசி, ஆரி ஒர்க் மட்டும் பண்ணிக் கொடுக்க ஆர்டர் வாங்கலாம். கல்யாணப் பெண்ணுக்கான பிரைடல் பிளவுஸுக்கெல்லாம் 5 ஆயிரம் கூட வாங்கலாம். உழைப்பு எவ்வளவு அதிகமோ, அதே மாதிரி இதுல லாபமும் அதிகம்...’’ என்கிற பவானி மற்றும் கல்பனாவிடம் 2 நாள் பயிற்சியில் ஆரி ஒர்க் செய்வதற்கான பயிற்சி களைக் கற்றுக் கொள்ளலாம். தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 2 ஆயிரம் ரூபாய்.
( 97898 90446)

பவானி - கல்பனா

‘‘அடிப்படை தையலோ, எம்பிராய்டரியோ தெரிஞ்சிருக்கணும்னு அவசியமில்லை. ஆர்வமும்உழைக்கிற தைரியமும் இருந்தா போதும்...’’

பாரம்பரிய இனிப்புகள்

இந்திரா - கலா

தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு நேரில் சென்று பரஸ்பரம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காலம் மாறி, வாழ்த்து அட்டை கலாசாரமும் மாறி, பிறகு குறுந்தகவலில் வாழ்த்து சொன்ன காலமும் மாறிவிட்டது. இன்று முகப்புத்தகம் மூலம் ஒரு நொடியில் ஓராயிரம் பேருக்கு வாழ்த்து பரிமாறும் காலம். நவீனமயமாக்கலின் தாக்கத்தில் மாறிப் போன இது போன்ற எத்தனையோ விஷயங்களில், பாரம்பரியமாக வீட்டில் தயாரிக்கிற இனிப்பு, காரங்களும் அடக்கம். கடைகளில் ஆர்டர் கொடுத்து யாரோ செய்ததைக் கடவுளுக்குப் படைத்து, பண்டிகையை சிம்பிளாக முடித்துக் கொள்ள நினைப்போரே இன்று பெரும்பான்மை.பாரம்பரியம் மாறாத இனிப்பு, கார வகைகளைச் செய்ய ஆசையிருந்தாலும், அவற்றைக் கற்றுக் கொடுக்க பல வீடுகளில் பெரியவர்கள் இல்லை... கூட்டுக் குடும்பங்கள் இல்லை. சென்னையைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழு ஒன்றைச் சேர்ந்த இந்திரா மற்றும் கலா இருவரும் பல வருடங்களாக பாரம்பரிய இனிப்பு வகைகளைச் செய்து விற்பதை பகுதி நேரத் தொழிலாகச் செய்து வருகிறார்கள்.


தீபாவளி காரம்

‘‘மகளிர் சுய உதவிக் குழுவுல இருக்கிறதால டெய்லரிங், அழகுக் கலைனு நிறைய தொழில்கள் தெரியும். பெரும்பாலும் குழுவுல உள்ள எல்லாருமே நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்களா இருப்போம். குறிப்பா ஒவ்வொருத்தர் ஒவ்வொரு ஸ்வீட், காரம் செய்யறதுல எக்ஸ்பர்ட்டா இருப்பாங்க. ஆரம்பத்துல பண்டிகைகளுக்கு எங்க வீடுகளுக்கு செய்யறதுக்காக நாங்க எல்லாரும் சேர்ந்து செய்தோம். குழுவுல உள்ள மத்த பெண்களுக்கும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்களுக்கும் கொடுத்தப்ப, எல்லாரும் பாராட்டினாங்க. உடனே அவங்கவங்க வீடுகளுக்கும் ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. பண்டிகைகளுக்கு மட்டுமில்லாம, சின்னச் சின்ன விசேஷங்களுக்கும் செய்து கொடுக்கறோம். எல்லாருக்கும் எல்லா அயிட்டங்களும் நல்லா வரும்னு சொல்ல முடியாது. ஒவ்வொரு அயிட்டத்துக்கும் ஒவ்வொருத்தரோட கைவாகு வேறுபடும். யார் யார் எதுல எக்ஸ்பர்ட்டுனு பார்த்துப் பிரிச்சுப்போம். எங்களோட சிறப்பம்சமே இனிப்புகளை அதோட பாரம்பரிய சுவை மாறாமப் பண்றதுதான். இன்னிக்கு எந்த ஸ்வீட் ஸ்டால்லயும் வீட்டுச் சுவையோட இனிப்பு வாங்க முடியாது.

எங்கக்கிட்ட ஆர்டர் கொடுக்கிறவங்க ‘எங்கம்மா பண்ணின மாதிரி இருக்கு... மாமியார் பண்ற மாதிரி இருக்கு...’னு சொல்லாமப் போறதில்லை. தரமான எண்ணெய், அப்பப்ப தேவைக்கேத்தபடி அரைச்ச ஃப்ரெஷ்ஷான மாவு, சுத்தமான நெய், வெல்லம்னு எல்லாத்தையும் ரொம்ப கவனமா தேர்ந்தெடுத்துப் பண்றதுதான் ரகசியம். எல்லாத்தையும்விட முக்கியமா ஒவ்வொரு ஆர்டரையும் எங்க வீட்டுக்குப் பண்ற நினைப்போடதான் செய்வோம்’’ என்கிறார்கள் இந்திராவும் கலாவும்.சர்க்கரை மற்றும் வெல்ல அதிரசம், அச்சு முறுக்கு, பாதுஷா, லட்டு, நட்ஸ் லட்டு, மைதா ரோல், இனிப்பு சோமாஸ் என தீபாவளிக்கான பாரம்பரிய இனிப்புகளை செய்ய குறைந்தது 5 ஆயிரம் முதலீடு தேவை என்கிறார்கள் இவர்கள். ‘‘கடையை விட தரத்துல அதிகமானதா இருந்தாலும், விலையில கம்மியாதான் கொடுக்கறோம். 50 சதவிகித லாபம் நிச்சயம். உழைக்கத் தயாரா இருக்கிறவங்களுக்கு இந்தத் தொழில் நிச்சயம் கை கொடுக்கும்’’ என்கிறவர்களிடம் ஒரே நாள் பயிற்சியில் 10 வகையான இனிப்புகளைக் கற்றுக் கொள்ள கட்ட ணம் 300 ரூபாய். ( 94448 71544)

‘‘தரமான எண்ணெய், அப்பப்ப தேவைக்கேத்தபடி அரைச்ச ஃப்ரெஷ்ஷான மாவு, சுத்தமான நெய், வெல்லம்னு எல்லாத்தையும் ரொம்ப கவனமா தேர்ந்தெடுத்துப் பண்றதுதான் ரகசியம். ஒவ்வொரு ஆர்டரையும் எங்க வீட்டுக்குப் பண்ற நினைப்போடதான் செய்வோம்...’’இனிப்பைத் தவிர்ப்பவர்களைப் பார்க்கலாம். காரத்தை ஒதுக்குபவர்களைக் காண்பது அரிது. புதுமை என்கிற பெயரில் இனிப்புகளின் சுவையும் வடிவமும் மாறிப் போன மாதிரியே, காரத்திலும் புதுசு புதுசாக நிறைய வந்துவிட்டன. புதுமை விரும்பிகள் ஒரு பக்கம் இருந்தாலும், பாரம்பரியத்தைத் தவிர்க்க நினைக்காதவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? அப்படிப்பட்டவர்களுக்காக பாரம்பரிய கார வகைகளுக்கான ஆர்டர் எடுத்து பிசினஸாக செய்கிறார்கள் மாதவியும் ராஜேஸ்வரியும்.

மாதவி - ராஜேஸ்வரி


‘‘நாங்களும் சுய உதவிக் குழுவைச் சேர்ந்தவங்க தான். இந்திராவும் கலாவும் இனிப்பு செய்யறதுல ஸ்பெஷலிஸ்ட்டுன்னா, நாங்க கார வகைகள் செய்யறதுல எக்ஸ்பர்ட்ஸ். அவங்க இனிப்புகளுக்கு ஆர்டர் எடுத்தா, கார ஆர்டர் எங்கக்கிட்ட வரும். ராஜேஸ்வரிக்கு ஊர்ல ஸ்வீட் ஸ்டால் இருக்கு. அதனால அவங்களுக்கு எல்லா வகையான இனிப்பும் காரமும் அத்துப்படி’’ என்கிறார் மாதவி. ‘‘இனிப்பை விட காரம் செய்யறதுல இன்னும் அதிக கவனம் அவசியம். கொஞ்சம் பக்குவமும் பதமும் மாறினாலும் மொத்த சுவையும் கெட்டுப் போயிடும். எண்ணெய், மாவுனு எல்லாமே தரமா இருக்கணும். கொஞ்சம் அலட்சியம் காட்டினாலும் சீக்கிரமே கெட்டுப் போகும். காரல் வாடை அடிக்கும். அப்படி எந்தப் பிரச்னையும் வந்துடாம இருக்கணும்னு கவனமா பண்றோம். எங்கக்கிட்ட ஆர்டர் கொடுக்கிறவங்க சிலர், உப்பு, காரம் எப்படியிருக்கணும்னு முன்னாடியே சொல்லிடுவாங்க. அதுக்கேத்தபடி அளவா பார்த்து செய்து கொடுப்போம். கடைகள்ல வாங்கற போது அது சாத்தியமில்லை. அதே போல ராகி
மிக்ஸர், நவதானிய மிக்ஸர்னு சில ஸ்பெஷல் அயிட்டங்களும் பண்றோம். ஆரோக்கியத்துல அக்கறை உள்ளவங்களுக்கானவை இவை.

கடைகளைப் போல 50 கிலோ, 100 கிலோ பிசினஸ் இல்லை எங்களுக்கு. 5, 10 கிலோனு சின்ன அளவுல பண்றதால, அப்பப்ப பொருட்கள் வாங்கி, ஃப்ரெஷ்ஷா செய்து கொடுப்போம். 3 நாள் முன்னாடி ஆர்டர் கொடுத்தா போதும். 10 கார வகைகளைச் செய்ய 4 ஆயிரம் முதலீடு தேவைப்படும். சுத்தமா, சுவையா பண்ணினா 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிறார் ராஜேஸ்வரி.ஓமப்பொடி, ரிப்பன் பக்கோடா, காராபூந்தி, திடீர் முறுக்கு, அரிசி தட்டை, மைதா தட்டை, விதம் விதமான மிக்ஸர் என 10 வகையான கார வகைகளை ஒரே நாள் பயிற்சியில் கற்றுத் தரத் தயாராக இருக்கிறார்கள் இவர்கள். கட்டணம் 300 ரூபாய். (ணூ 90949 12562) ‘‘இனிப்பை விட காரம் செய்யறதுல இன்னும் அதிக கவனம் அவசியம். கொஞ்சம் பக்குவமும் பதமும் மாறினாலோ, அலட்சியம் காட்டினாலோ மொத்த சுவையும் கெட்டுப் போயிடும். காரல் வாடை அடிக்கும். அப்படி எந்தப் பிரச்னையும் வந்துடாம இருக்கணும்னு கவனமா பண்றோம்...’’

- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்