தன்னம்பிக்கை இருந்தால் தங்கமாக வாழலாம்



சிவகாமசுந்தரி

‘‘மூத்தவன் அப்போ பிளஸ் 1 படிச்சுக்கிட்டிருந்தான். சின்னவன் 9ம் வகுப்பு. கஷ்டம்னு சொல்ல முடியாது. ஓரளவு வசதியாத்தான் இருந்தோம். நான்தான் வெளியுலகம் தெரியாம இருந்துட்டேன். என்ன தேவைன்னு பாத்துப் பாத்து செய்வார் எங்க வீட்டுக்காரர். நெல்லு மண்டி வஞ்சிருந்தார். எல்லாம் நல்லாப் போய்க்கிட்டிருந்த நேரத்துல திடீர்னு ஹார்ட் அட்டாக்... என்ன நடந்துச்சுன்னு யோசிக்கக்கூட அவகாசம் இல்லை. விட்டுட்டுப் போயிட்டார். அவரோட இழப்பை ஜீரணிக்கக்கூட திராணியில்லாம திணறிப்போய் நின்னேன். சேமிப்புன்னு பெரிசா எதுவும் இல்லை. பிள்ளைகளுக்கு ஏதாவது வழி காட்டணுமே... எனக்குத் தெரிஞ்ச ஒரே தொழில் தையல்... வீட்டுக்கு முன்னாடி நாலைஞ்சு தட்டியை வச்சுக் கட்டிக்கிட்டு உக்காந்துட்டேன். என் பிள்ளைங்க ரெண்டு பேருமே ரொம்பப் பொறுப்பான பிள்ளைங்க. மூத்தவன் ஒரு கம்ப்யூட்டர் லேப்புலயும் இளையவன் ஒரு மெடிக்கல்லயும் பகுதி நேரமா வேலைக்குச் சேந்தாங்க... தனிச்சு நின்னு குடும்பத்தைச் சுமந்தபோது இருந்த நிலைமை இதுதான். இன்னைக்கு எல்லாம் மாறிடுச்சு. என்னை மாதிரி நின்ன பல பெண்களுக்கு வழிகாட்டுற அளவுக்கு வாழ்க்கை மாறியிருக்கு...- மென்மையாகப் பேசுகிறார் சிவகாமசுந்தரி.

கணவரின் மரணத்துக்கு முன்பு வரை உலகம் தெரியாமல் இருந்த சிவகாமசுந்தரி தயாரிக்கும் பொம்மைகள், இன்று உலகம் முழுதும் செல்கின்றன. விவசாயம் நசிந்து வாழ்வாதாரம் தேடிய ஏராளமான பெண்களுக்கு ஒரு முன்னுதாரணப் பெண்ணாக நின்று தொழில் பயிற்றுவிக்கிறார். சிவகாமசுந்தரிக்கு சொந்த ஊர் தஞ்சையை அடுத்துள்ள கரத்தட்டாங்குடி ராஜராஜசோழன் நகர். கணவர் மதிவாணன் 17 வருடங்களுக்கு முன் காலமாகி விட்டார். ‘‘விவசாயம்தான் எங்க மக்களுக்கு ஜீவாதாரம். அதைவிட்டா எங்க பெண்களுக்கு வேறு தொழில் தெரியாது. அப்பல்லாம் எந்நாளும் ஏதாவது ஒரு வேலை இருந்துக்கிட்டே இருக்கும். பொண்ணுங்க சகதியிலேயே உலண்டுக்கிட்டு கிடப்பாங்க. நெல்லுக்கு நாத்துப் பறிக்கிறது, உளுந்துக்கு களையெடுக்கிறது, கடலைக்கு நிலம் கொத்துறதுன்னு வேலை இல்லாத நாளே இருக்காது. எப்பவும் கையில நாலு காசு இருக்கும். நல்லது கெட்டதுன்னு விழி பிதுங்கி நிக்க வேண்டியதில்லை. இப்போ எல்லாம் மாறிப்போச்சு. விவசாயமே அத்துப்போச்சு. எங்காவது மோட்டார் கேணி வச்சிருக்கவங்க ஒரு போகம் பண்ணினா பெரிசு.

திடீர்னு தனிச்சு நின்னப்போ திணறிட்டேன். பிள்ளைகள்தான் ஆதரவா நின்னாங்க. கொஞ்ச நாள் தையல் தொழில் பாத்தேன். அதுக்கும் போட்டிகள் வந்திடுச்சு. என் தெருவிலயே நாலைஞ்சு டைலர்கள் இருந்ததால எனக்கு வர்ற வேலை குறைஞ்சிடுச்சு. நாங்க படிப்பை நிறுத்திட்டு வேலைக்குப் போறோம்... நீங்க சும்மா வீட்டில இருங்கம்மான்னு பிள்ளைகள் சொன்னாங்க. எனக்கு மனசு கேக்கலே. பிள்ளைகள் படிப்புக்கு பங்கம் வந்திடக்கூடாது. என் நாத்தனார் தஞ்சாவூர்ல இருந்தாங்க. அவங்க வெல்வெட் துணிப் பொம்மைகள் செஞ்சு விக்கிறாங்க. என்னோட சூழ்நிலையைப் பாத்துட்டு, என்னைக் கூப்பிட்டாங்க. என்னைக்கும் தேவையுள்ள தொழில் இது. கொஞ்சம் ஆர்வம் இருந்தா சீக்கிரமே கத்துக்கலாம். முயற்சி செஞ்சு பாருன்னு சொன்னாங்க. பத்தே நாள்தான்... எல்லா தொழில்நுட்பத்தையும் கத்துக் கொடுத்துட்டாங்க. மூலப்பொருட்கள் கொள்முதல் செய்ற இடங்கள், மார்க்கெட் பண்ற வழிமுறைகள் எல்லாமே
கத்துக்கிட்டேன்.

இந்த பொம்மை தொழிலுக்கு ஓவியம் கொஞ்சம் தெரிஞ்சிருக்கணும். சாதாரணமா எல்லாப் பெண்களுமே கோலம் போட்டு பழகியிருப்பாங்க. அதனால அவங்களுக்கு கோடுகள் இலகுவா வரும். அதுமட்டுமில்லாம நான் சின்ன வயசுலயே படம் வரைவேன். அதனால இதை எளிதா கத்துக்க முடிஞ்சது. திருச்சியில போய் கொஞ்சமா பர் துணி, பெல்ட் துணி, டொய் நூல், பஞ்சு, கண்ணு, மூக்கு, பேக்கிங் கவரெல்லாம் வாங்கியாந்தேன். நானே கட் பண்ணி தச்சு ஒரு டெட்டிபேர் தயாரிச்சேன். அந்தப் பொம்மையை பக்கத்து வீட்டுக்காரங்களே நல்ல விலை கொடுத்து வாங்கிக்கிட்டாங்க. இன்னும் சில பேர் பொம்மைக்கு ஆர்டர் கொடுத்தாங்க. அதுக்குப் பிறகுதான் எனக்கு இந்தத் தொழில் மேல ஒரு பிடிப்பு வந்துச்சு. நிறைய செய்ய ஆரம்பிச்சுட்டேன். காலப்போக்குல என் பிள்ளைகளும் கத்துக்கிட்டாங்க. எல்லாரும் சேர்ந்து செஞ்சோம். கடைகள்ல இருந்து நேரடியா வந்து கொள்முதல் செஞ்சுக்கிட்டுப் போனாங்க. நாய், பூனை, அன்னப்பறவை, குரங்கு, ஒட்டகச்சிவிங்கி, டைனோசர், ஜோக்கர், குழந்தை, கிறிஸ்துமஸ் தாத்தானு நானே கற்பனையில பல உருவங்களை உருவாக்கினேன். நல்ல வரவேற்புக் கிடைச்சுச்சு.

கடைக்காரங்க மட்டுமில்லாம சுத்தியுள்ள கிராமங்கள்ல இருந்து பெண்கள், குழந்தைகள் நேரடியாவே வீட்டுக்கு வந்து பொம்மைகள் வாங்கத் தொடங்கினாங்க. அப்படி வர்றவங்களுக்கு அவங்க பேரையே பொம்மையில நெஞ்சு கொடுத்தேன். வெளிநாட்டுக்கு அனுப்புற வியாபாரிகளும் வந்து வாங்கினாங்க.  அடுத்து, தொழிலைக் கொஞ்சம் விரிவுபடுத்தலாமேன்னு நினைச்சேன். பக்கத்துல இருக்கிற பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தேன். இப்போ 20க்கும் மேற்பட்ட பெண்கள் இந்தப் பகுதியில இந்தத் தொழிலைச் செய்றாங்க. அவங்களும் இப்போ பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. எங்க ஊர்ல இது ஒரு குடிசைத் தொழில் மாதிரி வளர்ந்துக்கிட்டிருக்கு.

ரொம்ப இலகுவான தொழில். வீட்டு வேலையை முடிச்சுட்டு கிடைக்கற நேரத்துல செய்யலாம். கற்பனை வளமும் ஓவியத் திறமையும் இருந்தா புதுசு புதுசா பொம்மை வடிவங்களை மாத்தலாம். வருமானமும் கூடும். காலையில தொடங்கி சாயங்காலம் வரைக்கும் வேலை செஞ்சா ஒருத்தர் 6 பெரிய பொம்மைகள் செய்யலாம். சின்ன பொம்மைன்னா 100 கூட செய்ய முடியும். பயன்படுத்துற பொருட்களோட விலை கம்மிதான். கிரியேட்டி விட்டிக்கும் பொறுமையான வேலைப்பாட்டுக்கும்தான் விலை. ஆர்வத்தோட செஞ்சா நல்ல லாபம் இருக்கு.   

இந்தத் தொழில்ல எதுவுமே வீணில்லை. பெரிய பொம்மைகள் செய்கிற போது, வெட்டி எறியற சின்னத் துண்டுத் துணிகள்ல கார்ல தொங்க விடுற சின்னச் சின்ன பொம்மைகள் செய்யலாம். முதல்ல சாட் பேப்பர்ல உருவங்களை வரைஞ்சு கட் பண்ணிக்கணும். பிறகு பர் துணியை வச்சு அந்த அளவுக்கேற்ற மாதிரி வெட்டி ஒரே ஒரு இடத்தை விட்டுட்டு மற்ற பகுதிகளை ஊசியால தைக்கணும். உள்ளே டெரிகாட்டன் பஞ்சு திணித்து அந்தப் பகுதியையும் தச்சுட்டா முடிஞ்சுச்சு. சொல்ல எளிமையா இருந்தாலும் ஒவ்வொரு வேலையையும் கவனமா செய்யணும். இல்லைன்னா ஃபினிஷிங் இருக்காது... மேடு பள்ளமாயிடும்... பொம்மையோட வடிவம் குலைஞ்சிடும்.

இன்னைக்கு பரிசு கொடுக்கிற கலாசாரம் அதிகமாயிருக்கு. பெண்கள், குழந்தைகள் இந்த மாதிரி பொம்மைகளை விரும்பி வாங்குறாங்க. பொம்மையைப் பார்த்ததும் மலர்ந்து சிரிக்கிற குழந்தைகளோட முகத்தைப் பார்க்கிறப்போ மனசுக்கு நிறைவா இருக்கு.இப்போ ரெண்டு பிள்ளைகளும் வளர்ந்துட்டாங்க. திருமணமும் முடிஞ்சிடுச்சு. மூத்தவனுக்கு ஒரு நிதி நிறுவனத்தில வேலை. சின்னவன் மெடிக்கல் ரெப். மூத்த மருமகள் கல்லூரிப் பேராசிரியை. சின்ன மருமகள் ஆசிரியை. ரெண்டு பேருமே என் தொழிலுக்கு உதவியா இருக்காங்க. ஓய்வு நேரத்துல, கூட உக்காந்து அவங்களும் பொம்மை செய்வாங்க. அவங்க மூலமாவும் நிறைய பொம்மைகள் விற்பனையாகுது.

தன்னம்பிக்கையை மட்டும் இழக்காம இருந்தா வாழ்க்கையில் வர்ற எல்லாச் சோதனைகளையும் கடந்திடலாம். இது நான் அனுபவப்பூர்வமா கத்துக்கிட்ட பாடம். இன்னைக்கு நிறைய பேருக்கு நான் இந்த பாடத்தை நடத்திக்கிட்டிருக்கேன். அந்த வகையில என்னோட வாழ்க்கை கொஞ்சம் அர்த்தமுள்ளதா மாறியிருக்கு!’’ - புன்முறுவலோடு சொல்கிறார் சிவகாமசுந்தரி.

திடீர்னு தனிச்சு நின்னப்போ திணறிட்டேன். பிள்ளைகள்தான் ஆதரவா நின்னாங்க. கொஞ்ச நாள் தையல் தொழில் பாத்தேன். அதுக்கும் போட்டிகள்
வந்திடுச்சு...‘‘ரொம்ப இலகுவான தொழில். வீட்டு வேலையை முடிச்சுட்டு கிடைக்கற நேரத்துல செய்யலாம். கற்பனை வளமும் ஓவியத்திறமையும் இருந்தா புதுசு
புதுசா பொம்மை வடிவங்களை மாத்தலாம்...’’

- வெ.நீலகண்டன்
படங்கள்: சி.எஸ்.ஆறுமுகம்