மலாலா மேஜிக் - 4



துப்பாக்கியின் குரல்

‘ஏன் பெண்களின் நிலை இவ்வளவு மோசமாக இருக்கிறது’ என்று மலாலா கவலை கொண்டபோது ஜியாவுதின் பொறுமையாகச் சமாதானப்படுத்தினார். ‘இந்த அளவுக்காவது இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டுக் கொள் மலாலா. பக்கத்தில் ஆப்கானிஸ்தானில் நிலைமை இதைவிடப் பலமடங்கு மோசம்’. எந்த அளவுக்கு மோசம் என்பதையும் அவர் மலாலாவுக்குத் தெளிவுபடுத்தினார்.


‘இங்கே முக்காடு போட்டுக் கொண்டாவது பெண்கள் வெளியில் வரமுடிகிறது. திரைமறைவில் இருந்தாலும் வெளிச்சத்தைக் கொஞ்சமேனும் பார்க்க முடிகிறது. அங்கே அதுவும் சாத்தியமில்லை. பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்று கேள்விப்பட்டதும் அவர்கள் பள்ளியைக் கொளுத்திவிட்டார்கள். பெண்கள் அங்கே சிரிக்கக் கூடாது. கையில் உள்ள மருதாணி வெளியில் தெரியாமல் மறைந்துவிட்டதே என்று நீ வருந்துகிறாய். அங்கே நகத்துக்கு வண்ணம்
பூசியதற்காகப் பெண்களை அவர்கள் அடித்திருக்கிறார்கள். சிறையில் தள்ளியிருக்கிறார்கள்...’

யார் அந்த அவர்கள் என்று மலாலா கேட்டபோது தாலிபான் என்று பதிலளித்தார் ஜியாவுதின். மலாலாவின் உடல் நடுங்கியது. அதே நேரம் ஒரு சிறிய ஆறுதலும் பிறந்தது. நல்லவேளை, நான் பாகிஸ்தானில் இருக்கிறேன். தாலிபான் இங்கே இருந்திருந்தால் அப்பா சொன்னதுபோல நிலைமை விபரீதமாக அல்லவா இருந்திருக்கும்? நகத்தை அழகுபடுத்தியதற்கே அடி என்றால் பார்த்துப் பார்த்து அலங்கரித்துக் கொள்ளும் என்னை அவர்கள் என்னதான் செய்ய மாட்டார்கள்?

உண்மையில் தாலிபான் ஆப்கானிஸ்தானில் தொடங்கி ஆப்கானிஸ்தானோடு முடிந்துவிடும் ஓர் அமைப்பு அல்ல என்பதும் பாகிஸ்தானில், குறிப்பாக ஸ்வாட் பள்ளத்தாக்கில் தாலிபானின் நிழல் அழுத்தமாகவே படிந்திருந்தது என்பதும் அப்போது மலாலாவுக்குத் தெரியாது. ஸ்வாட்  அமைந்திருக்கும் கைபர் பக்துன்க்வா மாவட்டத்துக்கு அருகிலுள்ள ஒரு பகுதி, ஃபடா (ஃபெடரலி அட்மினிஸ்டர்டு டிரைபல் ஏரியா) என்று அழைக்கப்படும் பழங்குடிப் பிரதேசம். தாலிபானின் ஒரு பிரிவு இங்கு மையம் கொண்டிருந்தது. 7 மாவட்டங்களையும் 6 சிறிய நிர்வாகப் பிரதேசங்களையும் உள்ளடக்கிய ஒரு நிலப்பரப்பு ஃபடா. இங்கு பெரும்பாலும்
பஷ்டூன்களே அதிகம் வசிக்கின்றனர்.

இங்கு மட்டுமல்ல... கைபர் பக்துன்க்வா தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை பஷ்டூன்கள் பரவலாக வசிக்கின்றனர். இருந்தும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அடையாளங்களையும் மீறிய தனித்த ஓர் அடையாளத்தை பஷ்டூன்களிடம் நீங்கள் காண முடியும். கலாசாரம், கலை, இலக்கியம், வாழ்க்கை முறை, விழுமியங்கள் என்று அனைத்திலும் பஷ்டூன்கள் ஆப்கானிஸ்தானியரிடம் இருந்தும் பாகிஸ்தானியரிடம் இருந்தும் பெரிதும் வேறுபட்டிருந்தனர். அதில் அவர்களுக்குப் பெருமிதமும் உண்டு.

பழமையானவை எல்லாமே பெருமிதத்துக்குரியவை அல்ல. பஷ்டூன்களின் நூற்றாண்டுகால பழக்கவழக்கங்களில், செயல்பாடுகளில், சிந்தனைகளில் பிசகுகளும் பிற்போக்கு அம்சங்களும் கலந்தே இருந்தன. பெண்களின் நிலை ஓர் உதாரணம் மட்டுமே. நாம் அனைவரும் சமம் என்கிறது பஷ்டூன்களின் சட்டமான பஷ்டூன்வாலி. இருந்தும் ஓர் ஆணையும் பெண்ணையும் சமமாக அவர்களால் சிந்தனையளவிலும் கூட பாவிக்க முடியாது. இஸ்லாத்தின் வருகைக்கு முன்பிருந்த சமூகத்தின் பண்பாட்டுக்கூறுகளை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதன் விளைவு இது.

பஷ்டூன்களின் பிற்போக்குத்தனத்துக்குக் காரணம் இஸ்லாம் என்று சிலரும் இஸ்லாத்தின் தாக்கம் போதுமான அளவுக்கு இல்லாததுதான் காரணம் என்று வேறு சிலரும் வாதிடுகிறார்கள். இன்னமும் தொடர்ந்து கொண்டிருப்பதால் இந்த வாதத்தில் யார் வென்றார்கள் என்பது தெரியவில்லை. ஒரு பஷ்டூன் பொதுவாக இப்படித் தன்னை அறிமுகப்படுத்துவதை நாம் பார்க்கலாம். ‘நான் 64 ஆண்டுகளாக ஒரு பாகிஸ்தானியனாக இருக்கிறேன். 14 நூற்றாண்டுகளாக ஓர் இஸ்லாமியராக இருக்கிறேன். ஆனால், 5,000 ஆண்டுகளாக நான் ஒரு பஷ்டூன். இப்போது சொல்லுங்கள், எது என் அடையாளம்? எது நான்?’

மலாலாவால் வெளிப்படையாகக் காண முடிந்த ஒரே பஷ்டூன் அடையாளம் வறுமை மட்டும்தான். ஐந்தாயிரம் ஆண்டு கலாசாரத்தைவிடவும் பலம் கொண்டது வறுமை என்பது முதல் பார்வையிலேயே விளங்கிவிட்டது. ஒரு நாள் தன்னுடைய காலணி அழுக்காகிவிடக் கூடாது என்று கவனத்துடன் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து மலாலா நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்தச் சிறுமியைக் கண்டார். கிட்டத்தட்ட மலாலாவின் வயதுதான். தரையில் அமர்ந்து குப்பையைக்
கிளறிக் கொண்டிருந்தார். மலாலாவைப் போல மூக்கைப் பொத்திக் கொள்ளவில்லை. உடை அழுக்காகிவிடும் என்று அஞ்சவில்லை. இதுவே என் பணி என்பதாகச் சிரத்தையுடன் கிளறி தனக்குத் தேவையானதை மட்டும் எடுத்து தனியே  சேகரித்துக் கொண்டிருந்தாள். நெருங்கி பார்த்தபோது அவள் உடல் முழுவதும் அழுக்கும் சிரங்கும் பரவியிருந்ததைக் கண்டார் மலாலா. சில அடிகள் தள்ளி சில சிறுவர்கள் காந்தத்தை வைத்து இரும்புத் துகள்களை வேட்டையாடிக் கொண்டிருந்தார்கள்.

இவர்கள் ஏன் பள்ளிக்குப் போகவில்லை? இவர்களுக்கு ஏன் சரியான உடைகள் இல்லை? இவர்கள் ஏன் அழுக்காக இருக்கிறார்கள்? இப்படித் தொடர் கேள்விகள் எழும்போதெல்லாம் மலாலா ஒருவரிடம்தான் ஓடுவார். ‘போ, என் வேலையைக் கெடுக்காதே’ என்று அவர் மட்டும்தான் ஒதுக்கித்தள்ள மாட்டார். உட்கார வைத்து அவர் ஒருவர்தான் எல்லாவற்றுக்கும் பொறுமையாகப் பதிலளிப்பார். அன்றும் அவரிடம்தான் ஓடினார் மலாலா.

ஜியாவுதின் வறுமையை மலாலாவுக்கு முறைப்படி அறிமுகப்படுத்தினார். கல்வி அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் என்பது உண்மைதான். ஆனால், அது வயிற்றை உடனே நிரப்பாது. தாக்குப்பிடித்து, முட்டி மோதி போரிடுபவர்களை மட்டுமே கல்வி அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்த்திச் செல்கிறது. அந்தப் போருக்குத் தயாராவதற்கு முன் நீ உன் வயிற்றை முதலில் நிரப்பியாக வேண்டும். அதைச் செய்யாவிட்டால் அந்தப் பூதம் உன்னைத் தின்னத் தொடங்கிவிடும். அழுக்கு, நாற்றம், அவமானம், கோபம், வசை எதுவும் உன்னைக் காயப்படுத்தாது. பசி இருக்கும் இடத்தில் அதைத் தவிர இன்னொன்று உயிர்த்திருப்பதில்லை.
மலாலாவுக்கு 8 வயதானபோது ஜியாவுதினின் குஷால் பப்ளிக் ஸ்கூலில் எண்ணூறுக்கும் அதிகமான மாணவர்கள் இணைந்திருந்தனர். 3 பகுதிகளாகப் பள்ளி விரிவடைந்திருந்தது. ஒன்று ஆரம்பநிலைப் பள்ளி.

மற்ற இரண்டும் உயர்நிலைப் பள்ளிகள். அதில் ஒன்று பெண்களுக்கானது. அதே பள்ளியில்தான் மலாலாவும் சேர்ந்து படித்துக் கொண்டிருந்தார். தனது வகுப்பறையில் எப்படிப்பட்ட மாணவர்கள் வருகிறார்கள், அவர்களில் யார் வசதியானவர்கள், யாரெல்லாம் வசதி குறைபாடு கொண்டவர்கள் என்று யோசித்துப் பார்த்தபோது அப்பா சொல்ல வந்தது என்ன என்பது மலாலாவுக்குப் புரிந்தது. அவர்கள் அனைவரும் கட்டணம் கட்டி படிப்பவர்கள் இல்லை. அவர்களில் பலரிடம் அப்பா கட்டணம் கேட்டது கூட இல்லை. கேட்டாலும் அவர்களில் சிலரால்தான் கொடுக்க முடியும். அதனால்தான் இத்தனைப் பள்ளிக்கூடங்கள் நடத்தியபோதும் அப்பாவின் கைகளில் சேமிப்பு என்று எதுவும் பெரிதாகத் தங்குவதில்லை என்பது மலாலாவுக்குப் புரிந்தது.

இது போதாதென்று, கொஞ்சம் வசதி படைத்தவர்கள் தங்கள் குழந்தைகளை ஜியாவுதினின் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள். அழுக்கு உடை ஏழைகளுடன் தங்கள் குழந்தைகள் சேர்ந்து படித்தால் அவர்களுக்கு ஏதாவது ஆகிவிடும் அல்லவா? தவிரவும், இந்த கெட்ட, அழுக்குக் குழந்தைகளின் பெற்றோர் நல்ல, சுத்தமான குழந்தைகளின் பெற்றோரின் வீட்டில் வேலை செய்பவர்கள். எஜமானர்களின் குழந்தைகள் எஜமானர்கள்... வேலைக்காரர்களின் குழந்தைகள் வேலைக்காரர்கள் என்னும் எளிய சூத்திரத்தின்படி, எஜமானக் குழந்தைகளும் வேலைக்காரக் குழந்தைகளும் ஒரே இடத்தில் அருகருகில் அமர்ந்து ஒன்றாகக் கலந்து உறவாடி ஒரே பாடத்தைப் படிப்பது பாவமல்லவா?  இதயம் உள்ளவர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியுமா?

இதயம் உள்ளவர்களால் உண்மையிலேயே பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு சம்பவம் 2005 அக்டோபர் 8 அன்று நடைபெற்றது. ரிக்டர் அளவுகோலில் 7.6 என்று பதிவான ஒரு நிலநடுக்கம் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பகுதிகளைத் தாக்கியது. அப்போது மலாலா பள்ளியில் இருந்தார். நிலநடுக்கம் அந்தப் பகுதி களுக்குப் புதிதல்ல என்ற போதும், இந்த முறை வழக்கத்தைவிடவும் கடினமாகவும் உக்கிரமாகவும் இருந்ததால் உடனடியாகக் குழந்தைகள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மலாலா வீட்டுக்கு வந்தபோது அம்மா வீட்டு வாசலில் அமர்ந்து கண்ணீருடன் குர்ஆன் வசனங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அன்று இரவு வரை மாறி மாறி நிலம் அதிர்ந்து கொண்டே இருந்தது. இதோ மறைந்துவிடும், அதோ போய்விடும் என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தாலும் கிட்டத்தட்ட ஒரு
மாதத்துக்கு அதிர்வுகள் நீடித்தன.மலாலாவின் மிங்கோரா கிராமம் அதிக இழப்பைச் சந்திக்கவில்லை என்றாலும், அவருடைய உறவினர்கள் வசித்த ஷங்லா கடும் பாதிப்புக்கு உள்ளானது. பாகிஸ்தானின் பல பகுதிகளும் காஷ்மீரும் கூட பாதிப்படைந்தது. சிறிய கிராமம் என்பதால் அழிவின் முழு பரிமாணத்தைப் போகப்போகத்தான் மிங்கோரா கிராமத்தினர் அறிந்து கொண்டனர். மொத்தத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கொன்றொழித்து, 40 லட்சம் பேரின் இருப்பிடங்களை நாசமாக்கி, பெரும் அழிவொன்றை உறுதி செய்திருந்தது அந்த நிலநடுக்கம்.

இப்படியொரு அழிவு தாக்கியதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட முதல் சிந்தனை, உலகம் இத்துடன் முடிந்துவிட்டது என்பதுதான். இதுவே நமக்குத் தோன்றும் கடைசி சிந்தனை என்று அவர்கள் நினைத்துக் கொண்டனர். பெருங்கற்கள் உருளத் தொடங்கும்போது, மரங்கள் வேறோடு சாய்ந்தபோது, வீட்டுக்கூரைகள் தண்ணீரில் மிதந்து சென்றபோது, கால்களுக்குக் கீழுள்ள தரை இடிபாடுகளாக, சிதிலங்களாக சிதறியபோது அவர்களால் வேறெப்படியும் யோசிக்க முடியவில்லை. உலகம் அழியவில்லை என்பது தெரிந்தபோது, சூரியன் அதே பிரகாசத்துடன் மறுநாள் உதித்தபோது, நாம் இன்னமும் அழியவில்லை என்று உணர்ந்தபோது, வாழும் உத்வேகம் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. குர்ஆனின் வசனங்களை உதடுகள் அனிச்சையாக உச்சரிக்கத் தொடங்கிவிட்டன.

உதவிக்கு அவர்கள் காத்திருந்தபோது சில கரங்கள் நீண்டுவந்தன. பாகிஸ்தான் அரசு வழக்கம்போல பொறுமையாகத்தான் வந்து சேர்ந்தது. முதலில் வந்து சேர்ந்தவர்கள் மீட்புப் பணியாளர்கள். சடலங்களை எடுத்துச் செல்வது, காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் அளிப்பது, இடிபாடுகளை அப்புறப்படுத்துவது, புதிய இருப்பிடங்களைக் கட்டமைப்பது என்று அவர்கள் மும்முரமாக இயங்கினார்கள். வருத்தத்தில் ஆழ்ந்திருப்பவர்களுக்காகப் பொதுவெளியில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இழப்பைச் சந்தித்த குடும்பங்களுக்கு அவர்களே ஆறுதலும் சொன்னார்கள்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் என்று கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேர் அதற்குள் திரண்டுவிட்டனர். அங்கே பொதுவழக்கம் என்னவென்றால் ஒரு குழந்தை தன் பெற்றோரை இழந்துவிட்டால் குடும்பத்தின் உறவினர்கள் அந்தக் குழந்தையை உடனே தத்தெடுத்துக் கொண்டு விடுவார்கள். இந்த நிலநடுக்கத்தில் பெற்றோரோடு சேர்த்து உறவினர்களையும் பல குழந்தைகள் இழந்துவிட்டதால் அவர்களை அரவணைத்துக்கொள்ள யாருமில்லை. மீட்புப் பணியாளர்கள்தாம் அந்தக் குழந்தைகளையும் தத்தெடுத்துக்கொள்ள வேண்டி வந்தது.

தன்னலம் கருதாது பாய்ந்து வந்து உதவிய இந்தப் பணியாளர்கள் ‘தெஹ்ரிக் இ நிஃபாஸ் இ ஷரியா இ மொஹமதி’ என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள். சுருக்கமாக, டிஎன்எஸ்எம். இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை வலியுறுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு என்பது இதன் பொருள். சுஃபி முஹமத் என்பவரும்
அவருடைய மருமகனான மௌலானா ஃபசுல்லா என்பவரும் இந்த அமைப்பைத் தலைமை தாங்கி நடத்தி வந்தனர். பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் செயல்பட்டு வந்த இயக்கத்தினர் அப்போது ஆரம்ப கட்ட நிலையில் இருந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சுமார் இரண்டாண்டுகள் கழித்த பிறகு ஸ்வாட் பள்ளத்தாக்கின் பெரும்பகுதி அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்துவிட்டது.

ஷரியத் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு மக்கள் இயங்க வேண்டும் என்பதுதான் டிஎன்எஸ்எம் இயக்கத்தின் விருப்பம். இந்த விருப்பத்தை அவர்கள் இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்தி அடையத் துடித்தனர். முதல் வழி, நேசக்கரம் நீட்டுவது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் அவர்கள் இறங்கியதற்குக் காரணம் இதுதான். இரண்டாவது வழி, துப்பாக்கியை நீட்டுவது. செப்டம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து, 2001ல், அமெரிக்கா ‘தீவிரவாதத்துக்கு எதிரான போர்’ என்னும் பெயரில் தொடர் தாக்குதல்களைத் தொடங்கிய போது அதன் முதல் பெரும் இலக்காக ஆப்கானிஸ்தான் அமைந்தது. அப்போது அமெரிக்கப் படைகளை எதிர்கொண்டு வீழ்த்த டிஎன்எஸ்எம் தன் படைகளை அங்கே அனுப்பி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரை அமெரிக்கா
ஆப்கானிஸ்தான் மீது மட்டும் போர் தொடுக்கவில்லை. முஸ்லிம்களின் இதயமாகத் திகழும் இஸ்லாத்தின் மீதும் அவர்கள் போர் தொடுத்திருந்தனர்.
இஸ்லாமியரைக் காக்க வேண்டுமானால் இஸ்லாத்தைக் காப்பாற்றியாக வேண்டும். அதற்காக வேனும் அமெரிக்காவை எதிர்த்தாக வேண்டியது அவசியம்.

டிஎன்எஸ்எம் இயக்கத்தினரைத் தீவிரவாதிகள் என்று பாகிஸ்தான் அரசு கருதினாலும், அவர்கள் தங்களைத் தேசியவாதிகளாகத்தான் கருதிக் கொண்டனர். அவர்களைப் பொறுத்த வரை பாகிஸ்தான் அரசுதான் தீவிரவாத அரசு. சகோதர இஸ்லாமியர்கள் ஓர் அந்நிய சக்தியால் தாக்கப் படும்போது பாகிஸ்தான் அமைதி காப்பதும், அதைவிட மோசமாக அந்த அந்நிய சக்திக்கே ஆதரவாக இருப்பதும்தான் தீவிரவாதம் என்று கருதியது டிஎன்எஸ்எம். ஆனால், அவ்வாறு நினைக்காத பர்வேஸ் முஷரஃப் டிஎன்எஸ்எம் இயக்கத்தை ஜனவரி 2002ல் தடை செய்தார். சுஃபி முஹமத் சிறை பிடிக்கப்பட்டார். அவர் இடத்தை நிரப்ப அவருடைய மருமகன் வந்து சேர்ந்தார். இயக்கத்தின் செயல்பாடுகள் அதற்குப் பிறகு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை.

இந்தப் பின்னணியில், 2005ல் நிலநடுக்கம் ஏற்பட்டபோது டிஎன்எஸ்எம் இயக்கம் அதனைத் தனக்கான அற்புத வாய்ப்பாக நினைத்து தாவி வந்து பயன்படுத்திக் கொண்டது. இந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தினால் பல்லாயிரக்கணக்கானவர்களை ஒருங்கிணைக்க முடியும். ‘சகோதரர்களே, சகோதரிகளே, நீங்கள் பாதை மாறிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். ஷரியத் சட்டத்திலிருந்து விலகிச் செல்வதால்தான் கடவுள் இந்தத் தண்டனையை அளித்துள்ளார்’ என்று அவர்களிடம்
பிரசாரம் மேற்கொள்ள முடியும். அவர்களை வென்றெடுத்து, அவர்கள் மூலம் இயக்கத்துக்கு பலம் கூட்ட முடியும். இவை போக, ஆயிரக்கணக்கான குழந்தைகள் கிடைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம் சிந்தனைகளைப் புகட்ட முடியும். நம்மில் ஒருவராக அவர்களை மாற்ற முடியும். டிஎன்எஸ்எம் இயக்கத்தினருக்கு நன்றாகத் தெரிந்த உண்மை ஒன்றுண்டு. அழிவு என்பது முடிவல்ல... அது ஓர் அற்புத ஆரம்பம்.

ஒரு குழந்தை தன் பெற்றோரை இழந்துவிட்டால் குடும்பத்தின் உறவினர்கள் அந்தக் குழந்தையை உடனே தத்தெடுத்துக்கொண்டு விடுவார்கள். இந்த
நிலநடுக்கத்தில் பெற்றோரோடு சேர்த்து உறவினர்களையும் பல குழந்தைகள் இழந்துவிட்டதால் அவர்களை அரவணைத்துக் கொள்ள
யாருமில்லை.

இவர்கள் ஏன் பள்ளிக்குப் போகவில்லை? இவர்களுக்கு ஏன் சரியான உடைகள் இல்லை? இவர்கள் ஏன் அழுக்காக இருக்கிறார்கள்? இப்படித் தொடர் கேள்விகள் எழும் போதெல்லாம் மலாலா ஒருவரிடம்தான் ஓடுவார். ‘போ, என் வேலையைக் கெடுக்காதே’ என்று அவர் மட்டும்தான் ஒதுக்கித்தள்ள மாட்டார்.


(மேஜிக் நிகழும்!)