உங்களாலும் பாட முடியும்



பாடகி மேகா

‘சங்கீதம் பாட ஞானமுள்ளவர்கள் வேண்டும்...’ என ஹீரோயின் பாட...‘சங்கீதம் பாட கேள்வி ஞானம் அது போதும்...’ என ஹீரோ எதிர்பாட்டு பாடும் திரைப்படப் பாடல் வெகு பிரபலம்.உண்மையில் ஞானமும் கேள்வி ஞானமும் இருந்தாலுமே எல்லோராலும் பாட முடிவதில்லை. எங்கேயோ ஏதோ ஒன்று தடுக்கிறது. அந்தத் தடையைக் கண்டுபிடித்துத் தகர்த்தெறிந்து, இசையில் விருப்பமுள்ள யாரையும் அதில் நிபுணத்துவம் பெற வைக்கிற முயற்சியில் இறங்கியிருக்கிறார் பாடகி மேகா. ‘நான் அவன் இல்லை’ படத்தில் ‘காக்க... காக்க...’ பாடலில் தொடங்கி, லேட்டஸ்ட்டாக ‘தலைவா’வில் ‘சொல்... சொல்...’, ‘யான்’ படத்தில் ‘நீ வந்து போனது’ வரை இவர் பெயர் சொல்ல ஏகப்பட்ட ஹிட்ஸ்.அப்படி என்னதான் செய்கிறார் மேகா?


‘‘சமீப காலமா நிறைய ரியாலிட்டி ஷோஸ் வந்திட்டிருக்கு. ஷோவோட ஆரம்பத்துல ஒரு போட்டியாளர் பாடறதுக்கும் சில எபிசோடு போன பிறகு பாடறதுக்கும் அவங்க குரல்ல பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடியுது. நிச்சயமா அதுக்குப் பின்னாடி கடுமையான பயிற்சியும் முயற்சியும் இருக்கிறதை மறுக்க முடியாது. இந்த வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காது. சங்கீதத்துல ஆர்வம் இருக்கு... ஆனா, பாட முடியலைங்கிறவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களை ஸ்ருதி, தாளம்
தப்பாம பாட வைக்கிற முயற்சியாதான் எனக்குத் தெரிஞ்ச என்.எல்.பி. (நியூரோ லிங்விஸ்டிக் புரோகிராம்) மூலமா பண்ணிட்டிருக்கேன்...’’
என்கிற மேகா, அதைப் பற்றிய விளக்கங்களைத் தொடர்கிறார்.

‘‘குழந்தையா இருக்கும்போது யாரும் நமக்கு நடக்க சொல்லிக் கொடுக்கிறதில்லை. பேசக் கத்துக் கொடுக்கிறதில்லை. நாமா இயல்பா பண்ற
விஷயங்கள் அதெல்லாம். இதுமாதிரி பலதையும் அடுத்தவங்களைப் பார்த்துக் கத்துக்கிற திறமை மனுஷங்களான நமக்கு உண்டு. சங்கீதத்துக்கும் இது பொருந்தும். அடிப்படை சங்கீதத்தை வேணும்னா யாராவது குரு மூலமா கத்துக்கலாம். சித்ரா ஒரு பாட்டைப் பாடும் போது அதைக் கேட்கற நாம உருகிப் போறோம். எஸ்.பி.பி. பாடும் போது வேற ஒரு உலகத்துக்குப் போறோம். அவங்க பாடற பாட்டை யார் வேணா பாடலாம். அவங்களை மாதிரியே பாடணும்னா, அதைக் கத்துக் கொடுக்க யாரும் இல்லை.

2007ல ‘நான் அவன் இல்லை’ படம் மூலமா விஜய் ஆண்டனி மியூசிக்ல பின்னணிப் பாடகியா அறிமுகமானேன். அப்புறம் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஜி.வி.பிரகாஷ், தமன் உள்பட கிட்டத்தட்ட எல்லா மியூசிக் டைரக்டர்ஸுக்கும் பாடிட்டேன். பாட வந்த புதுசுல எனக்கும் பின்னணி பாடறது பத்தி பெரிசா நுணுக்கங்கள் தெரியாது. ஆனாலும், நான் பார்த்து வியந்த பாடகர்களைப் போல பாடணும், சீக்கிரமா என்னை அடுத்த லெவலுக்கு உயர்த்திக்கணும்ங்கிற தேடல் இருந்தது. சங்கீதக் குடும்பத்துலேருந்து வந்தவள்ங்கிறதால எனக்கு ரொம்ப ஈஸியா பாட வந்தது. கஷ்டமே இல்லாம ஒரு இடத்துக்கு வந்துட்டேன்.
சிலருக்கு சங்கீதம்னா உயிரா இருக்கும்.

ஆனாலும் பாடினாங்கன்னா ஸ்ருதியோ, தாளமோ சேராது. எந்தக் கஷ்டமும் இல்லாம என்னால பாட முடியறப்ப, சங்கீதத்தை இவ்வளவு நேசிக்கிற
இன்னொருத்தரால முயற்சிகள் எடுத்த பிறகும்கூட சரியா பாட முடியாததுல எனக்கு உறுத்தல் இருந்தது. ‘உனக்கெல்லாம் பாட வராது’னு அவங்களை ஒதுக்கிறதுல எனக்கு உடன்பாடில்லை. அது அவங்களை மன ரீதியா பெரிய அளவுல பாதிக்கும். ஏற்கனவே என்.எல்.பி. பிராக்டிஸ் பண்ணிட்டிருந்த எனக்கு, அதே டெக்னிக்கை வச்சு, சங்கீதத்துக்கும் ஏதாவது பண்ண முடியுமானு தோணினது. முதல் கட்ட முயற்சியா என் விஷயத்துலயே அதை ட்ரை பண்ணிப் பார்த்தேன்.

என்னால கிளாசிக்கல் மியூசிக்கும் பாட முடியும். வெஸ்டர்ன், ஹிந்துஸ்தானியும் பாட முடியும். ஆனா, எனக்குப் பிடிச்ச ஒரு இசைக்கலைஞர் மாதிரியே அதே நுணுக்கத்தோட பாட முடியுமாங்கிறதை டெஸ்ட் பண்ண என்.எல்.பி. பயிற்சியில ஒரு பிரிவான மைக்ரோ மஸுல் மிரரிங் டெக்னிக்கை ட்ரை பண்ணினேன். எனக்குப் பிடிச்சவங்களோட மியூசிக் புரோகிராமுக்கு போவேன். பார்வையாளரா உட்கார்ந்து கவனிப்பேன்.

மத்தவங்களுக்குத்தான் நான் அங்கே பார்வையாளர். ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் நான் மைக்ரோ மஸுல் மிரரிங் டெக்னிக் மூலமா எனக்கு
முன்னாடி பாடிட்டிருக்கிற என்னோட விருப்பமான அந்த இசைக்கலைஞராகவே என்னைக் கற்பனை பண்ணிப்பேன். மனசளவுல அவங்களாகவே மாறியிருப்பேன்.
திரும்பத் திரும்ப இந்த விஷயத்தைப் பல முறை செய்யறபோது, என்னையும் அறியாம என்னோட மூளைக்குள்ள அது பதிவாயிடும்.

பின்னணி பாடறதுன்னா என்னன்னே தெரியாம வந்த எனக்கு, பர்சனலா இந்த விஷயம் மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுத்தது. இன்னிக்கு நான் பாடற விதத்துல, என்னோட குரல்ல, மொத்தத்துல என் மியூசிக்ல பெரிய வித்தியாசத்தை உணர முடியுது. அதை மத்தவங்களும் பார்த்துட்டுப் பாராட்டறாங்க. எனக்கு ஹெல்ப் பண்ணின இந்தப் பயிற்சியை சங்கீத ஆர்வம் உள்ள மத்தவங்களுக்கும் அறிமுகப்படுத்த ஆரம்பிச்சிருக்கேன்.ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கு என்னோட இந்த முயற்சி பத்தி மெயில் அனுப்பினேன். நிறைய தகவல் பரிமாற்றங்களுக்குப் பிறகு அவரும் இதை டெஸ்ட் பண்ணிப் பார்க்க சம்மதிச்சார். ‘சன்ஷைன் ஆர்க்கெஸ்ட்ரா’ என்ற பேர்ல இசையில ஆர்வமுள்ள ஏழைக் குழந்தைங்களுக்கான மியூசிக் ஸ்கூல் வச்சிருக்கார். அங்கே படிக்கிற பிள்ளைங்களுக்கு மியூசிக் பிடிச்சிருந்தாலும் அதைப் பத்தின பெரிய சீரியஸ்னஸ் இல்லை.

அடிக்கடி லீவு எடுக்கிறது, சரியா பிராக்டிஸ் பண்ணாததுனு நிறைய பிரச்னைகள்... அந்தக் குழந்தைங்களுக்கு இந்த என்.எல்.பி. பயிற்சியை சொல்லித் தரச் சொன்னார் ரஹ்மான். அட்வைஸோ... லெக்சரோ எதுவும் கிடையாது. முதல் சில வகுப்புகள்ல அந்தக் குழந்தைங்கக்கிட்ட பேசினேன். மியூசிக் கிளாஸ்ல
இருக்கும்போது மனசை அலைபாய விடாம எப்படி கட்டுப்பாட்டுக்குள்ள வச்சுக்கிறது, இசைக்குள்ள மட்டும் மனசைச் செலுத்தறது எப்படினு சொல்லித் தந்தேன். முதல் சில வகுப்புகள்லயே அந்தக் குழந்தைங்ககிட்ட பெரிய மாற்றத்தைப் பார்க்கிறதா டீச்சர்ஸ் சொன்னாங்க.

8 மாசம் கழிச்சு அந்தக் குழந்தைங்களை சன்ஷைன் ஆர்க்கெஸ்ட்ராவா வெளி உலகத்துக்கும் அறிமுகப்படுத்தினார் ரஹ்மான். சமீபத்துல ரஹ்மானோட கச்சேரியில அவர்கூட சேர்ந்து பாடற அளவுக்கு அந்தக் குழந்தைங்க வளர்ந்திருக்காங்க. ‘நிச்சயம் ஒரு மாற்றம் தெரியுது’னு ரஹ்மானும் என்னை வாழ்த்தினார்.
6 நாள் பயிற்சியான இதுல முதல் நாளே மக்களை ஸ்டேஜ்ல பாட வைப்பேன். அப்புறம் 4 நாள் அவங்களுக்கு மைக்ரோ மஸுல் மிரரிங் பயிற்சி. 6வது நாள் மறுபடி மேடையில ஏறிப் பாடச் சொல்லும்போது, அவங்கக்கிட்ட வியப்பான மாற்றத்தைப் பார்க்க முடியும். வெறும் ஆறே நாள்ல எப்படி இப்படினு ஆச்சரியப்படாதவங்களே இல்லை...’’ என்கிற மேகாவின் பயிற்சி, எக்கச்சக்க இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது!
                   


‘‘திரும்பத் திரும்ப இந்த விஷயத்தைப் பல முறை செய்யறபோது, என்னையும் அறியாம என்னோட மூளைக்குள்ள அது பதிவாயிடும். பின்னணி பாடறதுன்னா என்னன்னே தெரியாம வந்த எனக்கு, பர்சனலா இந்த விஷயம் மிகப் பெரிய மாற்றத்தைக் கொடுத்தது...’’


‘‘சமீபத்துல ரஹ்மானோட கச்சேரியில அவர்கூட சேர்ந்து பாடற அளவுக்கு அந்தக் குழந்தைங்க வளர்ந்திருக்காங்க. ‘நிச்சயம் ஒரு மாற்றம் தெரியுது’னு ரஹ்மானும் என்னை வாழ்த்தினார்...’’