உணவே மருந்துணர்த்தும் துறை!



‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின் ஊறுபாடு இல்லை உயிர்க்கு’ என்கிறார் திருவள்ளுவர். இதன் பொருள்... உடலுக்கு ஒத்துவரக் கூடிய உணவைக்கூட அதிகமாகும்போது தவிர்த்து, அளவாக உண்டால் உயிர் வாழ்வதற்குத் தொல்லை எதுவும் இல்லை. உணவின் அருமையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். ஆனாலும், உடலுக்கேற்ற உணவுமுறையை சரியாகப் பின்பற்றுபவர்கள் நம்மில் வெகு சிலரே. நம் உடலைத் தாக்கும் பல நோய்களுக்குப் பின்னால் இருப்பது தவறான உணவுப் பழக்கமே. ஒவ்வொருவரும், அவரவர் உடல் தன்மைக்கேற்ப, வாழ்க்கைமுறைக்கேற்ப எப்படி உணவை உட்கொள்வது என்று வழிகாட்டுகிறது ‘உணவூட்டல் இயல்’ (டயடெட்டிக்ஸ்) துறை. அந்தத் துறையைக் கற்றுத் தேர்ந்து, அதிலேயே திளைத்து, பலருக்கும் வழிகாட்டி, அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொருவருக்கும் உணர்த்துபவராக உயர்ந்து நிற்கிறார் டாக்டர் தாரிணி கிருஷ்ணன்!


தாரிணி கிருஷ்ணனுக்குப் பூர்வீகம் சென்னை. சர்ச் பார்க்கில் பள்ளிப் படிப்பு. ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.யு.சி. இந்தத் துறைக்கு வந்த கதையை எளிய வார்த்தைகளில் விளக்குகிறார்... ‘‘எங்க குடும்பத்தை ‘இன்ஜினியர் ஃபேமிலி’ன்னுதான் சொல்லுவாங்க. தாத்தா, அண்ணன், ஒண்ணுவிட்ட அண்ணன்கள், அக்கா, மாமா எல்லாருமே இன்ஜினியர்கள். எனக்கோ மெடிக்கல் படிக்கணும்னு ஆசை. அது கெடைக்கலை. அப்போ பி.எஸ்சி. ஹோம் சயின்ஸ்ல ஒரு புதுக்கிளையாக ‘நியூட்ரிஷன் அண்ட் டயடெட்டிக்ஸ்’ இருந்தது. மருத்துவத்தோட நெருக்கமா இந்தத் துறை இருந்த தால இதைப் படிக்க முடிவு செஞ்சேன். வுமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ்ல சேர்ந்தேன். நாங்க மூணாவது பேட்ஜ். அப்போல்லாம் யாருக்குமே நியூட்ரிஷன் அண்ட் டயடெட்டிக்ஸ்னா என்னன்னு தெரியாது.

ஹோம் சயின்ஸ்லயே பிசியாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரின்னு மருத்துவம் தொடர்பான பல துறைகள்... அதுல ஃபுட் நியூட்ரி ஷனுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுத்தாங்க. உணவுப்பொருளை குக்கர்ல போட்டா எப்படி மாறும், வறுத்தா என்னவா மாறும்... இப்படிப் பல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க. உணவின் அடிப்படை தொடங்கி ஊட்டச்சத்து உணவு, சரிவிகித உணவுன்னு நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சுது. மற்ற அறிவியல் படிப்புகளில் 8 மேஜர்,2 ஆன்சிலரி பாடங்கள் இருக்கும். இதில் 10 மேஜர். நோயைப் புரிஞ்சுகிட்டாதான் அதுக்கு எப்படி உணவு கொடுப்பதுன்னு தெரிஞ்சுக்க முடியும். அந்தத் துறையில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக    பி.எஸ்சி. முடிச்சதும், பாம்பே, காலேஜ் ஆஃப் ஹோம் சயின்ஸ் - நிர்மலா நிகேதன்ல எம்.எஸ்சி. ஃபுட் நியூட்ரிஷன் அண்ட் டயடெட்டிக்ஸ் படிச்சேன்.

அப்படியே ரெண்டு வருஷம் பி.எட். முடிச்சேன்.சென்னை வுமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ்ல ரிசர்ச் அசிஸ்டென்ட் வேலை கிடைச்சது. அப்புறம் கே.ஜே. ஹாஸ்பிட்டல்ல வேலை... என்னைத் தவிர அங்கே மூணு டயட்டீஷியன்ஸ் இருந்தாங்க. நான் டிபார்ட்மென்ட் ஹெட். நோயாளிகளுக்கான உணவுகளை முறைப்படுத்தும் பணி. 7 வருஷம் அங்கே இருந்தேன். தரமணி, இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்ல ‘அப்ளைடு நியூட்ரிஷன்’னு எம்.எஸ்சி. கோர்ஸ் இருந்தது. அங்கே பார்ட் டைம் புரொபசரா சேர்ந்தேன்.

1990ல தனியா கன்சல்டேஷன் ஆரம்பிச்சேன். ‘டயட்டீஷியன்’னு ஒரு போர்டை போட்டு, கிளினிக் ஆரம்பிச்சு உட்கார்ந்தேன். அப்போ யாருக்குமே டயட்டீஷியன்னா என்னன்னு தெரியலை. ‘இது எதுக்கு’ன்னு வித்தியாசமா பார்த்தாங்க. இப்போ நிறைய பேர் தேடி வர்றாங்க. 20 வருஷத்துல
எல்லாமே மாறிப் போச்சு. 3 மருத்துவமனைகள்ல கன்சல்டேஷன் குடுக்கறேன். எனக்கு ஒரு இணைய தளம் இருக்கு. உலகம் முழுக்க பல பேருக்கு ஆன்லைன்ல கவுன்சலிங் பண்றேன். அமெரிக்கா மாதிரி வெளிநாடுகள்ல இருக்கும் இந்தியர்களுக்கு உணவு தொடர்பான பிரச்னைகள்னு வச்சுக்குவோம். அங்கே இருக்கும் டயட்டீஷியன்களுக்கு நம்ம உணவைப் பத்தி தெரியாதே...

அதனால இந்திய டயட்டீஷியனை தொடர்பு கொள்றாங்க. நான் என்.ஐ.ஐ.டி.ல ஒரு வருஷ கோர்ஸ் படிச்சிருக்கேன். அந்த அடிப்படையில 2000த்துல ‘டைஜஸ்ட்’னு ஒரு சாஃப்ட்வேர் உருவாக்கினேன். ஒரு டயட்டீஷியனுக்கு தேவையான முக்கிய தகவல்களை எல்லாம் இந்த சாஃப்ட்வேர் கொடுக்கும். ‘இட்லி’ன்னு பதிவு செஞ்சா அதுல எவ்வளவு புரோட்டீன், கார்போஹைட்ரேட் இருக்குன்னு காட்டிடும். ஒருநாள் டயட் கூட காண்பிக்கும். மருத்துவமனை பயன்பாட்டுக்கு ரொம்ப உதவியா இருக்கும். அமெரிக்காவுல டஃப்ட்ஸ் யுனிவர்சிட்டி, சென்னை, மதுரை டி.பி. சென்டர்கள், எபிடமியாலஜி சென்டர், ஹைதராபாத் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூட்ரிஷன், சி.எம்.சி. லூதியானா, சுந்தரம் மெடிக்கல் ஃபவுண்டேஷன்னு பல இடங்கள்ல இந்த சாஃப்ட்வேர் பயன்பாட்டுல இருக்கு.

கூகுள்ல ஒரு ஆப்ஸ் வடிவமைச்சிருக்கோம். போன்ல என்ன சாப்பிட்டோம்னு போட்டா, அதுல எவ்வளவு கலோரி, புரோட்டீன் இருக்குன்னு எல்லாத்தையும் காட்டிடும். சிறுநீரக நோயாளிகளை ‘இவ்வளவுதான் நீங்க சாப்பிடணும், இன்னிக்கி அதிகமா சாப்பிட்டுட்டீங்க, குறைச்சுக்கோங்க’ன்னு எச்சரிக்கும். இப்போ தினசரி வாழ்க்கைக்கே பலருக்கும் இந்த ஆப்ஸ் தேவைப்படுது. நிறைய பேர் ஃபாலோவும் பண்றாங்க.

2008ல ஃபுட் நியூட்ரிஷன் அண்ட் டயடெட்டிக்ஸ்ல டாக்டரேட் பண்ணினேன். தலைப்பு ‘எக்சர்ஸைஸ் அண்ட் டயாபட்டிக்ஸ்.’ டயட் பண்ணினா நீரிழிவுப் பிரச்னை என்ன ஆகும், அதுக்கான எக்சர்ஸைஸ் பண்ணினா அது எப்படி கன்ட்ரோல் ஆகுங்கிறது தொடர்பானது. 150 பேருக்கு டயட் கவுன்சலிங், எக்சர்ஸைஸ் கவுன்சலிங்கோடு 6 மாசம் ஆய்வு செஞ்சேன். 

இப்போ டயட்டீஷியன்களுக்கான தேவை அதிகமாகிடுச்சு. இந்தத் துறை ரெண்டு விதத்துல முக்கியத்துவம் வாய்ந்தது. விளிம்புநிலையில் இருக்கும் மக்களின் குழந்தைகள் சத்துக்குறைபாட்டால் சரியான எடையில் இருக்க மாட்டாங்க... அதனால ஏற்படும் பாதிப்பு. உயர் நடுத்தர வர்க்க குடும்பங்கள்ல அதிக எடை... பருமன்... 10 வயசு குழந்தை 80 கிலோ இருக்கும். அதனால நீரிழிவு, கேன்சர், இதயக் கோளாறுகள்னு ஏற்படும். இந்த ரெண்டுக்குமே வழிகாட்ட, நோய்களை கட்டுக்குள் வைக்க எங்க துறை ரொம்ப அவசியம்.

நோயாளிகள் மட்டுமல்ல... பொதுமக்களுக்கே இந்தத் துறை ரொம்ப முக்கியம். குழந்தை பிறக்கறதுக்கு முன்னால தாய்க்கு... பிறந்த பிறகு தாய்ப்பால் இருந்ததுன்னா பிரச்னை இல்லை... தாய்ப்பால் இல்லைன்னா அதை எப்படி சரிப்படுத்தறது... இப்படி. 1 வயசு குழந்தைல இருந்து 100 வயசு வரை ஒவ்வொரு பருவத்துக்கும் உணவூட்டல் இயல் ரொம்ப முக்கியம். 25-40, 40-60, 60-70, 70-80ன்னு ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் எப்படி சாப்பிடணும்னு சில முறைகள் இருக்கு. 

‘உணவே மருந்து’ங்கறதை இப்போ எல்லாருமே ஆழமா புரிஞ்சு வச்சிருக்காங்க. எடுத்துக்கற உணவை சரியா எடுத்துகிட்டா, நோய் வராம தவிர்க்கலாம். நோய் வந்ததுக்குப் பிறகு கூட, தொடர்புடைய நோய்க்கு ஏற்ற உணவை எடுத்துகிட்டா, அதைக் கட்டுக்குள் வைக்கலாம். 1984ல அரசு மருத்துவமனை, சிறுநீரகத் துறையில் 3 மாசம் வாலன்டரி சர்வீஸ் பண்ணினேன். அப்போ சென்னையிலேயே இந்தத் துறை 6 இடத்துலதான் இருந்தது. இப்போ சென்னையில சின்ன மருத்துவமனைல கூட ரெண்டு டயட்டீஷியன்ஸ் இருக்காங்க. முக்கியமான காரணம் சிறுநீரகக் கோளாறுகள் அதிகமாவது. 100 பேருக்கு சிறுநீரக பிரச்னைன்னா, அவங்கள்ல 99 பேர் உணவு முறையை சரியாக பின்பற்றாததுதான் காரணம். அதை எப்படித் தவிர்க்கறது அல்லது எப்படி தள்ளிப் போடுறதுங்கறதுக்கு ஆலோசனை தர்றோம். விளையாட்டு வீரர்களுக்கு டயட் ரொம்பவே முக்கியம். எப்படி, என்னென்ன சாப்பிட்டா போட்டியில சிறப்பா விளையாடலாம்னு டயட்டீஷியன்தான் டிப்ஸ் குடுப்பாங்க.

முன்னாடியெல்லாம் வீட்ல பெரியவங்க இருந்தாங்க. அவங்களோட அனுபவத்துல இருந்து சொல்லிக் கொடுப்பாங்க. எங்க பாட்டி, ‘கை வைத்தியம்’ தொடர்பான ஒரு புத்தகமே போட்டிருக்காங்க. இன்னிக்கி கூட்டுக் குடும்பம் எங்கே இருக்கு? ஒரு குழந்தையை எப்படி வளர்க்கணும்னு கூட பலருக்கும் தெரியறதில்லை. ஏன்னா, வீட்ல பெரியவங்க இல்லை. ஒரு குழந்தை நல மருத்துவரால் எவ்வளவு நேரத்தை ஒதுக்க முடியும்? குழந்தை தொடர்பான எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்ல அவங்களுக்கு நேரம் இல்லை. இந்தத் துறைக்கு ‘ஹோம் சயின்ஸ்’னு பேர் வந்ததுக்கும் காரணம் இருக்கு. வீட்லயே ஜுரம் வந்தா என்ன பண்ணணும், கஷாயம் எப்படி வைக்கணும், கை வைத்தியம், உணவு வகைகள், அவற்றின் பயன்கள், செடி வளர்க்கறது உள்பட எல்லாத்தையும் சொல்லிக் குடுத்தாங்க. இப்போ, பட்டம் வாங்கின சில பெண்களுக்கே துவரம் பருப்புக்கும் கடலைப் பருப்புக்கும் வித்தியாசம் தெரியலை’’ என்கிற
தாரிணியிடம் அவர் ஆலோசனை கொடுத்த ஓரிருவரின் கேஸ் ஹிஸ்டரியைக் கேட்டோம். 
 
‘‘சேலத்துல இருந்து சென்னைக்கு ஐ.டி. துறைக்கு வேலைக்கு வந்தாங்க ஒரு பெண். வந்தப்போ அவங்க எடை 38 கிலோ. மூணே வருஷம்... 82 கிலோ ஆயிட்டாங்க. உணவு முறை அப்படி. வீட்டுச் சாப்பாடு கிடையாது. ஃபுட் கோர்ட்ல அது, இதுன்னு சாப்பிடுறது. உடம்பு ஏறிடுச்சு. அதனாலயே கல்யாணம் தள்ளிப் போச்சு. நான் கவுன்சலிங் குடுத்தேன். ஒன்றரை வருஷத்துல 30 கிலோ எடை குறைஞ்சாங்க. எக்சர்சைஸ், உணவு கட்டுப்பாட்டால எடை குறைஞ்சுது. கல்யாணமும் நிச்சயமாகி சந்தோஷமா இருக்காங்க.

துபாய்ல ஒருத்தருக்கு ஹார்ட் அட்டாக். அவருக்கு ஹார்ட்ல அவ்வளவு பிளாக் இல்லை. ஆனா, கொலஸ்ட்ரால் ஜாஸ்தியானதால ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு. ‘ஆஞ்சியோ பிளாஸ்டி பண்ணணும்... ஆனா, உங்களுக்கு சாய்ஸ் தர்றோம். வெயிட்டை குறைச்சா கொலஸ்ட்ரால் இறங்கக்கூடிய வாய்ப்பு இருக்கு’ன்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. அவர் ஆன்லைன்ல கன்சல்டிங் வந்தார். நான் சொன்னதை ஃபாலோ பண்ணினார். 10 கிலோ எடை குறைச்சார். அவரோட பிரச்னையே இப்போ ரிவர்ஸ் ஆயிடுச்சு. நல்லா ஆயிட்டார்.

ஒரு தடவை கன்சல்டிங் வந்துட்டு, தொடராம போயிட்டா கஷ்டம். 15 நாளைக்கு ஒரு தடவை ஆலோசனை பெறணும். ஃபுட் டயரின்னு ஒண்ணை எழுதி மெயின்டெயின் பண்ணணும். உடல்நிலை, சாப்பாடு எல்லாத்தையும் எழுதி எனக்கு அனுப்பணும். நான் கால்குலேட் பண்ணி திருப்பி அனுப்புவேன். ரெண்டு பேரும் ஒரே அலைவரிசையில ஒத்துழைக்கணும். அப்போதான் பிரச்னை சரியாகும்’’ என்கிறார் தாரிணி.

‘‘பெண்களுக்கு இது ஏற்ற துறை. வீட்டையும் பார்த்துக்கலாம்... வேலையும் செய்யலாம். நாம நல்ல விதத்துல ஆலோசனை கொடுத்தா நம்மைத் தேடி வருவாங்க. எனக்கு இப்போ வேலை அதிகம் வருது... நேரம் இல்லை. விருப்பப்பட்டு இந்தத் துறையை தேர்ந்தெடுத்து, ஆர்வத்தோட செஞ்சா எதிர்காலம் பிரகாசமா இருக்கும்!’’

‘‘‘டயட்டீஷியன்’னு ஒரு போர்டை போட்டு, கிளினிக் ஆரம்பிச்சு உட்கார்ந்தேன். அப்போ யாருக்குமே டயட்டீஷியன்னா என்னன்னு தெரியலை. ‘இது எதுக்கு’ன்னு வித்தியாசமா பார்த்தாங்க...’’

‘‘ஐ.டி. வேலைக்கு வந்தப்போ அவங்க எடை 38 கிலோ. மூணே வருஷம்... 82 கிலோ ஆயிட்டாங்க. அதனாலயே கல்யாணம் தள்ளிப் போச்சு. கவுன்சலிங் குடுத்தேன். ஒன்றரை வருஷத்துல 30 கிலோ எடை குறைஞ்சாங்க. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும்தான் காரணம். இப்போ கல்யாணம் நிச்சயமாகி சந்தோஷமா இருக்காங்க!’’

நியூட்ரிஷன் அண்ட் டயடெட்டிக்ஸ் படிக்க வேண்டுமா?

பி.எஸ்சி. படிப்பில் சேர பிளஸ் டூ அல்லது அதற்கு இணையான படிப்பில் இயற்பியல், வேதியியல் பாடங்கள் படித்திருக்க வேண்டும். சென்னையிலேயே 35 கல்லூரிகளில் இந்தப் படிப்பு இருக்கிறது. தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் வழங்கப்படுகிறது. ஹோம் சயின்ஸிலேயே ஃபுட் அண்ட் நியூட்ரிஷன், நியூட்ரிஷன் அண்ட் டயடெட்டிக்ஸ், க்ளினிக்கல் நியூட்ரிஷன், ஸ்போர்ட்ஸ் நியூட்ரிஷன் என்று பலவிதமாக இந்தப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. சுயநிதிக் கல்லூரிகளில் வருஷத்துக்கு 35 ஆயிரம் வரை செலவாகலாம். வுமன்ஸ் கிறிஸ்டியன் காலேஜ், குயின் மேரீஸ் காலேஜ், எஸ்.ஐ.இ.டி. போன்றவற்றில் அரசு மானியம் இருப்பதால் கட்டணம் குறைவாக இருக்கும். ஸ்காலர்ஷிப் கிடைக்கும். இந்தத் துறையில் இளங்கலைப் படிப்போடு நிறுத்திவிடாமல் முதுகலையும் படிப்பது நல்லது. நிறைய மேஜர் பாடங்கள் இருப்பதால் அதன் ஆழம் புரிய மேலே படித்தாக வேண்டும். பி.எஸ்சி. முடித்துவிட்டு ‘ரெஜிஸ்டர்டு டயட்டீஷியன்’ என்று ஒரு கோர்ஸ் இருக்கிறது.

6 மாத இன்டர்ன்ஷிப் செய்ய வேண்டும். படித்து முடித்ததும் தனியார் மருத்துவமனைகளில் வேலைக்குச் சேரலாம். பி.எஸ்சி. முடித்துவிட்டு, டி.என்.பி.எஸ்சி. பரீட்சை எழுதி அரசு வேலையில் சேரலாம். கேன்சர் இன்ஸ்டிடியூட், கார்டியாலஜி என்று எல்லா மருத்துவமனைகளிலும் டயட்டீஷியன்களுக்கான தேவை இருக்கிறது. பள்ளிக்கூடங்களிலேயே மாணவர்களுக்கு எடை குறைப்பு, எடையை சரியாக வைத்துக் கொள்ள சொல்லித் தர டயட்டீஷியன்கள் தேவைப்படுகிறார்கள். ஃபிட்னஸ் சென்டர், விளையாட்டு தொடர்பான ஸ்போர்ட்ஸ் கிளப்களிலும் வேலை கிடைக்கும். பிஸ்கெட் கம்பெனிகள், பால் உற்பத்தி நிறுவனங்கள், மருந்து கம்பெனிகளில் கூட வேலை கிடைக்கும். 3 வருடங்கள் ஏதாவது ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்துவிட்டு, தனியாக கிளினிக் தொடங்கலாம்.


- பாலு சத்யா
படங்கள்: ஆர்.கோபால்