என் அம்மா



என்   வெற்றியின்  வித்தகி

பாடகர் ராகுல் நம்பியார்

‘வசந்த முல்லை...’ (போக்கிரி), ‘பறபற பற பட்டாம்பூச்சி...’ (கற்றது தமிழ்), ‘அடடா மழடா...’ (பையா), ‘இப்படியே எங்கே வேணா...’ (பூஜை) என
இன்னும் ஏகப்பட்ட ஹிட் பாடல்களில் ஒலித்த குரலுக்குச் சொந்தக்காரர் ராகுல் நம்பியார். எல்லோருக்கும் பிடித்த பாடல்களைப் பாடியிருக்கும் ராகுலுக்கோ, அம்மாவின் தாலாட்டே விருப்பப் பாடலாம். அம்மாவின் மீது அநியாய அன்பு கொண்ட ராகுல், தாய்ப் பாசம் பற்றிப் பேசச் சொன்னால் தன்னையே மறக்கிறார்!


‘‘அம்மா, அப்பாவுக்கு நான் ஒரே பையன். கேரளாவுல பிறந்தேன். 12 வயசு வரைக்கும் டெல்லியில வளர்ந்தேன். சின்ன வயசுலேருந்தே நான் அம்மா செல்லம். படிப்பு விஷயத்துல மட்டும் அம்மா பயங்கர ஸ்ட்ரிக்ட். மத்தபடி ரொம்ப அன்பான மனுஷி. ரொம்ப சின்னவனா இருந்தப்பவே டேபிள் மேல தாளம் போடறது, பாடறதுனு இருந்தேனாம். அதைப் பார்த்துட்டு என்னை கிடார் கிளாஸ்ல சேர்த்து விட்டாங்க. என் வயசுக்கேத்த மாதிரி சின்ன கிடார் கிடைக்கலை. பெரிய கிடார் வாசிக்க எனக்கு கை எட்டலை. கொஞ்ச நாள் கிளாஸ் போயிட்டு நிறுத்திட்டேன். அப்புறம் தபேலா கிளாஸ் போனேன். ஒரே ஒரு கச்சேரி பண்ணிட்டு அதையும் நிறுத்திட்டேன்.

டெல்லியில மியூசிக் சம்பந்தமான நிகழ்வுகள் கம்மி. சென்னையில இருந்தாதான் இசையில என்னை முழுமையா ஈடுபடுத்திக்க முடியும்னு நினைச்சு வந்தோம். இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவோட சிஷ்யர் பாலமுரளிகிருஷ்ணா எனக்கு வீட்லயே வந்து சங்கீதம் கத்துக் கொடுத்தார். அதுவும் ரொம்ப நாள் நீடிக்கலை. அவர் திடீர்னு துபாய் போயிட்டதால, தொடர முடியலை. அப்புறம் டென்த் எக்ஸாமுக்காக கொஞ்ச நாள் மியூசிக்சை நிறுத்தி வச்சிருந்தேன். டென்த் முடிச்சதும் மறுபடி என்னை மியூசிக் பத்தி யோசிக்கச் சொன்னது அம்மாதான்.

எனக்கு மியூசிக் ரொம்பப் பிடிக்கும். ஆனாலும் கத்துக்கிற விஷயத்துல நான் பயங்கர சோம்பேறி. அப்படி இருக்கக்கூடாதுனு என்னை பிராக்டிஸ் பண்ண விரட்டிக்கிட்டே இருப்பாங்க அம்மா. டென்த் முடிச்சதும் ஹிந்துஸ்தானி கத்துக்க ஆரம்பிச்சேன். அந்த மாஸ்டருக்கு திடீர்னு உடம்பு சரியில்லாமப் போகவே, எட்டே மாசத்துல அதுவும் நின்னு போச்சு. அப்புறம் பிளஸ் டூ முடிச்சிட்டு லயோலா காலேஜ்ல சேரணும்னு ஆசைப்பட்டேன். 89 பெர்சென்ட் வாங்கியிருந்த எனக்கு அத்தனை ஈஸியா அந்த காலேஜ்ல சீட் கிடைக்கலை. அப்பவும் அம்மாதான் அவங்களுக்குத் தெரிஞ்ச புரொஃபசர்ஸ்கிட்ட பேசி, என்னோட சங்கீதத் திறமையைப் பத்தி எடுத்துச் சொல்லி, சீட் வாங்கினாங்க. அப்பதான் சன் டி.வி.யில ‘சப்தஸ்வரங்கள்’னு முதல் முதலா ஒரு மியூசிகல் டேலன்ட் ஷோ வந்தது. அதுல கலந்துக்கிட்டேன். அதுவரைக்கும் எனக்கு தமிழ் பாடல்களே பாடத் தெரியாது. எனக்கு முந்தின வருஷம் என்னோட க்ளோஸ் ஃப்ரெண்ட் பாடகர் ரஞ்சித், அந்த ஷோவுல கலந்துக்கிட்டு ஜெயிச்சிருந்தார். அவர்தான் என்னை என்கரேஜ் பண்ணி, அந்த ஷோவுல கலந்துக்க வச்சார்.

ஷூட்டிங்குக்கு கூட வர்றது, தமிழ்ல பாட்டு கத்துக்க ஹெல்ப் பண்ணினதுனு எல்லாமே அம்மாதான். நினைவு தெரிஞ்ச நாள்லேருந்தே என் வளர்ச்சியில அம்மாதான் உறுதுணையா நின்னுருக்காங்க. 91ல நான் ஒரு மலையாளப் படத்துல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். ஹாலிடேவுக்காக சென்னை வந்தப்ப, என் அங்கிளோட ஃப்ரெண்ட் மூலமா அந்த வாய்ப்பு வந்தது. ஸ்கூலுக்கு ஒரு மாசம் லீவு எடுக்க வேண்டியிருந்தது. அப்பவும் அம்மாதான் என்
கூடவே தங்கி பார்த்துக்கிட்டாங்க.

‘சப்தஸ்வரங்கள்’ல ஜெயிச்சது என் வாழ்க்கையில பெரிய திருப்புமுனையா அமைஞ்சது. மியூசிக்கை இனியாவது சீரியஸா பார்க்கணும்கிற எண்ணம் வந்தது. நிறைய பிரபலமான பாடகர்களோட சேர்ந்து ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். அவங்களோட போராட்டங்கள், கஷ்டங்களை எல்லாம் கேட்டேன். அந்த நேரம் நான் ஒரு பேங்க்ல வேலைக்குச் சேர்ந்தேன். ரெண்டு வருஷத்துல வேற வேற ரெண்டு பேங்க்ல வேலை... இன்னொரு பக்கம் கரஸ்பான்டன்ஸ்ல எம்.காம். படிப்பு... வேலைக்காக ஒரு வருஷம் பெங்களூரு போனேன். வாழ்க்கையில முதல் முறையா எங்கம்மாவைப் பிரிஞ்சிருந்த அந்த நாட்கள் நரகமா நகர்ந்தது. 15, 16 மணி நேர வேலைக்குப் பிறகு வீட்டுக்குள்ள நுழைஞ்சா வெறுமையா இருக்கும். அன்பு செலுத்தவோ, அக்கறை காட்டவோ அம்மா இல்லாத வீடு... 11 மாசத்துக்கு மேல என்னால தாக்குப்பிடிக்க முடியலை. வேலையே வேண்டாம்னு விட்டுட்டு அம்மாகிட்ட ஓடி வந்துட்டேன்.

மியூசிக்தான் எதிர்காலம்னு முடிவு பண்ணினதும் அப்பதான்.2005ல சென்னை வந்தேன். எம்.பி.ஏ. படிச்சேன். இசைக்காக நிறைய நேரம் ஒதுக்க ஆரம்பிச்சேன். தொடர்புகளும் வாய்ப்புகளும் தேடி வந்தது. 2007ல ‘போக்கிரி’ மூலமா சினிமாவுல பின்னணிப் பாடகரா என்ட்ரி. அதுலேருந்து என்னோட இசைப்
பயணம் ஸ்பீடு எடுக்க ஆரம்பிச்சது. பெரிய பெரிய மியூசிக் டைரக்டர்ஸ், ஹிட் சாங்ஸ்னு... இன்னிக்கு நான் இருக்கிற இந்த இடம், எங்கம்மாவோட சப்போர்ட்டால மட்டுமே சாத்தியமாச்சு. இப்ப ‘குப்பை’னு ஒரு சிங்கிள்ஸ் பண்ணியிருக்கேன். அதுக்கும் எங்கம்மா தான் பெரிய சப்போர்ட்.
அம்மாவுக்கு ரொம்ப இளகின மனசு. எப்போதும் ஆக்டிவா இருப்பாங்க. இப்பவும் ‘செராகேர்’னு வாலன்டரி ஆர்கனைசேஷன்ல மக்களுக்கு இலவச சேவை பண்ணிட்டிருக்காங்க. அம்மாவுக்கு பெரிசா சங்கீத ஞானம் கிடையாது. பாடத் தெரியாது. ஸ்ருதி தெரியாது. நான் பாடினதுல பிடிச்ச பாட்டு இதுன்னு சொல்லத் தெரியாது. அப்பா சைடுலேருந்துதான் எனக்குள்ள சங்கீதம் வந்திருக்கணும்.

ஆனாலும், இன்னிக்கு நான் ஒரு சக்சஸ்ஃபுல் பாடகரா இருக்கேன்னா, அதுக்கு முழுக் காரணமும் அம்மாதான். வீட்ல ஒரு ஹோம் ஸ்டூடியோ வச்சிருக்கேன். கம்போஸ் பண்ணும்போது எனக்கு பக்கத்துல யார் இருந்தாலும் தெரியாது. அம்மாவா இருந்தாலும் எரிஞ்சு விழுவேன். எங்கேயாவது வெளியில கிளம்பணும்னா கண்ணுக்கு எதிர்ல இருக்கிற என் ஷர்ட்டை எடுக்கத் தெரியாம, அம்மாகிட்ட கோபப்பட்டிருக்கேன். சாப்பாட்டு விஷயத்துல நான் ரொம்ப மோசம். வீட்டுச் சாப்பாடுதான் வேணும். பிடிச்சாதான் சாப்பிடுவேன். அந்த விஷயத்துலயும் அம்மாவை ரொம்பப் படுத்தியிருக்கேன்.

என்னோட கோபம் எல்லாம் எப்போதும் அம்மா மேலதான் வெளிப்பட்டிருக்கு. ஆனாலும், எந்தத் தருணத்துலயும் திருப்பி என்கிட்ட முகத்தைக் காட்டினதில்லை. அவ்ளோ பொறுமை... அவ்ளோ அன்பு... அம்மா கேரளா போயிட்டாங்கன்னா, அவங்க வர்ற வரைக்கும் எனக்கு கையும் ஓடாது. காலும் ஓடாது. அவங்க பக்கத்துல இருக்கிறதுதான் எனக்கு சுகம்.

அம்மா, அப்பாவுக்கு இதுவரைக்கும் நான் பெரிசா எதுவும் செய்யலை. சென்னையை விட்டு டூர் கிளம்பினா, கோயில்களைத் தவிர வேற எங்கேயும் போனதில்லை அவங்க. ஒரு சேஞ்சுக்கு அவங்க ரெண்டு பேரை மட்டும் ஒரு வேர்ல்ட் டூர் அனுப்பி வைக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அம்மாவோட சந்தோஷத்துக்காக அந்த சின்னப் பிரிவை தாங்கிக் கவும் தயார். ஏன்னா, ஐ லவ் ஹெர் ஸோ மச்!’’

‘‘வாழ்க்கையில முதல் முறையா எங்கம்மாவைப் பிரிஞ்சிருந்த அந்த நாட்கள் நரகமா நகர்ந்தது. 15, 16 மணி நேர வேலைக்குப் பிறகு வீட்டுக்குள்ள நுழைஞ்சா வெறுமையா இருக்கும். அன்பு செலுத்தவோ, அக்கறை காட்டவோ அம்மா இல்லாத வீடு...’’

‘‘என்னோட கோபம் எல்லாம் எப்போதும் அம்மாமேலதான் வெளிப்பட்டிருக்கு. ஆனாலும், எந்தத் தருணத்துலயும் திருப்பி என்கிட்ட முகத்தைக் காட்டினதில்லை. அவ்ளோ பொறுமை... அவ்ளோ அன்பு...’’

அதிர்ஷ்டக்கார அம்மா நான்தான்!

‘‘இந்த உலகத்துலயே அதிர்ஷ்டக்கார அம்மா யாருன்னு போட்டி வச்சா, அதுல எனக்குத்தான் முதலிடம் கிடைக்கும். அப்படியொரு அருமையான
பிள்ளையைப் பெத்தவள் நான். கீ போர்ட் உயரம் கூட இல்லாத 3 வயசுல அவன் அதை வாசிச்சப்பவே ‘உன் மகன் சாதிக்கப் பிறந்தவன்’னு என் உள் மனசு சொன்னது. அதுதான் இன்னிக்கு உண்மையாகியிருக்கு. அவனோட ஒவ்வொரு பாட்டுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். பக்திப்பாட்டெல்லாம் அப்படியே மனசைக் கரைய வைக்கும். ‘பையா’ படத்துல அவன் பாடின ‘அடடா மழடா...’ என்னோட ஃபேவரைட்னு அவனுக்கே தெரியாது. முதல் முறை ஃபிலிம் ஃபேர் வாங்கினப்ப, ‘பெற்ற மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்’ங்கிறது உண்மையாகி, பெருமை பொங்க பார்த்து ரசிச்சேன். ‘அடுத்தவங்க குறை சொல்ற மாதிரி நடந்துக்கக்கூடாது... வந்த வழியை மறந்துடக் கூடாது’ங்கிற என்னோட அட்வைஸை அவன் இந்த நிமிஷம் வரைக்கும் கடைப்பிடிச்சிட்டிருக்கான். அந்த நடத்தையே அவனை இன்னும் உயரத்துக்குக் கூட்டிட்டுப் போகும்ங்கிற நம்பிக்கை எனக்கிருக்கு...’’


- ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்