ட்வின்ஸ்



ஆர்.வைதேகி

‘உன்னைப் பிடி, என்னைப் பிடி’ என 6 மாதங்களைக் கடப்பது கூட சிரமமில்லை. 7ம் மாதத்தில் அடியெடுத்து வைக்கிற போது அட்வைஸ் என்கிற பெயரில் ஆளாளுக்கு ஆயிரம் விஷயங்களை சொல்லிக் குழப்புவார்கள்... பயமுறுத்துவார்கள். 6 மாதங்கள் வரை அமைதியாக இருக்கும் வயிறு, 7ம் மாதத் தொடக்கத்தில் ‘நாங்கள் வளர்கிறோமே மம்மி...’ என வித்தியாசமாக வெளியில் தெரிய ஆரம்பிக்கும். அடுத்த வாரமே பிரசவமாகிற அளவுக்கு அசாதாரணமாகத் தெரியும். எதிர்கொள்கிற எல்லோரும் நம் வயிற்றையே பார்க்கிற மாதிரித் தோன்றும்.


இருவர் உள்ளம்!

நித்யா, நிவேதிதா என தேவதைகளைப் பெற்ற பெருமை கொஞ்சமும் குறையவில்லை லதாவுக்கு. இளவரசிகளைப் போல வளர்த்து, இருவரின் அன்பையும் அன்யோன்யத்தையும் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிற அம்மாவுக்கு, அதை நம்மிடம் பகிர்வதில் பல மடங்கு பேரானந்தம்!

‘‘என்னோட அத்தைக்கு ட்வின்ஸ். புகுந்த வீட்டுப் பக்கம் பார்த்தா என் நாத்தனாருக்கும் ட்வின்ஸ். அந்த வகையில எனக்கும் ட்வின்ஸ் வந்திருக்கணும்னு நினைக்கிறேன். 25 வருஷங்கள் ஓடிப் போச்சு... ஆனாலும், கர்ப்பம் உறுதியான அந்த நாளையும் ட்வின்ஸ்னு தெரிஞ்ச அந்தக் கணத்தையும் இன்னும் என்னால மறக்க முடியலை...’’ என்கிற லதா, மலரும் நினைவுகளுக்குள் செல்கிறார்.

‘‘ஒரு குழந்தைன்னாலே சந்தோஷத்துக்குக் கேட்க வேண்டாம். ஒரே டைம்ல ரெண்டு குழந்தைங்கனு சொன்னதும் என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. என்னோட ரெண்டு குழந்தைகளும் கர்ப்பத்துல இருந்தது முதல் இப்ப வரைக்கும் எனக்கு எந்த சிரமத்தையும் கொடுத்ததில்லை. கர்ப்பத்தோட முதல் அஞ்சு மாசம் வரைக்கும் வாந்தி இருந்ததோட சரி... அப்புறம் ஒரு பிரச்னையும் இல்லை. ரெண்டுல ஒண்ணு பெண் குழந்தைனு மட்டும் சொன்னாங்க. இன்னொண்ணும் பெண்ணா இருந்தா நல்லாருக்குமேனு மனசுக்குள்ள எதிர்பார்த்தேன்.

அது படியே நார்மல் டெலிவரியில 8 நிமிஷ இடைவெளியில ரெண்டு பேரும் நல்லபடியா பிறந்தாங்க. முதல் ஒரு வருஷம் எல்லா அம்மாக்களையும் போல எனக்கும் பசி, தூக்கம் மறந்து போனது உண்மைதான். ரெண்டு பேரும் ஒரே நேரத்துல அழுவாங்க... ஒரே நேரத்துல பால் கொடுக்கணும். ஒருத்தி தூங்கினா, இன்னொருத்தி முழிச் சிட்டிருப்பா.

ஒருத்தியைத் தூக்கினா, இன்னொருத்தி அழுவா... அப்பவும் நான் அதையெல்லாம் கஷ்டமாவே பார்க்கலை. ரொம்பப் பொறுமையா சமாளிச்சேன். வளர ஆரம்பிச்சதும் அவங்களோட ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து ரசிச்சிருக்கேன். அந்த ரசனை இன்னி வரைக்கும் தொடர்ந்திட்டிருக்கு. ரெண்டு பேருக்கும் விருப்பு, வெறுப்புகள் பெரும்பாலும் ஒரே மாதிரி இருக்கும். சின்னவங்களா இருந்தப்ப, ‘ஒரே மாதிரி டிரெஸ் பண்ணினா நல்லாருக்குமே’னு நினைச்சு ஒண்ணு போல வாங்குவேன்.

கொஞ்சம் வளர்ந்து விவரம் தெரிய ஆரம்பிச்சதும் ரெண்டு பேரும் அவங்கவங்களுக்குப் பிடிச்ச மாதிரி செலக்ட் பண்ணிக்கிட்டாங்க. ‘ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி விருப்பம் இருந்தது மாறிப் போச்சோ’னு நினைக்கிறப்ப, திடீர்னு ஒரு நாள் ரெண்டு பேரும் ஒரே கலர், ஒரே டிசைன்ல டிரெஸ் பண்ணணும்னு சொல்வாங்க. ரெண்டு பேரும் சண்டை போட்டுப்பாங்க.

சமாதானப்படுத்தலாம்னு நாம நடுவுல போனா, அதுக்குள்ளயே அவங்களுக்குள்ள பேசி, பிரச்னையைத் தீர்த்துக்கிட்டு, ஃப்ரெண்ட்ஸ் ஆகியிருப்பாங்க. அவங்க ரெண்டு பேர் உலகத்துல வேற யாருக்கும் இடமில்லை.ரெண்டு பேரும் கெமிக்கல் இன்ஜினியரிங் படிச்சாங்க.

ஒருத்தி கோல்டு மெடலும் இன்னொருத்தி சில்வர் மெடலும் வாங்கினாங்க. அப்புறம் நிவேதிதாவுக்கு பியூட்டி இண்டஸ்ட்ரியில ஆர்வம் வந்து, அந்தத் துறைக்குப் போனா. நித்யா எம்.பி.ஏ. முடிச்சா. ஆனா, யாருமே எதிர்பார்க்காத படி, நித்யாவும் பியூட்டி சம்பந்தப்பட்ட துறை வேலைக்கே போயிட்டா. இது அவங்களே திட்டமிடாம நடந்ததுதான். ஆனாலும், ஆச்சரியமான விஷயம்!

ரெண்டு பேரையும் பரதநாட்டியத்துல சேர்த்து விட்டேன். ஒரே மாதிரி ஆர்வத்தோட கத்துக்கிட்டு ஆட ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்துல மேடையில அவங்களோட கெமிஸ்ட்ரியை பார்த்துட்டு எல்லாரும் பாராட்டறதைப் பார்த்தப்ப, பெருமையா இருந்தது. இப்பவும் அவங்க சேர்ந்து மேடை ஏறி ஆடறதைப் பார்க்கறப்ப என் கண்ணே பட்டுடும். அது மட்டுமல்ல...

குழந்தைங்களா இருந்தப்ப ‘ட்வின்ஸா... ரெண்டும் பொண்ணா?’னு அவங்க மேல குவிஞ்ச கவனம், இன்னிக்கும் தொடருது. நாங்க மூணு பேரும் சேர்ந்து வெளியில போறப்ப, மொத்த பேரோட பார்வையும் அவங்க மேலதான் பதியும். ரெண்டு பேருக்கும் சீக்கிரமே கல்யாணம். சில மாச இடைவெளியில பண்றதா பிளான் பண்ணியிருக்கோம்.

கல்யாணத்துக்குப் பிறகும் அவங்களோட அன்பும் அன்யோன்யமும் தொடரும்கிறதுல எனக்கு சந்தேகமே இல்லை...’’ - மகள்களின் அன்பில் மனம் நிறைகிறார் லதா.



‘எட்டாவது மாசம் ரொம்ப ரொம்ப கவனமா இருக்கணும். அதுலயும் ட்வின்ஸை சுமக்கிறவங்க, முழுக்க முழுக்க பெட் ரெஸ்ட்டுலயே இருக்கிறது நல்லது. 3 பேருக்கு சேர்த்துச் சாப்பிடணும். எட்டாவது மாசம் குழந்தை பிறந்தா, காப்பாத்தறது கஷ்டம்...’ என ஏகப்பட்ட பயமுறுத்தல்களை நானும் சந்தித்தேன்.

தண்ணீர் குடித்தால் கூட வாந்தி... தாளிக்கும் ஓசையும் வாசனையும் அலர்ஜி ஆனது. எப்போது எடை பார்த்தாலும், ‘குழந்தைங்களோட வெயிட் ஏறவே இல்லையே...’ என்ற கவலை தோய்ந்த டாக்டரின் குரல்... 7ம் மாதத் தொடக்கம் ஏழரையைவிட மோசம் போலத் தோற்றம் தந்தது. கடைசி 3 மாத கர்ப்பப் பயணம் என்பது எனக்கு மட்டுமல்ல... எல்லாப் பெண்களுக்குமே திக் திக் அனுபவமாகத்தான் இருப்பதாக அறிந்தேன்.

சின்னதான அந்த சிரம தசையைக் கடந்துவிட்டால் போதும்... அடுத்துக் காத்திருப்பதெல்லாம் சிரிப்பும் சந்தோஷமும் கலந்த சிலிர்ப்பான தருணங்கள்!

‘‘இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கிற கர்ப்பிணிகளுக்கு கடைசி 3 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. அலட்சியங்களும் அஜாக்கிரதைகளும் தவிர்க்கப்பட வேண்டிய மாதங்களும்கூட...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் கவிதா கௌதம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்களையும் எடுத்துரைக்கிறார் அவர்.

‘‘முதல் 2 ட்ரைமெஸ்டர் வரை சாதாரணமாக இருக்கும் ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தத் தின் அளவானது, 3வது ட்ரைமெஸ்டரில் கிடுகிடுவென எகிறலாம். ரத்தப் பரிசோதனையை மேற்கொண்டு அவ்வப்போது இவற்றின் அளவுகளை சரிபார்க்க வேண்டியது அவசியம்.குழந்தைகளின் எடையும் கவனிக்கப்பட வேண்டும்.

இரண்டு குழந்தைகளுக்கும் எடையில் வித்தியாசம் இருந்தால், எடை குறைவான குழந்தை முதலில் பிரசவமாகும். இரண்டு குழந்தைகளின்பொசிஷனும் கவனத்துக்குரியதே. இரண்டு குழந்தைகளுக்கும் தலை கீழே இருந்தால்தான் சுகப்பிரசவம் நிகழும். Cephalic  என்றால் தலை கீழே உள்ள நிலை. Breech என்றால் தலை மேலே உள்ள நிலை. இவற்றில் முதல் குழந்தைக்குத் தலை கீழே இருந்து, இரண்டாவது குழந்தைக்கு தலை மேலே இருந்தால் சுகப்பிரசவம் நிகழும் வாய்ப்புகள் உண்டு. ஆனால், முதல் குழந்தையின் தலை மேலயும் இரண்டாவது குழந்தையின் தலை கீழேயும் இருந்தால் சுகப்பிரசவத்துக்கு வாய்ப்பில்லை.

இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்குப் பிரசவ வலி வரட்டும்... சுகப்பிரசவத்துக்கு முயற்சி செய்யலாம் எனக் காத்திருக்க முடியாது. ஒன்றுக்கு இரண்டு குழந்தைகளின் எடையைச் சுமந்தபடி அவர்களால் உட்கார்வது, நிற்பது, நடப்பது என எல்லாமே சிரமமாகும். மூச்சு விடவே திணறுவார்கள். எனவே, கர்ப்பிணியின் உடல்நிலையைப் பரிசீலித்து, குழந்தைகளின் வளர்ச்சியைப் பார்த்து, தேவைப்பட்டால், குறித்த நாளைக்கு முன்னதாகவே சிசேரியன் செய்யப்படும். இந்தக் காரணங்களினாலேயே பெரும்பாலான இரட்டைக் குழந்தைகள் சிசேரியன் முறையில் பிரசவிக்கப்படுகிறார்கள்.

குழந்தைகளின் வளர்ச்சியை பிரத்யேக ஸ்கேன் மூலம் கண்காணிப்போம். அது அசாதாரணம் எனத் தெரிந்தால், அதற்கேற்ற சிகிச்சைகளும் பரிந்துரைக்கப்படும். கர்ப்பிணியானவள் சத்தாக சாப்பிட வேண்டியது முக்கியம். அதற்காக பருமனுக்கு வித்திடுகிற மாதிரியான கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கச் சொல்லி, தாய்க்கும் குழந்தைகளுக்கும் ஊட்டம் ஏற்றுகிற மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளச் சொல்லியும் பரிந்துரைப்போம்...’’  

‘‘இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கிற கர்ப்பிணிகளுக்கு கடைசி 3 மாதங்கள் மிகவும் முக்கியமானவை. அலட்சியங்களும் அஜாக்கிரதைகளும் தவிர்க்கப்பட வேண்டிய மாதங்களும் கூட...’’

லதாவின் டிப்ஸ்


‘‘ரெண்டு குழந்தைங்களை ஒரே நேரத்துல பெத்து, வளர்த்து ஆளாக்குறதுங்கிறது சாதாரண காரியமில்லைதான். ஆனா, பல அம்மாக்களும் எந்நேரமும் குழந்தைங்க பக்கத்துலயே உட்கார்ந்து பார்த்துப் பார்த்து வளர்க்கணும்னு பயந்துடறாங்க. உண்மையைச் சொல்லணும்னா ரெட்டைக் குழந்தைங்களைப் பெத்த அம்மாக்கள் பெரிய அதிர்ஷ்டசாலிகள்.

ஒரு கட்டம் வரைக்கும் அம்மாக்கள் வளர்த்து விட்டுட்டாங்கன்னா, அப்புறம் ரெண்டு குழந்தைங்களும் ஒருத்தருக்கொருத்தர் அன்பா, ஆதரவா இருக்கப் பழகுவாங்க. அவங்களைப் பிரிக்காம, அவங்க போக்குலயே விட வேண்டியது மட்டும்தான் அம்மாக்களுக்கு நான் சொல்ல நினைக்கிற அட்வைஸ். ரெட்டைக் குழந்தைங்களுக்கு மூளை அதிகம். சேர்ந்து யோசிக்கிறது, டிஸ்கஸ் பண்றது, செயல்படுத்தறதுனு எல்லாத்துலயும் அவங்க இணைஞ்சே இருக்கிறதால, அவங்க எடுக்கிற முடிவுகளும் புத்திசாலித்தனமாவே இருக்கும்.’’



(காத்திருங்கள்!)
 படங்கள்: ஆர்.கோபால்