மலாலா மேஜிக்-11




இங்கு தேவைகள் புறக்கணிக்கப்படும்!

உடலும் உள்ளமும் தாக்கப்படும்போது பெரும்பாலான மனிதர்கள் உடைந்து சிதறிப்போகிறார்கள். ஆனால், விட்டு ஓடிவிடுவதில்லை. தாலிபானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையில் சிக்கித் திணறிக்கொண்டிருந்த போதும்  மிங்கோரா கிராமத்தினர் அவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து குடிபெயர்ந்துவிடவில்லை. எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிவிடவேண்டும் என்று அவர்களுக்குத்  தோன்றவில்லை. இப்போதும் பலரை ஆச்சரியப்படுத்தும் விஷயம் இது.

காஷ்மீர், காஸா முனை, பாக்தாத், டமாஸ்கஸ் போன்ற போர் பிரதேசங்களில் எப்படி  மக்கள் வாழ்கிறார்கள்? அதைவிட முக்கியம், ஏன் அங்கே வாழ்கிறார்கள்? அங்குள்ள குழந்தைகள் எப்படிப் பள்ளிக்குச் செல்கின்றனர்? அன்றாட வாழ்வுக்கான  தேவைகளை குடும்பத்தினர் எப்படிப் பூர்த்தி செய்து கொள்கிறார்கள்? எப்படி பணம் ஈட்டுகிறார்கள்? எப்படிச் சேமிக்கிறார்கள்? மரணத்தின் நிழலில் தினம் தினம்  படுத்து உறங்கி கண்விழிக்க முடியுமா? அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டு வேறிடம் நோக்கி செல்ல விடாமல் எது அவர்களைத் தடுக்கிறது? எது அவர்களை  அவர்கள் இடத்தோடு சேர்த்து பிணைத்து வைக்கிறது?

ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் வீடு. நான்கு பக்கமும் தடுக்கப்பட்டு, தலைக்கு மேல் கூரை கொண்டிருக்கும் கட்டிடம் மட்டும் அல்ல அது. வீடு  என்பது ஓர் உணர்வு. வீடு என்றால் தங்கியிருப்பது, சார்ந்திருப்பது, உறவு கொண்டிருப்பது. இந்த உணர்வைத் துண்டித்துக்கொண்டு வெளியேற வேண்டுமானால்,  அந்த உணர்வைக் காட்டிலும் வலிமையான மற்றொரு உணர்வு உங்களைத் தாக்கவேண்டும். வீட்டோடு நீங்கள் கொண்டிருக்கும் பிடிப்பு நெகிழ்ந்து விழ  வேண்டும். மரண பயத்தைக் காட்டிலும் வலி தரும் அத்தகைய உணர்வு மிங்கோராவைத் தாக்கியபோது மக்கள் தளர்ந்து போனார்கள். ‘இனியும் தங்கியிருந்தால்  நீ மட்டுமல்ல... உன் குழந்தைகள், உன் சொந்தங்கள், உன் வீடு, உன் இருப்பு அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும்’ என்னும் நிலை எழுந்தபோது ஒவ்வொருவராக  வீட்டை விட்டு வெளியேறத் தொடங்கினார்கள். ‘வீடு, நிலம், நாடு, உடல் எதுவும் நம்முடையதல்ல’ என்னும் புரிதல் அவர்களை உந்தி வெளியே தள்ளியது.  நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறத் தொடங்கினார்கள்.

மிங்கோரா கிராமமே திடீரென கால்கள் பெற்று எழுந்து நடந்து வெளியேறிவிட்டதைப் போன்ற உணர்வு அது.‘அவசியமானதை மட்டும் எடுத்துக்கொள்’ என்று அம்மா கண்டிப்பாக உத்தரவு போட்டுவிட்டதால் மலாலாவுக்கு எதை எடுப்பது, எதை விட்டுச்செல்வது என்னும்  குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ‘நானாவது பரவாயில்லை... 5 வயது அடல் என்னைவிட மோசம்’ என்று நினைத்துக்கொண்டார். அடல், அம்மாவுடன் மாபெரும்  விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். ‘அம்மா... எனக்கு கோழிக்குஞ்சுகள் அவசியம் என்று தோன்றுகிறது. ஏன் அவற்றை நான் கொண்டுவரக்கூடாது?’

அம்மா விளக்கினார்... ‘நாம் போகப்போவது நண்பர் ஒருவரின் காரில். அதில் நமக்கே இடம் இருக்காது’... அடல் அம்மா பின்னாலேயே அழுதபடி  ஓடிக்கொண்டிருந்தான்... ‘நான் வேண்டுமானால் ஒரு துணியைப் போர்த்தி கொண்டு வரட்டுமா? அது என்ன செய்தாலும் கார் பாழாகாது அல்லவா?’ மலாலாவும்கூட நோட்டு புத்தகங்கங்களை விட்டுப் பிரிய வேண்டியிருந்தது. அவசர அவசரமாக சில உடைகளை மட்டும் அள்ளிப்போட்டுக்கொண்டு  வீட்டைவிட்டு வெளியேறினார். ஷங்லாவில் உள்ள உறவினரின் வீட்டுக்கு இப்போது அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். அப்பா தன்னுடன் ஷங்லா வரப்  போவதில்லை என்று மலாலாவுக்குத் தெரியும். மர்தான் என்னும் பகுதி வரை அவர் உடன் வருவார். பிறகு பெஷாவர் செல்வதாக திட்டம். ‘கவலைப்படாதே மலாலா. எனக்கு ஒன்றும் ஆகாது. அங்கிருப்பவர்களிடம் நான் பேசியாகவேண்டும். இங்கு என்ன நடக்கிறது என்பதை மற்றவர்களுக்குத் தெரிவிக்கவேண்டும்...’

அப்பா என்ன சொல்ல வருகிறார் என்பதை மலாலாவால் புரிந்துகொள்ள முடிந்தது என்றாலும், அவரை விட்டு விலக மனமில்லை. பள்ளத்தாக்கில் அமைதி  திரும்பும்வரை அப்பாவால் இனி 4 சுவர்களுக்குள்  தங்கியிருக்க முடியாது. என்னுடைய அப்பா என்பது மாறி இப்போது அவர் ஒரு பொது மனிதராக உருவெடுத்
திருந்தார். வீட்டைக் கடந்து சிந்திப்பவராக, வீட்டுமனிதர்கள் தாண்டி மற்றவர்களுக்காகவும் கவலைப்படுபவராக, அவர்களுடைய நலன்கள் மீது அக்கறை காட்டுபவராக அவர் வளர்ந்துவிட்டார். மலாலா தன்  கண்களால் சிறுகச் சிறுகக் கண்ட, உணர்ந்துகொண்ட வளர்ச்சி இது.

வீதிகள் சுவாசிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தன. திரும்பும் பக்கமெல்லாம் மக்கள் நடந்தும் கிடைக்கும் வண்டியில் தொற்றிக்கொண்டும் வேகவேகமாக  விரைந்து கொண்டிருந்தார்கள். இரண்டு சக்கர  வாகனங்களில் 4 பேர் மூட்டை முடிச்சுகளுடன் சென்று கொண்டிருந்ததை மலாலா கண்டார். கார் பயணம் சோர்வு சேர்க்கக்கூடியதாக இருந்தது. ஊர்ந்து, ஊர்ந்து, திணறித் திணறித்தான் நகர முடிந்தது.

மர்தான் பகுதிக்குள் நுழையும்போது அவர்கள் தங்கள் கடந்த காலத்தை முற்றிலுமாகத் துண்டித்துக்கொள்ள வேண்டியிருந்தது. தங்கள் அடையாளத்தைத்  தற்காலிகமாகக் கைவிடவும் வேண்டியிருந்தது. ‘நீ யார்’ என்று கேட்கப்பட்டபோது, ‘நான் ஒரு பஷ்டூன்’ என்று பெருமிதமாக அவர்களால்  அறிமுகப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஒரு புதிய அந்நியப் பெயரை இப்போது அவர்கள் பெற்றிருந்தார்கள். அந்தப் பெயரை உச்சரித்தால்தான், அதுவும்  பவ்யமாக உச்சரித்தால் மட்டுமே நுழைவதற்கு அனுமதி கிடைக்கும். கிடைக்காமலும் போகலாம் என்பதால் குரலைத் தாழ்த்தி, முதுகை வளைத்து அவர்கள்  தங்களது புதிய அடையாளத்தை வெளிப்படுத்தினார்கள். ‘ஐயா, நாங்கள் இடம்பெயர்ந்தவர்கள். தயவு செய்து எங்களை மர்தானுக்குள் அனுமதியுங்கள்’...  வீட்டைத்  துறப்பவர்கள் ஒரு சிறிய பூகோளத் துண்டை மட்டும் துறப்பதில்லை, சுயமரியாதையையும் துறக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று மட்டுமே.

இடம்பெயர்ந்த (இன்டர்னலி டிஸ்ப்ளேஸ்டு) மக்கள் யார் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையம் விரிவாக வரையறுத்துள்ளது. மோதல்கள்  நடைபெறும் இடத்தை விட்டு வெளியேறும் இடம்பெயர்ந்தவர்கள் சர்வதேச எல்லைக்கோட்டைக் கடப்பதில்லை. அவர்கள் தங்கள் நாட்டுக்குள்ளேயே வேறு  பகுதிகளுக்குப் பெயர்ந்து செல்கிறார்கள். அதே காரணத்தால் அவர்கள் நிராதரவற்றவர்களாக, அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.  அகதிகளுக்கு உள்ள அதே பயங்கள்தான் இவர்களுக்கும் இருக்கும். அகதிகளைப் போலவே இவர்களும் உயிரைக் கையில் பிடித்த படி ஓடிவந்தவர்கள்தாம்.  ஆனால், குடிபெயர்ந்த வர்களுக்கு அவர்களுடைய சொந்த நாடுதான் அடைக்கலம் தர வேண்டும்.

அகதிகளைப் பொதுவாக அவர்களுடைய அரசாங்கங்கள்  கைவிட்டுவிடும். அரசாங்கத்தின் செயல்கள் காரணமாக இடம்பெயர்ந்தவர்களையும்கூட பராமரிக்க வேண்டிய கடமை அரசாங்கத்துக்கு உள்ளது. அவர்கள்  நாட்டின் குடிமக்கள்தான் என்பதால் அனைத்து உரிமைகளையும் அவர்கள் கொண்டிருப்பார்கள். இந்த உரிமைகள் மீறப்படாதவாறு கவனித்துக்கொள்வது ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கடமைகளில் ஒன்று. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க கிட்டத்தட்ட 264 லட்சம்!

மர்தானில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்ததை மலாலா கண்டார். ஸ்வாட் பள்ளத்தாக்கில் இருந்து வந்து குவிந்து  கொண்டிருந்த பலரும் அந்தக் கூடாரங்களில் இடம் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தனர். தாலிபான்களில் சிலர் இங்கே ரகசியமாகத் தங்கியிருக்கின்றனர்  என்றொரு வதந்தியும் அங்கே உலவியது. அடிப்படை வசதிகள் அற்று பலர் கூட்டமாகக் குவிந்திருந்ததால், காலரா உள்பட பல நோய்கள் பரவிவந்ததாகவும் பேசிக்கொண்டனர். மர்தான், சுவாபி போன்ற இடங்களில்  உள்ள மக்கள் பெருந்தன்மையுடன் பலரை தங்கள் இருப்பிடங்களுக்கு அழைத்துச்சென்று தங்க வைத்து உணவு வழங்கிய செய்திகளும் கிடைத்தன. நம்பிக்கை  பொய்க்கும் இடங்களில்தான் நம்பிக்கை பூக்கவும் செய்கின்றன போலும்.

அப்பா விடைபெற்றுக்கொண்டார். மலாலாவும் அவருடைய குடும்பத்தினரும் பயணத்தைத் தொடர்ந்தனர். அபோட்டாபாட், பேஷாம் ஆகிய இடங்களைக் கடந்து,  25 கிலோமீட்டர் கால்நடையாக நடந்து, இறுதியாக ஷங்லாவை வந்தடைந்தபோது உடல், உள்ளம் இரண்டும் சோர்ந்திருந்தன. அம்மாவின் உறவினர்கள்  தங்கியிருந்த கர்ஷாத் என்னும் கிராமத்தை அடைந்தபோதுதான் சற்று நிம்மதி பிறந்தது.

ஒரு சில தினங்களில் புது இடம் பழகிவிட்டது. தன்னைவிட ஒரு வயது மூத்தவரான சும்புல் என்பவருடன் கரம் கோர்த்துக் கொண்டார் மலாலா. அவருடைய  உடைகளைக் கடன் வாங்கி அணிந்துகொண்டார். (அவசரத்தில் அள்ளிப்போட்டுக்கொண்டு வந்திருந்த  உடைகள் பொருத்தமற்று இருந்தன). சும்புலுடன் இணைந்து  அவருடைய பள்ளிக்கே செல்லவும் தொடங்கினார் மலாலா. ஆறாவது வகுப்பில் படித்து வந்த மலாலா, சும்புலின் வகுப்பில் இணைந்து கொண்டதால் ஏழாம்  வகுப்புக்குத் தாவி முன்னேறிச் சென்றுவிட்டார்.

புதிய வகுப்பறை தொடக்கம் முதலே மலாலாவை ஆச்சரியத்துடன்தான் பார்த்தது. முதல் காரணம் மலாலா அச்சமின்றி பேசிச் சிரித்துக் கொண்டிருந்தது. கிராமப்புறத்தைச் சேர்ந்த பிற  மாணவிகளுக்கு அது புதிதாக இருந்தது. ஆசிரியரிடம் கூட பயப்படாமல் பதிலுக்குப் பதில் பேசிக்கொண்டிருக்கிறாளே இந்தப் பெண்! இரண்டாவது காரணம்,  முகத்தை மறைத்துக்கொள்ளாமல் வகுப்பறைக்கு வருவது, போவது. இதுவும் அவர்களுக்குப் புதிது. கவிதை வாசிப்பது, பாடப்புத்தகங்களில் இருந்து பத்திகள்  படித்துக் காட்டுவது என்று எல்லாவற்றிலும் மலாலா அவர்களுக்குத் தனித்து தெரிந்திருக்க வேண்டும். ஒரு நாள், ‘கதை சொல்லட்டுமா’ என்று கேட்டு,  வகுப்பறையில் தன்னுடைய பெயருக்குப் பின்னால் உள்ள கதையை உணர்ச்சிப்பூர்வமாக விவரிக்கத் தொடங்கிவிட்டார்.

‘அப்படியொரு துணிச் சலான பெண்ணை  நீங்கள் யாருமே பார்த்திருக்கமாட்டீர்கள்! பிரிட்டிஷ்காரர்களே அவரைப் பார்த்து பயப்பட்டார்கள் தெரியுமா?’ பள்ளிக்குத் தாமதமாக வந்து, ‘நீட்டு கையை’ என்று அதட்டப்பட்டதில், நடுக்கத்துடன் கை நீட்டி அடிவாங்கிக் கொண்டபோது மலாலா மீதான அவர்களுடைய  பிரமிப்பு கலைந்திருக்கக்கூடும். ‘நம்மைப் போன்றவள்தான் இவளும்’ என்னும் நம்பிக்கையும் கூடவே பிறந்திருக்க வாய்ப்புண்டு.

இதற்கிடையில் மிங்கோரா பற்றிய செய்திகள் தொடர்ச்சியாக வெளிவந்துகொண்டிருந்தன. ஹெலிகாப்டரிலும் பாராசூட்டிலும் வீரர்கள் மிங்கோராவில்  இறங்கியிருப்பதாகவும் தாலிபான்களுடன் போர் தொடுத்துக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. தாலிபான்கள் தோல்வியடைந்து கொண்டிருக்கிறார்கள்,  பாகிஸ்தான் ராணுவம் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்று அறிவிக்கப்பட்டபோது மலாலா மகிழ்ந்து போனார்.

கிரீன் சவுக் என்னும் பகுதியில்  தாலிபான்கள் தாங்கள் கொன்ற நபர்களின் தலைகளைக் காட்சிக்கு வைத்திருப்பதாக யாரோ சொன்னார்கள். ‘பயப்படவேண்டாம்... அந்த இடத்தை இப்போது  ராணுவம் கைப்பற்றி விட்டது’ என்று மறுநாளே மற்றொருவர் சொன்னார். 4 தினங்கள் கழித்து, அதிகாரப்பூர்வமான தகவல் கிடைத்தது. தாலிபான்கள்  முறியடிக்கப்பட்டுவிட்டனர். மிங்கோரா ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்து சேர்ந்தாகி விட்டது.

6 வாரங்களுக்குப் பிறகு அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது. ஷங்லாவுக்கு விடைகொடுத்துவிட்டு மலாலாவின் குடும்பம் பெஷாவர் புறப்பட்டுச் சென்றது.  பெரிய இடைவெளிக்குப் பிறகு  அப்பாவுடன் இணைந்து கொண்டதில் மலாலாவுக்கு அளவுகடந்த குதூகலம். குடும்பத்துக்கே அது ஓர் உணர்ச்சிப்பூர்வமான மறு  இணைப்பாக அமைந்துவிட்டது. அனைவரும் இஸ்லாமாபாத் செல்வதற்கு ஜியாவுதின் ஏற்பாடு செய்திருந்தார். வீடு திரும்புவதைக் காட்டிலும் முக்கியமான வேறு  பணிகள் அவருக்கு இருந்தன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் ரிச்சர்ட் ஹால்புரூக், அப்போது இஸ்லாமாபாத்தில்தான் இருந்தார்.  அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் நடைபெறும் சந்திப்பு ஒன்றில் கலந்துகொள்வதற்காக அவர் வந்திருந்தார்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவரைச் சந்தித்து  சிலவார்த்தைகள் பேசிவிட முயன்றார் ஜியாவுதின். தன் மகளையும் உடன் அழைத்துச் செல்ல அவர் முடிவு செய்திருந்தார். பள்ளிக்கூடத்துக்கு வெளியில்  விரிந்துகிடக்கும் உலகை அவர் படிக்க வேண்டாமா? மேலும், ஏற்கெனவே பிரபலமாகிவிட்ட மலாலாவும் இப்போது ஒரு சமூகப் பிரஜையாக அல்லவா  மாறிக்கொண்டிருக்கிறார்?

ரேடியோ, தொலைக்காட்சி, பிபிசி, இணையம், அச்சு இதழ் என்று ஊடகத்தின் பல அம்சங்களை மலாலா இப்போது அறிந்து வைத்திருந்ததால், அமெரிக்கத்  தூதரைச் சந்திப்பதில் அவருக்குத் தயக்கமோ அச்சமோ இருக்கவில்லை. அடித்துப் பிடித்து ஹோட்டலுக்குள் நுழைந்தபோது சந்திப்பு ஆரம்பமாகியிருந்தது.  ஹால்புரூக் அங்கே பிரபலமானவராக இருந்தார். ‘போஸ்னியாவில் அமைதியைக் கொண்டு வந்தவர் அவர்தான்... பாகிஸ்தானிலும் அவர் நினைத்தால் அமைதியை ஏற்படுத்த முடியும்’ என்று அங்கிருந்தவர்கள் நம்பிக்கையுடன் பேசிக்கொண்டனர். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவால் 2009 ஜனவரியில் ஹால்புரூக் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டு, அனுப்பிவைக்கப்பட்டார்.

‘ஆப்கானிஸ்தானில் போதைப் பொருட்கள் போக்குவரத்து அதிகரித்துள்ளது... உடனடியாகத் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று இவர்  கேட்டுக்கொண்டார். ‘பாரம்பரிய விவசாயப் பணிகளில் ஆப்கன் மக்களை ஈடுபடுத்தினால் அவர்கள் போதை மருந்துகளிடம் இருந்து விலகியிருப்பார்கள்,  பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்’ என்பது இவர் நம்பிக்கை. பாகிஸ்தானின் பன்முகப் பிரச்னையின் ஆழத்தை அவர் எப்படிப் புரிந்துகொண்டார், எத்தகைய  தீர்வுகளை அந்நாட்டுக்கு அவர் வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. ஒன்று மட்டும் உறுதி... தனிப்பட்ட முறையில் இந்தப் பணியை அவர் விரும்பி  ஏற்றுக்கொண்டார் என்று சொல்ல முடியாது.

அன்றும் பாகிஸ்தானின் பிரச்னைகளை விவாதிப்பதற்காகத்தான் அவர் வந்திருந்தார். அவருக்கு மிக அருகில் அமர்ந்துகொள்ளும் வாய்ப்பு மலாலாவுக்குக்  கிடைத்தது. மலாலாவைப் பார்த்ததும் அவர் புன்னகைத்தார்.

‘உன் வயது என்ன?’

‘பன்னிரண்டு.’

மலாலா நிமிர்ந்து உட்கார்ந்துகொண்டார். இன்னும் கொஞ்சம் கம்பீரமாக நிமிர்ந்து உட்கார்ந்தால் உயரத்தை அதிகப்படுத்தி காட்டலாம் என்று அவர்  எண்ணியிருக்க வேண்டும். ‘ஓ’ என்றபடி ஹால்புரூக் தன் பார்வையை விலக்கிக்கொள்ள முயன்றபோது மலாலா வாய் திறந்தார்.‘மதிப்புக்குரிய அம்பாஸிடர் அவர்களே... உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும். தயவுசெய்து எங்களைப் போன்ற பெண் குழந்தைகளுக்குக் கல்வி கிடைக்க ஏற்பாடு  செய்யுங்கள்...’

ஹால்புரூக் சட்டென சிரித்துவிட்டார். ‘ஏற்கெனவே உங்கள் நாட்டில் ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. உங்களுக்காக நாங்கள் ஏகப்பட்டதைச் செய்துகொண்டிருக்கிறோம். பொருளாதார உதவியாக  மட்டும் பல பில்லியன் டாலர் ஒதுக்கி யிருக்கிறோம். உங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து மின்சாரம், எரிவாயு என்று ஏகப்பட்ட வசதிகளை அளிப்பது பற்றி  விவாதித்துக்கொண்டிருக்கிறோம்...’

அவர் சொல்ல வந்தது என்ன என்பது மலாலாவுக்குத் தெளிவாகப் புரிந்தது... ‘சிறுமியே, என்னுடைய பட்டியலில் பெண் குழந்தைகளின் கல்வி என்பது இப்போதைக்கு இல்லை. அதைவிட முக்கியமான  வேறு பல பணிகள் உள்ளன. உங்கள் பிரச்னைகள் எல்லாவற்றையும் தீர்த்து வைப்பது என் வேலையல்ல...’ உண்மைதான்... ஒருவருக்கு முக்கியமாகப் படுவது இன்னொருவருக்கு அவ்வாறு படுவதில்லை. எனக்கு நோட்டு புத்தகங்கள் முக்கியம். ஆனால்,  அவற்றையெல்லாம் என்னால் கொண்டுவர முடியவில்லை. அம்மாவுக்கு விரிசல் கண்ட பீங்கான் தட்டுகள் தொடங்கி, வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாமே  முக்கியம். அடலுக்கு கோழிக்குஞ்சு. ‘கார் பாழாகிவிடும் என்று நீங்கள் பயந்தால் துணி சுற்றிக் கொண்டு வருகிறேனே அம்மா’ என்றுகூட கேட்டுப்  பார்த்துவிட்டான். கிடைத்து விட்டதா என்ன?

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை உலகம் முழுக்க கிட்டத்தட்ட 264 லட்சம்!

பள்ளிக்குத் தாமதமாக வந்து, ‘நீட்டு கையை’ என்று அதட்டப்பட்டதில், நடுக்கத்துடன் கை நீட்டி அடிவாங்கிக்கொண்டபோது மலாலா மீதான அவர்களுடைய  பிரமிப்பு கலைந்திருக்கக்கூடும். ‘நம்மைப் போன்றவள்தான் இவளும்’ என்னும் நம்பிக்கையும் கூடவே பிறந்திருக்க வாய்ப்புண்டு.

(மேஜிக் நிகழும்!)