பொன் மகள் வந்தாள்!



கீதா சுப்ரமணியம்


‘தங்கமே...’ எனக் கொஞ்சும்போது, எப்பேர்பட்ட கோப முகத்திலும் புன்சிரிப்பு மலர்கிறது. வார்த்தையில் தங்கம் இருந்தாலே இப்படி என்றால் வாழ்க்கையில் தங்கம் இருந்தால் மகிழ்ச்சிக்கும் மலர்ச்சிக்கும் கேட்கவா வேண்டும்? எட்டாக்கனியின் மீது யாருக்கும் வெறுப்பு வருவதுதானே நியாயம்? ஆனால், என்னதான் தாறுமாறாக விலை எகிறினாலும், மஞ்சள் பிசாசின் மீது மக்களின் மோகம் குறைவதாக இல்லை. அப்படிப்பட்ட தங்கத்தைப் பற்றிய தங்கமான தகவல்கள் இதோ உங்களுக்காக...

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களுள் ஒன்றான மெசபடோமியாவின் சுமேரிய நாகரிகத்தில்தான் முதன்முதலில் தங்கம் பயன்படுத்தப்பட்டது. புனிதமான, ஆடம்பரமான, அலங்காரத்துக்கான நகையாக பயன்படுத்தப்பட்ட அதே காலத்தில், தங்கம் உற்பத்தியில் முன்னணியில் இருந்த எகிப்தியர்கள் இதைச் சுத்திகரிக்கும் கலையைக் கண்டுபிடித்தனர். 4ம், 5ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சில மன்னர்கள், தங்கத்தில் நாணயம் வெளியிட்டனர். முதன்முதலில், பெரிய அளவில் சுத்தமான தங்க நாணயங்களை அறிமுகப்படுத்தியவர் லிடியா மன்னர் கிரீசஸ். அதில், சிங்கம் மற்றும் காளையின் முகங்களைக் கொண்ட ராஜ முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்களே, உலகத்திலேயே முதன்முறையாக வர்த்தகப் பயன்பாட்டுக்கும் கொண்டுவரப்பட்டது.

மகாபாரதத்தில் கூட தங்கம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. துரியோதனனின் மனைவி பானுமதியும் கர்ணனும் தாயம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். கர்ணன் வெல்லப்போகிற நேரத்தில், திடீரென பானுமதி எழுந்து நிற்கிறாள். கர்ணனோ, அவள் தோற்க விரும்பாமல் எழுந்து ஓடுவதாக நினைத்து அவள் இடையிலிருந்த மணி மேகலையைப் பிடித்துத் தடுக்கிறான். அது அறுந்து முத்துகள் சிதறி ஓடுகின்றன. அதன் பிறகுதான் தன் நண்பன் இருப்பதைப் பார்த்து, அவனும் எழுந்து நிற்கிறான். துரியோதனனோ சிறிதும் சந்தேகப்படாமல், ‘எடுக்கவா கோர்க்கவா’ எனக் கேட்கிறான். கர்ணன்-துரியோதனன் நட்பின் ஆழத்தைப் பற்றிப் பேசுகிற இந்தக் கதையில், இன்னொரு உண்மையும் நமக்குப் புலப்படுகிறது. அதாவது, மகாபாரதக் காலத்திலேயே தங்கம், முத்து, மேகலை அணிகிற வழக்கம் இருந்ததை இதிகாசமே சொல்கிறது.

கி.மு. 6,500 முதல் கி.மு 100 வரை வேதகாலம் என அழைக்கிறோம். அப்போது தங்கத்தைப் பயன்படுத்திய வரலாறு இருக்கிறது. கி.மு. 2,600ல் எகிப்தில் தூசியைவிட தங்கத் துகள்கள் அதிகமாக இருந்தனவாம். அதை வைத்து அவர்கள் சாலை போட்டதற்கான சரித்திரச் சான்றுகள் உள்ளன! 49ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கை ஆழ்வாருக்கு மனித உருவில் தரிசனம் கொடுத்த பெருமாளும் தாயாரும் உடல் முழுக்க நகைகள் அணிந்திருந்தார்களாம்.

417ம் நூற்றாண்டில் சரபோஜி மன்னர் அரசவையில் இருந்த அம்பாள் உபாசகர் அபிராமி பட்டர், ஒரு முறை அமாவாசை திதியை மன்னரிடம் பவுர்ணமி திதி எனத் தவறுதலாகக் கூறிவிட்டார். பிறகுதான் அன்று அமாவாசை திதி என்பதை உணர்கிறார். ‘அதை மன்னரிடம் சொன்னால் கடுங்கோபம் கொள்வார், தாம் தண்டனைக்குள்ளாவோம்’ என பயந்து அம்பாளை தீவிரமாக வேண்டும்போது, அந்த அம்பாள் தன் ஒரு காதில் அணிந்திருந்த ஒரு தாடங்கத்தை வானில் வீசி, சந்திரனை வரவழைத்தாராம். அது பவுர்ணமி திதியாக உருவெடுத்து அரசனுக்குக் காட்டுகிறது. அந்தக் காலத்திலேயே அம்பாள் தங்கத் தோடு அணிந்திருந்ததற்கான சான்று இது.

பெண்கள் காஞ்சி, மேகலை, கலாபம், பருமம், விருசிகை, அரைப்பட்டினம், அரைஞாண், செவிமலர் பூ, ஆழி போன்றவற்றை அணிந்தார்கள். பெண்களும் பூணூல் அணிந்திருக்கிறார்கள். பூணூல், தெய்வஉத்தி, தலைக்கோலம், தலைப்பாளை, கிம்புரி, பெருஞ்சூட்டு, சாப்பாணி, மதாணி ஆகிய இத்தனை ஆபரணங்களையும் பெண்கள் அணிந்திருந்தார்கள்.

அந்தக் காலத்தில் ஆண்களும் பெண்களுக்கு நிகராக தங்கம் அணிந்திருக்கிறார்கள். ஆண்கள் அணிகிற நகைகளுக்கு தமிழ்ப் பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. முடி, குண்டலம், வாகு வளையம், வீர கண்டை, அரைஞாண் போன்றவற்றை அணிந்தார்கள். பெண்கள் உச்சந்தலையில் ஆரம்பித்து உள்ளங்கால் வரை ஸ்ரீதேவியார் பெருமணி, பூரப்பாலை வடபள்ளி, தென்பள்ளி, பூடகம், சூடாமணி, பொன்னறிமாலை ஆகியவற்றை அணிந்தார்கள்.திருகுப்பூ, ஜடை பில்லை, ராக்கோடி, சந்திரப்பிரபை, சூர்யப்பிரபை, நெற்றிச்சுட்டி, கழுத்துக்கு கஜஜல் அட்டிகை, காசு மாலை, மாங்காய் மாலை, முல்லரும்பு மாலை, இடையில் ஒட்டியாணம், கைகளில் வங்கி, கழுத்தில் அணிய சந்திரஹாரம், மன்னர்கள் அணிந்திருந்த மோரா டாலர், தங்க கொலுசு, தங்க மெட்டி, கடா, கைகளில் வளையல், பிரேஸ்லெட், மோதிரம் போன்றவற்றையே இப்போது அணிந்து வருகிறார்கள்.

417வது நூற்றாண்டில், இந்தியா உலகிலேயே பணக்கார நாடாக இருந்ததற்கான சரித்திரச் சான்று கள் உள்ளன. அதைத்தான் இந்தியாவின் பொற்காலம் என்கிறோம்.  417ம் நூற்றாண்டிலிருந்து விடுதலை கிடைக்கும் வரை பிரிட்டிஷ்காரர்களால் இந்தியாவின் பெரும்பாலான சொத்துகள் சூறையாடப்பட்டு இங்கிலாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இந்தியா தன் வசமிருந்த தங்கத்தை பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது, அவர்களிடம் மொத்தமாக பறிகொடுத்தது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது சுமார் 200 ட்ரிபில்லியன் மதிப்புள்ள தங்கம், வைரம், நவரத்தின ஆபரணங்கள், தங்கக் கட்டிகள் உள்பட எல்லாம் பிரிட்டிஷாரால் சூறையாடப்பட்டு கப்பல் கப்பலாகக் கொண்டு செல்லப்பட்ட கதைகளும் உண்டு.  1912-15களில் நகைத் தயாரிப்பு என்பது ஆண்கள் மட்டுமே கற்றுக் கொள்ளக்கூடியதாகத்தான் இருந்திருக்கிறது. அதுவும் குருகுல முறையில். இந்தத் துறை பல காலங்களாக ரகசியமான துறையாகவே இருந்து வந்திருக்கிறது. முதல் உலகப் போரின்போது, தங்கம் தயாரிக்கிற உபகரணங்கள் 100 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டன. அந்தக் கஷ்டமான காலத்திலும் பெண்கள் கொஞ்சம் நகைகள் வாங்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள்.

1912ல் வட இந்தியர் சுத்தமான தங்கத்தில்தான் நகை செய்து கொண்டார்கள்.1915ல் இருந்துதான் ரெடிமேட் நகைகள்  பழக்கம் தென்னிந்தியாவில் ஆரம்பித்திருக்கிறது. 1930க்குப் பிறகுதான் கடைகளில் இருந்து பத்தர்கள் என்கிற பொற்கொல்லர்கள் தங்கம் வாங்க, அவர்களிட மிருந்து மக்கள் நகைகள் செய்து வாங்கி அணிய ஆரம்பித்தார்கள்.

1933ல்தான் சென்னையில் ரெடிமேட் நகை ஷோரூம் தொடங்கப்பட்டது. சாரதா சட்டம் வந்தபோது தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கான தேவை அதிகரித்தது. 1962ல் கோல்டு கன்ட்ரோல் வந்த போது 22 கேரட்டில் நகைகள் செய்வதற்கு முழுத் தடை விதிக்கப்பட்டது. 14 கேரட்டில் நகைகள் செய்வதும் அபூர்வமாகவே நடந்தது. தாலி சென்டிமென்ட்டுக்கு பெயர் போனவர்கள் தமிழ்ப்பெண்கள். தாலியை அணிகிறவர்கள் மட்டும் இல்லை, தாலிச்சரடு தயாரிப்பதிலும் தென்னிந்தியா வில் 70 முதல் 80 சதவிகிதம் பேர் பெண்களே. அதில் பற்ற வைப்பது கிடையாது. பின்னுகிற வேலை மட்டுமே. கடைசியில் ஒரு இடத்தில் மட்டுமே பற்ற வைக்க வேண்டும். அதையும் பொற்கொல்லர் பற்ற வைத்துக் கொள்வார். அந்தக் காலத்தில் தங்க நகைகள் தயாரிப்பில் பெண்களின் பங்கு அரிதாகவே இருந்திருக்கிறது.

நகைத் தயாரிப்பில் ஆண்கள் அளவுக்குப் பெண்கள் இல்லாதது வருத்தப்பட வேண்டிய விஷயம்தான். தயாரிப்புத் துறையில் பெண்கள் ஏன்
அதிகம் இல்லை? நெருப்பு பக்கத்தில் இருந்த படி, ஊதி ஊதியும், கம்பிகளை இழுத்தும் செய்ய வேண்டிய வேலையாக இருந்தது. பெண்களின் உடல்வாகு பெரும்பாலும் அதற்கு ஒத்துழைப்பதில்லை. அதனாலேயே அந்தக் காலத்தில் பெண்களின் பங்களிப்பு குறைவாக இருந்தது. குறிப்பாக திருமணத்துக்குப் பிறகு பெண்கள் இந்தத் துறையில் தொடர்வதில் நிறைய சிக்கல்கள் இருந்தன. நகை செய்கிற போது நெருப்பில் வேலை பார்க்க வேண்டும். ஊத வேண்டும்.

இன்று காலம் மாறிவிட்டது. ஊத வேண்டிய அவசியமில்லை. லேசர் தொழில்நுட்பம் ஊதுகிற வேலையை எல்லாம் மாற்றி, அவர்களது வேலையை சுலபமாக்கி இருக்கிறது.

இன்று தயாரிப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகம் பார்க்க முடிகிறது. சரடு பின்னுவது, வைரம் மற்றும் சாதா கற்களை செட் செய்வது என பல துறைகளிலும் பெண்கள் இருக்கிறார்கள். இந்தத் துறையில் நிறைய பெண்கள் வர வேண்டும் என்பதற்காகத்தான் மத்திய அரசாங்கம், அன்னை தர்மாம்பாள் பாலிடெக்னிக்கில் இதற்கான பிரத்யேக படிப்பையே வைத்திருக்கிறது. இங்கே கம்பி போடுவதில் ஆரம்பித்து செட்டிங், ஃபினிஷங் வரை கற்றுத் தருகிறார்கள். வருடந்தோறும் இங்கே படித்து முடித்து வெளியேறுகிற எத்தனையோ பெண்களுக்கு வெளிநாட்டு நகைத் தயாரிப்பாளர்களிடம் வேலைவாய்ப்பு காத்திருக்கிறது. இந்தப் பெண்களை நாம் உபயோகிக்கத் தவறி விடுகிறோம் என்பது வருத்தமான செய்தியே.

அந்தக் காலம் போல ஒரே டிசைன் நகை... அதையே திரும்பத் திரும்ப தயாரித்து விற்கிற நிலை இன்றில்லை. இன்றைய பெண்களுக்கு புதிது புதிதாக வேண்டும். எல்லாவற்றிலும் டிசைனர் அயிட்டங்கள் வேண்டும். நகைகளும் விதிவிலக்கல்ல. அப்படிப்பட்ட தேவையைப் பூர்த்தி செய்ய திறமையான டிசைனர்கள் வேண்டும். இயல்பிலேயே கற்பனை சக்தியும் கிரியேட்டிவிட்டியும் அதிகமுள்ளவர்கள் பெண்கள் என்பதால் நகை டிசைனிங்கில் பெண்களின் பங்கு 50 சதவிகிதமாக இருக்கிறது. காஸ்டிங் என்ற மோல்டிங் பிரிவிலும் கல் செட்டிங் பகுதியிலும் பெண்களை அதிகம் பார்க்கலாம்.

விற்பனைப் பிரிவில் தொடங்கி, முழு வியாபாரத்தையே நடத்துகிற அளவுக்கு நிறைய பெண்கள் இருக்கிறார்கள்.

தாலியை அணிகிறவர்கள் மட்டும் இல்லை, தாலிச்சரடு தயாரிப்பதிலும் தென்னிந்தியாவில் 70 முதல் 80 சதவிகிதம் பேர் பெண்களே!


கீதா சுப்ரமணியம்...

தங்க நகைத் தயாரிப்பிலும் விற்பனையிலும் பிரபலமான மாயவரம்    ஏ.ஆர்.சி. நிறுவனத்தின் 6வது தலைமுறையைச் சேர்ந்தவர். பி.எஸ்சி. தாவரவியல் படித்தவர். தங்க வியாபாரத்தின் மீதான தணியாத ஆர்வம் காரணமாக, ‘பெண்களுக்கு இந்தத் துறை ஆகாது, தாங்காது’ என்கிற தடைகளையும் விமர்சனங்களையும் மீறி, 28 ஆண்டு களாக நகை விற்பனைத் துறையில் தொடர்ந்து கொண்டிருப்பவர். வைரத்தை உலக அளவிலான தரம் பிரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர். தென்னிந்தியாவின் முதல் பெண் நகை விற்பனையாளர் என்கிற பெருமைக்குரியவர். சென்னை கோடம்பாக்கத்தில் ‘ஏ.ஆர்.சி. ஜுவல்லர்ஸ்’ என்கிற பெயரில் நகைக்கடை நடத்துபவர்.

உலகப் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கிற தங்கச் சந்தையைப் பற்றி, தங்க உற்பத்தி முதல் விற்பனை வரை நடக்கிற அத்தனை நுணுக்கங்களோடும் தங்கத்தை விரும்பி அணிகிற சாமானிய மக்களுக்குச் சொல்ல விழைவதே இந்தத் தொடரின் நோக்கம். தங்கத்தை விரும்புவோருக்கும் வெறுப்போருக்கும் விருந்தளிக்கப் போகிற தொடர் இது!

(தங்கத் தகவல்கள் தருவோம்!)
படங்கள்: ஆர்.கோபால்