மணல் கொள்ளைக்கு எதிராக ஒரு வீரலட்சுமி!



நதிகளை பெண்ணுக்கு ஒப்பாக மதித்துப் போற்றியதால்தான் கங்கை, யமுனை, காவிரி, வைகை, பவானி என்று அவை பெண்களின் பெயர்களைத் தாங்கி ஓடுகின்றன. ஒரு சந்ததியை உருவாக்கும் ஆற்றல் பெற்றவள் பெண் என்றால் பல சந்ததிகளைச் செழிக்கவைப்பவை நதிகள். தாய்ப்பாலுக்கு நிகராக மதிக்கப்படும் நதி நீர் சீரழிக்கப்படுவது நங்கையின் சீரழிவுக்கு ஒப்பானது. ஆற்றுப் படுகைகளில் மணல் சுரண்டப்பட்டு காசாக்கப்படும் கொள்ளை மிக முக்கியமான சீரழிவு.

கோடிகள் புழங்கும் இந்த கொள்ளை வணிகம் மாஃபியாக்களின் இரும்புக்கரங்களின் இயக்கத்தில் நடந்து வருபவை. இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல் கைகட்டி, வாய்பொத்திதான் இருந்தாக வேண்டும் என்கிற மன நிலைக்குள் மக்கள் வந்து விட்டாலும் அதற்கெதிரான கீற்றுகள் முளைக்காமல் இருந்து விடவில்லை. காவிரி நதியில் கொள்ளை போகும் மணலைக் காப்பதற்கென நம்பிக்கைக் கீற்றாக முளைத்திருக்கிறார் தனலட்சுமி!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே குமரிபாளையத்தைச் சேர்ந்த இவர் விதிமுறைகளை மீறி அள்ளப்படும் மணல் கொள்ளைக்கு எதிராக சட்ட ரீதியிலும் காந்திய வழியிலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார். மணல் அள்ளிச் செல்லும் லாரிகளை மறித்து சாகும் வரை உண்ணா விரதம் அறிவித்தது, வழக்குகள் மேல் வழக்குகள் தொடுத்து மணல் மாஃபியாக்களை கலங்க வைத்தது என இவர், ‘ஒன் உமென் ஆர்மி’யாகவே செயல்படுகிறார்.

‘‘இயற்கை வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே நமக்கு உரிமை இருக்கிறது. அதை சொந்தங்கொண்டாடுவதற்கும் அழிப்பதற்கும் எவ்வித உரிமையும் நமக்கில்லை. ஒரு நதி உற்பத்தியாகி, தனது பரப்பில் பாய்ந்தோடி, இறுதியாக கடலில் கலந்து வீணாகிறது. இச்சூழலில் மணலானது நதிநீரை நிலத்துக்கு அடியில் கொண்டு சென்று நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கும் பயன்தகு செயலை மேற்கொள்கிறது.

சூழலியலின் ஆகச்சிறந்த கருவியாக விளங்கும் மணல் முழுமையும் சுரண்டப்பட்டு விட்டால் நதிக்கும் நிலத்தடி நீருக்குமான தொடர்பே அற்றுப் போய் நதி வீணாக கடலில் கலந்து விடும். சுற்றுப்புறத்தில் நிலத்தடி நீரே அற்ற சூழல் உருவாகி தண்ணீருக்கு தள்ளாட வேண்டிய நிலை ஏற்படும். மணல் கொள்ளையை கடுமையாக எதிர்ப்பதற்கான காரணம் இதுதான். நான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதால் நீரின் தேவையை நன்கு உணர்ந்திருக்கிறேன்.

எங்களது தோட்டத்தை ஒட்டியே காவிரி பாய்கிறது. காவிரியின் கருணையில்தான் நெல், கரும்பு பயிரிடுவோம். அப்படிப்பட்ட காவிரிக்கு ஒரு பங்கம் நேர்கிறது என்றால் பொறுத்துக் கொள்ள முடியுமா? எனது அம்மாவின் தந்தை சுதந்திரப் போராட்ட வீரர். ஆகவே எனக்குள்ளான போராட்ட உணர்வு மரபு வழியிலேயே வந்ததுதான். என் தந்தை பொதுப்பிரச்னைகளில் பங்கெடுத்துக் கொள்ளக்கூடியவர். சுயசிந்தனையோடும் மனித நேயத்துடனும்தான் என்னை வளர்த்தார். சமூக அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது நம் எல்லோருடைய கடமை என்பதை என் அப்பாதான் எனக்குச் சொல்லிக் கொடுத்தார். முதுநிலை கணிப்பொறியி யல் படித்து விட்டு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மென்பொருள் நிறுவனமொன்றில் பணிபுரிந்தேன்.

கிராமியப் பின்னணியில் வளர்ந்த எனக்கு பரபரப்பான நகரத்து வாழ்க்கை திருப்திகரமாக இல்லை. அப்போதுதான் காவிரி ஆற்றிலிருந்து பல லாரிகளில் மணல் அள்ளிச் செல்வதைக் கேள்விப்பட்டேன். லாரிகளின் போக்குவரத்தால் எழுகிற தூசி, விளைநிலங்களை பாதிப்பதை அறிந்ததும் வேலையிலிருந்து விலகி ஊருக்கே திரும்பி வந்தேன்.  மணல் அள்ளப்படுவது, அதனால் சந்திக்க  விருக்கும் எதிர்வினைகள் குறித்து எங்களது பகுதி மக்களுக்கு அவ்வளவாக விழிப்புணர்வு இருக்கவில்லை. என்றைக்குமே சட்டரீதியில் ஒரு பிரச்னையை அணுகுவது அவசியம். அதோடு காந்திய வழியில் அகிம்சை போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதுவே எனது கொள்கையாக இருந்தது. மணல் குவாரிகளுக்கான விதிமுறைகள் மற்றும் அடிப்படைத் தகவல்களைத் தெரிந்து கொண்டால்தான் சட்ட ரீதியில் போராட இயலும்.

பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை என சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு, குவாரியின் ஒப்பந்ததாரர் யார்? எவ்வளவு ஆழம் வரையிலும் தோண்டலாம்? போன்ற தகவல்களை கோரி விண்ணப்பம் அனுப்பினேன். 1 மீட்டர் ஆழம் வரையிலும் தோண்டுவதற்குத்தான் அனுமதி இருப்பதாக எனக்கு பதில் தரப்பட்டது. அங்கு நடந்ததோ வேறு, விதிமுறைக்கு மாறாக பத்து மீட்டர் ஆழத்துக்கு தோண்டப்பட்டு மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். ஆற்றுக்குள் டீக்கடை கூட இருந்தது. இந்த விதிமுறை மீறலை எதிர்த்து வழக்கு தொடர்வதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டிருந்தேன். அச்சமயத்தில் காவல் துறையை ஏவி எனது செயல்பாடுகளை முடக்குவதற்கான முயற்சியும் நடந்தது.

மணலை அள்ளிச் செல்லும் லாரிகள் எங்களது வீட்டுக்கு அருகிலிருக்கும் சாலை வழியாகத்தான் செல்ல வேண்டும். மணல் அள்ளுவதை நிறுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி, சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக துண்டறிக்கை வெளியிட்டேன். லாரிகளை மறித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டேன். ஊடகங்கள் அச்செய்தியை பதிவு செய்தன. அடுத்து, ‘மணல் அள்ளும் ஒப்பந்ததாரரின் லாரி இந்த வழியே செல்வதால் விளைநிலங்கள் தூசியினால் பாதிக்கப்படுவதோடு, ஒலிமாசும் ஏற்படுகிறது’ என்கிற காரணத்துக்காக நீதிமன்றத்தில் இடைக் காலத் தடை வாங்கினேன். என்னைத் தாக்குவதற்கு அடியாட்கள் வந்தார்கள். ‘வீட்டுக்கூரையை கொளுத்தி விடுவோம்... கரும்புக் காட்டுக்கு தீ வைத்து விடுவோம்’ என்றெல்லாம் மிரட்டினார்கள்.

சமீபத்தில் சர்வோதய தினத்தின்போது ஊர்ப் பொதுமக்கள் பலருடன் மணல் அள்ளப்படும் இடமான ஒருவந்தூருக்குச் சென்ற போது, தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஒருவர் ‘மணலில் போட்டு புதைத்து விடுவேன்’ என்று மிரட்டினார். மிரட்டல்கள் எனக்குப் பழகிப்போன ஒன்றாகி விட்டது. நான் எனக்காக மட்டும் போராடவில்லையே... ஒட்டுமொத்த மக்களுக்காகவும்தானே போராடுகிறேன். மக்களை மீறி இவர்களால் என்னை ஒன்றும் செய்து விட முடியாது என்கிற உறுதியோடு செயல்படுகிறேன்.

லாரி செல்கிற சாலைக்கு குறுக்கே கல் சுவர் எழுப்பி பாதையை முடக்கினேன். இதனால் லாரிகள் செல்ல முடியாமல் வரிசையாக அணி கோர்த்து நின்றிருந்தன. அச்செய்கைக்காக என் மீது பொய்வழக்கு பதிவு செய்தது காவல்துறை. நீதிமன்றத்தில் ஆஜரான போது எனது வாதங்களில் நியாயம் இருப்பதாகக் கூறி அவ்வழக்கிலிருந்து என்னை விடுதலை செய்தனர். இச்சம்பவத்துக்கு பிறகு நான் பரவலான கவனத்துக்கு உள்ளானேன். அரசு அதிகாரிகள் எல்லோரும் மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக இருந்த போது, நான் ஒற்றை ஆளாக எதிர்த்து போராட்டத்தை மேற்கொண்டு வருவதை கவனித்த மக்கள் எனக்கு ஆதரவு தெரிவித்தனர்.

‘தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம்’ மற்றும் ‘மக்கள் கண்காணிப்பகம்’ ஆகிய அமைப்புகளின் தொடர்பு எனக்குக் கிடைத்தது. சூழலியல் பிரச்னைகளுக்கெதிராகப் போராடுவதற்காக சட்டப்பயிற்சி, கருத்தரங்கு என பலவற்றிலும் கலந்து கொண்டேன். அப்பயிற்சிகள் என்னை மேலும் வலுப்படுத்தின. விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் மணல்கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து மனு கொடுத்துக் கொண்டே வந்தேன். ஒரு லாரிக்கு ஒரு லோடு என்று அரசுக் கணக்குக் காட்டி விட்டு, 500 லாரிகளில் 10 லோடு மணல் அள்ளிச் செல்வதையெல்லாம் அம்மனுவில் சுட்டிக் காட்டினேன். பல முறை மனு கொடுத்திருந்தும் அரசு அதிகாரிகள் மெத்தனப்போக்குடன்தான் செயல்பட்டனர்.

‘மணல் துகள் ஓர் உயிரைப் போன்றது... ஒரு பிடி மணல் மூன்று பிடி தண்ணீரை சேகரிக்கும்’ போன்ற தகவல்களை எழுதி பலகை வைத்திருந்தேன். அவற்றை அகற்ற வேண்டும் என்று பஞ்சாயத்து நிர்வாகம் மூலமாக அழுத்தம் கொடுத்தனர். ‘எனது சொந்த நிலத்தில் பலகை வைக்கும் உரிமை எனக்கிருக்கிறது...’ உறுதிபடப் பேசி அவர்களது முயற்சியை முறியடித்தேன். மணல் அள்ளப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே சுற்று வட்டாரத்தில்  நிலத்தடி நீரின் அளவு வெகுவாகக் குறைந்து விட்டது. கிணற்றுப் பாசனம் மேற்கொண்டு வந்த விவசாயிகள் நீர் இல்லாமல் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. மணல் கொள்ளையினால் மக்களின் வாழ்வியலில் ஏற்பட்ட பாதிப்புகளை அறிக்கையாக தயார் செய்து 2005ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற   Unheard Voice of the Majority   கருத்தரங்கில் சமர்ப்பித்தேன்’’ என்கிற தனலட்சுமி,

‘தமிழ்நாடு சூழலியல் கழகம்’ தொகுத்த நூல் ஒன்றில் மணல் கொள்ளையைப் பற்றி விரிவாக கட்டுரை எழுதியிருக்கிறார். மணல் கொள்ளையை நியாயப்படுத்துவதற்காக முன்வைக்கக் கூடிய முக்கியமான கேள்வி மணல் இல்லாமல் எப்படி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடியும்? மணலுக்கு மாற்றுப் பொருள் இல்லாத நிலையில் மணல் அள்ளப்படுவதை தடுக்கச் சொல்வதில் நியாயம் இல்லைதான். ஆனால், அதற்கு ஆகச்சிறந்த மாற்றை தனலட்சுமி தன் ஆய்வின் மூலம் கண்டறிந்திருக்கிறார்.

‘‘கற்களைப் பொடியாக்கி அதையே மணலுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். ‘இது சாத்தியமா’ என்றால், பதில் நம் வரலாற்றில் இருக்கிறது. கல் துகள் மற்றும் கரித்துகளைக் கொண்டுதான் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் செழிக்க வைக்கும் ஆழியாறு அணை கட்டப்பட்டிருக்கிறது. அள்ளிக்கொண்டே இருந்து ஒரு கட்டத்தில் மணலே இல்லாமல் போனால்தான் இந்த மாற்று குறித்து யோசிப்பார்கள். ‘மணலை விட்டு விடுங்கள்’ என்பதே என் வேண்டுகோள். இங்கு இந்த மணல் கொள்ளை 12 ஆண்டுகளாக உலகமறிந்து நடந்து கொண்டிருக்கிறது. ஆற்று நீர் நிலத்தடியில் இறங்குவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது.
விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் சூழலில் நீராதாரத்துக்கான ஒரே வழி காவிரி யில் படுகை அணை கட்டுவதுதான்.

அதன் மூலம் 20 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்புகள் பயன்பெறும். படுகை அணை கட்டுவதற்கான கோரிக்கையை கிராமசபைக் கூட்டம் தொடங்கி விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் வரையிலும் எடுத்துச் சென்றேன்.  அதன் பலனாக 48 கோடி ரூபாய் மதிப்பிலான படுகை அணையைக் கட்டித் தருவதாக பொதுப்பணித்துறையினர் எழுத்து மூலமாக உறுதி கொடுத்துள்ளனர். குமரிபாளையத்தில் அள்ளி முடித்து விட்டு ஓராண்டு காலமாக ஒருவந்தூரில் அள்ளத் தொடங்கி இருக்கின்றனர். எனது பகுதியில் மட்டுமல்ல... எங்குமே மணல் கொள்ளை கூடாது என்பதுதான் என் போராட்டம். மணல் கொள்ளையும் நதியின் மீதான வன்முறைதான். இந்த வன் முறைக்கு எதிராக பரவலான குரல் எழும்ப வேண்டும். இந்தப் போராட்டத்தோடு மட்டும் நான் நின்று விடப் போவதில்லை. என்னால் இயன்ற அளவில் செயல்பட்டுக் கொண்டே இருப்பேன். சூழலியல் சீர்கேட்டின் காரணமாக விவசாயிகளே பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். வயிற்றுக்குச் சோறிடும் விவசாயம் மாண்டால் மானிடம் வாழாது என்பதை எல்லோரும் உணர வேண்டும்’’ என்று உரக்கக் கூறுகிறார் தனலட்சுமி.

லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் ஒருவர் ‘மணலில் போட்டு புதைத்து விடுவேன்’ என்று என்னை மிரட்டினார். மிரட்டல்கள் எனக்குப் பழகிப்போன
ஒன்றாகி விட்டது...

- கி.ச.திலீபன்
படம்: சி.சுப்பிரமணியன்