என் சமையலறையில்!



புளிக்காய்ச்சல் செய்யும் போது, கொதித்ததும் எண்ணெய் எல்லாம் மேலே வந்து தெளிவாக மிதக்கும். அதுதான் சரியான பதம் என்பதற்கு அடையாளம். உடனே இறக்கிவிட வேண்டும். குளிர்ந்த நீரில் கழுவிவிட்டு பிறகு வெண்ணெயைக் காய்ச்சினால் அதிகம் கசண்டு வராது.  எலுமிச்சைப் பழத்தை நான்காக நறுக்கி, உப்பு தூவி, இட்லி தட்டில் வேக வைத்து எடுக்கவும். பிறகு அதில் தேவையான அளவு மிளகாய் தூள், பெருங்காயம், கடுகு தாளித்துச் சேர்த்தால் திடீர் ஊறுகாய் ரெடி.  ரவா தோசை செய்யப் போகிறீர்களா? ரவையை வெறும் கடாயில் நன்கு பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதை 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு, மற்ற பொருட்களுடன் கலந்து தோசை வார்த்தால், சீரான வடிவில் தோசை வரும்.
- என்.ஜரினா பானு, திருப்பட்டினம்.

இட்லிக்கு அரிசியை ஊற வைக்கும் போது, அத்துடன் ஐந்தாறு சோயா பீன்ஸ் போடவும். இதை மாவாக அரைத்து இட்லி சுட்டால் புஸ்ஸென வரும்... மிருதுவாகவும் இருக்கும். தண்ணீருக்கு பதில் பால் கலந்த நீரினால் கோதுமை மாவைப் பிசைந்து, பிறகு சப்பாத்தி செய்தால் அதீத சுவை. வற்றல் குழம்பு செய்யும் போது, குழம்பை இறக்கிய பின் ஒரு டீஸ்பூன் வறுத்த எள்ளுப்பொடி போடவும். நல்லெண்ணெய் வாசனையுடன் குழம்பு கமகமக்கும்.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

ஃபிரிட்ஜில் ஐஸ் வாட்டரை வைக்க பெட் பாட்டில் வாங்கும் போது, வரிவரியாக டிசைன் செய்த பாட்டில்களை வாங்கக் கூடாது. பிளெயின் பாட்டிலையே வாங்க வேண்டும். பாட்டிலைக் கழுவுவது சுலபம்... இடுக்குகளில் அழுக்கும் கிருமிகளும் சேராது. பிரெட் ஸ்லைஸ்களை நீள நீளமாக வெட்டி, நெய்யில் பொரித்தெடுக்கவும். உடனே பொடித்த சர்க்கரையில் அதைப் புரட்டி எடுத்துப் பரிமாறவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் எளிய ஸ்வீட் தயார். இந்தஸ்வீட்டுக்கு பிரவுன் பிரெட் சிறந்தது, ஆரோக்கியமானது!
- ஆர்.அஜிதா, கம்பம்.

கடையில் விற்கும் லெமன் சால்ட் வாங்கிக் கொள்ளவும். அதில் 1/2 டீஸ்பூன் அளவு எடுத்து குக்கரில் போட்டு, லேசாக நீர் விட்டு கொதிக்க விடவும். பிறகு எடுத்துக் கழுவினால் குக்கரின் உட்புறம் பளிச்சென்று இருக்கும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரையை வதக்கும் போது கரண்டியின் காம்புப் பகுதியை வைத்துக் கிளறவும். கட்டி ஏற்படாமல் கீரை உதிர் உதிராக இருக்கும். மாங்காய், இஞ்சி, புதினா என எந்த வகை தொக்கு செய்தாலும், கடைசியாக 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.
- மகாலெஷ்மி சுப்ரமணியன், புதுச்சேரி-9.

பஜ்ஜி செய்யும் மாவில் சிறிதளவு சீரகத் தூளும் கொத்தமல்லிப் பொடியும் சேர்த்தால் பஜ்ஜி சுவையாக இருக்கும்.
- ஆர்.மீனாட்சி, திருநெல்வேலி-6.

கீரைப் பொரியல் செய்யும் போது, உப்பை கீரை வெந்தவுடன் போட்டால் கீரையின் பசுமை நிறம் மாறாமல் இருக்கும். சத்துகளும் குறையாமல் கிடைக்கும்.
மோர்க்குழம்பு செய்யும் போது இரண்டு கற்பூர வல்லி இலைகளை அதில் சேர்க்கலாம். வாசனையாக இருக்கும். உடம்புக்கும் நல்லது. சிறிது பேரீச்சம்பழத்தை சிறிது பாலுடன் சேர்த்து அரைத்தெடுக்கவும். இதை கோதுமை மாவுடன் சேர்த்துப் பிசைந்து சப்பாத்தி செய்யவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
- ரஜினி பாலசுப்ரமணியன், சென்னை-91.

ரவா லட்டு செய்யப் போகிறீர்களா? சிறிது அவலை மிக்ஸியில் ரவை போல பொடித்து, அதை நெய்யில் வறுத்து ரவா லட்டு கலவையுடன் சேர்க்கவும். அத்துடன் சிறிது பால் பவுடரையும் கலக்கவும். பிறகு லட்டு பிடித்தால் செம ருசி!
- கே.ராஜேஸ்வரி, மணப்பாறை.