இனிது இனிது வாழ்தல் இனிது!



‘‘உன்னை மன்னிக்கிற அளவுக்கு எனக்குப் பெரிய மனது உண்டு. ஆனால், உன்னை மறுபடி நம்புகிற அளவுக்கு நான் முட்டாள் இல்லை...’’
- நம்பிக்கைத் துரோகத்தை எப்படி அணுக வேண்டும் என்பதற்கான அழகான, அர்த்தமுள்ள வாசகம் இது.

துணை தன்னை ஏமாற்றுவதாக, வேறொருவருடன் உறவு கொண்டிருப்பதாக எழுகிற சந்தேக எண்ணம், வாழ்க்கையிலேயே மிகவும் வலி நிறைந்த உணர்வு. அப்படி ஒரு சந்தேகம் எழுகிற போது அது உண்மையாக இருக்குமா இல்லையா என்கிற தவிப்பு இன்னும் கொடியது. அதை எப்படி உறுதி செய்வது?
பல நேரங்களில் இந்த சந்தேகம் உண்மையானதாகவே இருக்கும். நம் துணை அப்படிப்பட்டவர் அல்ல என்கிற எண்ணத்தில் அந்த சந்தேகத்தை அலட்சியப்படுத்துவது சரியானதல்ல. அப்படி அலட்சியப்படுத்தும் பட்சத்தில், சந்தேகத்துக்குக் காரணமான துணையின் அந்தத் தகாத உறவு இன்னும் பலமாகும் வாய்ப்புகளே அதிகம். எனவே, சந்தேகம் என வந்து விட்டால், அது குறித்து ஆராய்ந்து தெளிவதே சிறந்தது.

துணைக்கு அப்படியொரு தகாத உறவு இருப்பதை பல நேரங்களில் கண்கூடாகப் பார்க்க நேரிடலாம். அலுவலகத்தில் அல்லது வீட்டில் வேறொரு நபருடன் நெருக்கமாக இருக்கிற காட்சிகள், மறுக்க முடியாத சாட்சிகளாக அமைந்து அதிர்ச்சியைக் கொடுக்கலாம். துணை உங்களை ஏமாற்றுகிறார்  என்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம். அந்த அறிகுறிகளுக்கான தடங்களை மூன்றாகப் பிரிக்கலாம்.


உங்கள் கணவர் அல்லது மனைவியின் பை, பர்ஸில் காஸ்ட்லியான ஹோட்டலில் உணவருந்தியதற்கான பில்லை பார்ப்பீர்கள். ஆனால், துணையிடம் விசாரித்தால் அப்படி எந்த ஹோட்ட லிலும் சாப்பிடவே இல்லை என மறுப்பார். பில்லில் குறிப்பிட்டுள்ள தேதியில் தனக்கு அலுவலகத்தில் கடுமையான வேலை இருந்ததாக பொய் சொல்வார்.

துணைக்குத் தெரியாமல் இன்னொரு செல்போனை ரகசியமாக வைத்து உபயோகிக்கலாம்.கணவருக்கோ, மனைவிக்கோ தேவைப்படுகிற ஒரு அன்பளிப்பை தன் பீரோவில் வைத்திருப்பார். ஆனாலும், அதைத் துணையிடம் கொடுக்க மாட்டார். துணையின் பிறந்த நாளைக்கு விலை உயர்ந்த அன்பளிப்பு வந்திருக்கும். ஆனால், அதை யார் கொடுத்தார்கள் என்கிற விவரத்தை ரகசியமாக வைத்திருப்பார்.

மொபைல் பில், கிரெடிட் கார்ட் ஸ்டேட்மென்ட் போன்றவை வழக்கத்தைவிட அளவுக்கதிக கட்டணத்தைக் காட்டும். இன்னும் இப்படி ஏராளமான அறிகுறிகள் துணையின் தகாத உறவைக் காட்டிக் கொடுக்கும். துணையின் நடத்தையில் சந்தேகத்துக்குரிய மாற்றங்களை உணர்வீர்கள். உதாரணத் துக்கு அது வரை உங்களுடன் நெருக்கமாக இருந்தவர், திடீரென உங்களிடமிருந்து விலகிச் செல்லலாம் அல்லது வழக்கத்துக்கு மாறாக உங்களிடம் அதிக நெருக்கத்தையும் காட்டலாம்.

வீட்டில், குடும்பத்தில், உறவுகளுக்குள் நடக்கும் மிகப் பெரிய பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பார் அல்லது அவ்வப்போது தலைமறைவாவார்.
தேவையே இல்லாமல் வழக்கத்துக்கு மாறாக எல்லா விஷயங்களைப் பற்றியும் விவாதிப்பார் அல்லது விமர்சிப்பார். குடும்ப விசேஷங்கள், விழாக்களில் பங்கு
பெறுவதைத் தவிர்ப்பார். தன்னுடன் வேலை பார்க்கிறவர்கள், ஜிம்மில் தன்னுடன் உடற்பயிற்சி செய்கிறவர்கள், பிற பொழுதுபோக்குகளில் உடன் ஈடுபட்டிருப்பவர்களுடன் துணையை ஒப்பிட்டு அதிகம் பேசுவது அல்லது வழக்கமாக அடிக்கடி பேசுகிற ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றிய பேச்சை திடீரென நிறுத்துவது.


துணையின் அசாதாரண பழக்க வழக்கங்கள்கூட அவரது திடீர் தகாத உறவு பற்றி உங்களுக்கு சிக்னல் கொடுக்கும்.பொதுவாக கொஞ்ச நாள் வாழ்ந்ததுமே துணையின் பழக்க வழக்கங்கள் பற்றித் தெரிய வரும். அப்படிப் பார்த்துப் பழகிய பழக்க வழக்கங்களில் திடீரென மாற்றங்கள் தெரிந்தால், அவை உங்களுக்கு சந்தேகம் தர வேண்டும். உதாரணத்துக்கு வேலை முடிந்த உடனே வீட்டுக்குத் திரும்புகிற உங்கள் துணை, சமீப நாட்களாக தாமதமாக வீடு திரும்பலாம் அல்லது வீட்டுக்கே வராமலும் இருக்கலாம். வேலை நிமித்தம் வெளியில் தங்கியதாக, அதிக வேலை இருந்ததாக... காரணங்களை அடுக்கலாம்.

வழக்கமாக அலுவலகம் தொடர்பான பார்ட்டிகளுக்கு உங்களையும் அழைத்துச் செல்கிறவர், திடீரென உங்களைத் தவிர்க்கலாம். தனது செல்போனை துணை பார்ப்பதை ஆட்சேபிக்காதவர், திடீரென ஆட்சேபிக்கலாம். முன்பெல்லாம் போன் வந்தால், உங்கள் எதிரிலேயே பேசியவர், சில நாட்களாக போனை எடுத்துக் கொண்டு வேறு இடத்துக்கு நகரலாம். போனை கீழே வைக்காமல் எப்போதும் கையிலேயே வைத்திருக்கலாம். கம்ப்யூட்டர் உபயோகத் தடங்களை உடனுக்குடன் அழிக்கலாம்.

கிரெடிட் கார்டு அதிகம் உபயோகிக்கிற பழக்கமுள்ளவர், சமீப காலமாக அதைத் தவிர்த்து பணமாகப் புழங்கலாம். திடீரென தன்னுடைய வேலைகளைத் தானே செய்து கொள்ளலாம். தன் உடையில் படிந்த வாசனையையும் லிப்ஸ்டிக் கறையையும் மறைப்பதற்காக இப்படிச் செய்யலாம். வழக்கத்துக்கு மாறாக வீட்டுக்கு வந்ததும் குளிக்கலாம். அதிக சென்ட் உபயோகிக்கலாம். இந்த அறிகுறிகள் எல்லாமே உங்களுக்கு  சந்தேகத்தைத் தர வேண்டும். ஆனால், அதற்காக இவை அத்தனையையும் போட்டுக் குழப்பிக் கொண்டு உங்கள் துணை நிச்சயம் ஏமாற்றுவதாக ஓர் இறுதி முடிவுக்கும் வர வேண்டாம். மனிதர்களிடம் காணப்படுகிற திடீர் அசாதாரண மாற்றங்களுக்கு அவர்களது மன இறுக்கம் கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். நெருங்கிய நண்பர், தோழி அல்லது உறவினரின் பிரிவு, மரணம் போன்றவைகூட அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.

சிலருக்கு உடல் ரீதியான வேறு சில பிரச்னைகளின் விளைவால் இப்படி வரலாம். ஆனாலும், இந்த விஷயத்தில் அலட்சியமாக இருப்பதும் ஆபத்தானதே. பொதுவாக இப்படிப்பட்ட விஷயங்கள் ஆரம்பத்திலேயே தெரியவராது. உங்களுக்கு சந்தேகம் வந்து, நீங்கள் தோண்டித் துருவி ஆராய ஆரம்பிப்பதற்குள் பிரச்னை எங்கேயோ போய் நிற்கும்.

நமக்கெல்லாம் இப்படி நடக்காது... என் துணை சொக்கத் தங்கம் என்கிற நினைப்பில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்வதும் வேண்டாம். சாட்சியே இருந்தால் கூட சிலர் இப்படித்தான் சுயசமாதானத்தில் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வார்கள்.

எப்படிக் கையாள்வது?

ரொம்பவும் நாசுக்காகவும் நாகரிகமாகவும் கையாள வேண்டிய பிரச்னை இது. துணையின் முகத்துக்கு நேராகப் பேசித் தீர்க்க முடியாது. சில நேரங்களில் உங்கள் துணை தனது தகாத உறவுக்கான குறிப்புகளை தன்னையும் அறியாமல் உங்களிடம் கசிய விடலாம். உதாரணத்துக்கு தான் உறவு கொண்டுள்ள அந்த குறிப்பிட்ட நபரைப் பற்றி, அவரது திறமையைப் பற்றி, அறிவைப் பற்றி உங்களிடம் பேசலாம். அவருக்கு திடீரென வந்த விலை உயர்ந்த அன்பளிப்புக்கு அவர் தகுதியானவர் இல்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனாலும், அவர் அதைப் பற்றிய தகவல்களை உங்களிடமிருந்து மறைப்பார். தான் தொடர்பு வைத்துள்ள அந்த நபருடனான உங்களது சந்திப்பையோ அல்லது இரு குடும்பங்களுக்கும் இடையிலான சந்திப்பையோ வேண்டுமென்றே தவிர்ப்பார். அவரை தூக்கமிழக்கச் செய்கிற எஸ்.எம்.எஸ்., இ மெயில், கண்ட நேரத்து தொலைபேசி அழைப்புகளும் கூட அவரைக் காட்டிக் கொடுக்கும்.

இந்தப் பிரச்னையை வேறு வேறு விதமாக அணுகுகிறவர்கள் உண்டு. ஒன்றும் செய்ய முடியாது. தவறு செய்தாலும் அவருடன் வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என துணையைச் சார்ந்திருப்பவருக்கு அமைதி காப்பதைத் தவிர வேறு தீர்வு இருக்காது.துணையின் செய்கை அதீத கோபத்தைக் கொடுக்கும். ஆனாலும், அந்தக் கோபம் குழந்தைகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்கிற பயம், துணையின் செய்கையைவிட அதிகக் கவலையைத் தரும். ‘என்னை எதுவும் கேட்காதே... நானும் எதையும் சொல்ல மாட்டேன்’ என்கிற துணையின் போக்கு மனத்தளவில் பயங்கரமாக பாதிக்கும். துணை தவறு செய்ய, நாம் தண்டனையை அனுபவிப்பதா என்கிற எண்ணம் இன்னும் அதிக வலியைத் தரும்.

உங்களுக்கு துணையின் மீது 1 சதவிகிதம் சந்தேகம் இருந்தால், அதை அவர் 99 சதவிகிதம் மறுக்கவே முயற்சி செய்வார். ஆனால், இதெல்லாம் தற்காலிகப் பிரச்னை என்றோ, தலையெழுத்து என்றோ, தானாகச் சரியாகி விடும் என்றோ நீங்கள் அமைதி காத்தால், முடிவு நிச்சயம் அப்படி இருக்காது. அது வேறு பயங்கர பிரச்னைகளுக்கான அடித்தளமாக அமையலாம்.

மனிதர்களிடம் காணப்படுகிற திடீர் அசாதாரண மாற்றங்களுக்கு அவர்களது மன இறுக்கம் கூட ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். நெருங்கிய நண்பர், தோழி அல்லது உறவினரின் பிரிவு, மரணம் போன்றவை கூட அதற்குக் காரணமாக இருக்கக் கூடும்.

(வாழ்வோம்!)
எழுத்து வடிவம் : மனஸ்வினி