இந்த மாதம் இனிய மாதம்!



ஹாய்!எப்படி இருக்கீங்க? போன மாச விசேஷங்களை அந்தந்த தேதிகள்ல அனுசரிச்சீங்களா? நல்லது. இப்ப இந்த ஏப்ரல் மாசத்து விசேஷங்கள் என்னென்னன்னு பார்க்கலாமா?

இந்த மாசம் சந்திர கிரகணம் வருதுங்க. ஏப்ரல் 4 சனிக்கிழமை (பங்குனி 21) பௌர்ணமி திதி அன்று ஹஸ்த நட்சத்திரத்திலே சந்திர கிரகணம் நிகழுது. பிற்பகல் 3:45 மணிக்கு ஆரம்பிச்சு, முன்னிரவு 7:15 மணிக்கு விடுதுங்க. காலை 7 மணிக்குப் பிறகு எதுவும் சாப்பிட வேண்டாம்னு பெரியவங்க சொல்வாங்க. அதாவது, 12 மணி நேரத்துக்கு வயத்தைக் காயப் போடணுமுங்க! கிரகணம் முடிஞ்சப்புறம் தலைக்குக் குளிச்சிட்டு சாப்பிடலாம். இந்த கிரகணத்தை முன்னிட்டு ஹஸ்த நட்சத்திரக்காரங்க சாந்தி பண்ணிக்கணும்... உத்திரம், ரோஹிணி, திருவோணம், சித்திரை நட்சத்திரக்காரங்க பரிகாரம் செய்துக்கணும்னு பஞ்சாங்கம் சொல்லுதுங்க. சாந்தியும் பரிகாரமும் பக்கத்துக் கோயில்லயே பண்ணிக்கலாம்!

அடுத்ததா ஏப்ரல் 9 அன்னிக்கு வராஹ ஜெயந்திங்க. கரெக்ட். திருமாலின் மூன்றாவது அவதாரம்தான். பன்றிமுக அவதாரம்.
 
அரக்கன் ஹிரண்யகசிபுவின் அண்ணன் ஹிரண்யாட்சன் பிரம்மன்கிட்டேயிருந்து வரங்கள் வாங்கி, அந்த வலிமையில் மூவுலகையும் அச்சுறுத்தி வந்தான். அந்த அச்சுறுத்தலின் உச்சம் என்ன தெரியுமோ? அவன் பூமியை அப்படியே கவர்ந்து சென்று பாதாள உலகத்தினுள் ஒளித்ததுதான். உடனே மஹாவிஷ்ணு, வராஹ (கொம்புடைய பன்றி) வடிவெடுத்து பாதாள உலகம் போய் ஹிரண்யாட்சனைக் கொன்று பூமியை மீட்டு வந்தாருங்க. அந்த சந்தோஷத்தை இந்நாளில் கொண்டாடும் அதே நேரம், இந்த பூமியில் தொடர்ந்து இயற்கை பொய்த்தும், உலக மக்கள் சுயநலம் கொண்டும், ஹிரண்யாட்சக கொடுமை புரிவதிலிருந்து அந்த மஹா விஷ்ணுவே காப்பாற்ற வேண்டும்னு பெருமாளை வேண்டிக்கலாம்.

ஏப்ரல் 14 அன்னிக்கு தமிழ் (மன்மத) வருடப் பிறப்பு அமையுதுங்க.

‘மன்மதத்தின் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே நன்மைமிகும் பல்பொருளுநண்ணுமே மன்னவரால்சீனத்திற்கு சண்டையுண்டு தென்திசையில் காற்றுமிகும்
கானப்பொருள் குறையுங்காண்’ இது மன்மத வருஷத்துக்காக, இடைக்காடர் என்ற சித்தர் எழுதி வெச்ச வெண்பாங்க.இதுக்கு என்ன அர்த்தம்? ‘இந்த மன்மத வருஷத்துல நல்ல மழை பெய்யும்... இதனால உலகத்து ஜீவராசிகள் எல்லாத்துக்கும் அதிக நன்மை விளையும். மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் மிகுதியாகவே கிடைக்கும்... சீன நாட்டுக்குள்ள சண்டை ஏற்படும்... இந்தியாவின் தென்திசையிலேர்ந்து பலமா காத்து வீசும்... காட்டிலேர்ந்து கிடைக்கற பொருட்கள் குறையும்!’ 

தமிழ்ப் புத்தாண்டுங்கறது சூரியன் மேஷ ராசிக்கு வந்து உச்சம் பெறும் நாளுங்க. இப்படிப் புதுசாகப் பிறக்கும் ஆண்டைக் கொண்டாடப் பல வழி இருக்குங்க. அறுசுவைகளும் அன்னிக்கு சேர்த்தே ஆகணுங்கற சம்பிரதாயத்தால், வேப்பம்பூ, மாங்காய்னு சேர்த்து கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, காரம், இனிப்பு, உப்புன்னு அறுசுவைகளும் கலந்து சமைப்பது வழக்கம். குடும்பத்தார் எல்லாரும் ஒண்ணா, சந்தோஷமா எங்கேயாவது போய்விட்டு வந்தும் இந்நாளைக் கொண்டாடலாமுங்க. எல்லாத்தையும்விட, குடும்பத்துப் பெரியவங்கன்னு மட்டுமல்லாம, நமக்குத் தெரிந்த வேறே பெரியவங்களையும் சந்திச்சு அவங்க ஆசியையும் பெறுவது ரொம்பவும் சிறப்பானதுங்க!

மஹாவிஷ்ணுவோட முதல் அவதார தினமும் இந்த மாசமே, 16.4.2015 அன்னிக்கு வருதுங்க... மத்ஸய ஜெயந்தி!

மத்ஸயம்னா மச்சம், மச்சம்னா மீன். வேதங்களையெல்லாம் திருடி வெச்சுகிட்டு பிரம்மனோட செயல்பாட்டையே சீர்குலைச்சாங்க சில அரக்கர்கள். அப்போதான்
பிரளயம் முடிஞ்சு புது உலகம் உருவாக்கப்பட வேண்டிய நிர்ப்பந்தம் பிரம்மனுக்கு. ஆனா, வேதங்களை ஆதாரமாகக் கொண்டுதான் ஒவ்வொரு பிரளயத்துக்கு அப்புறமும் பிரம்மன் பிரபஞ்சத்தைப் படைக்கறது வழக்கம். என்ன பண்றது? வழக்கம்போல திருமாலிடம் சரணடைந்தான். பிரளயத்தால் சுற்றிலும் கடல் சூழ்ந்திருக்க அசுரர்கள் அந்தக் கடலுக்கடியில் வேதங்களை கொண்டு போய் ஒளிச்சு வெச்சிருந்தாங்க. உடனே திருமால் மீன் உரு எடுத்தார். கடலுக்குள்ள புகுந்து அரக்கர்களை வீழ்த்தி வேதங்களை மீட்டு வந்தார். அதாவது, பகவானின் முதல் அவதாரமே மக்களின் நன்மையை உத்தேசித்து எடுக்கப்பட்டதுதான்னு புரியுது இல்லையா? அதிலும் எந்த காலத்திலும் அழிக்க முடியாத வேதம்கற கல்விச் சொத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது. பரீட்சை எழுதி முடிச்சுட்டு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் இந்த மாசத்துல இந்த அவதார தினம் வர்றதுதான் எவ்வளவு பொருத்தம்!

‘அக்ஷய’ (அட்சய)ன்னா, ‘மேலும் மேலும் வளர்க’ன்னு அர்த்தம். பகவான் கிருஷ்ணனோட ஆசீர்வாதம் இது. அதாவது, குசேலர் மூலமா உலகுக்கு அவர் உணர்த்த விரும்பினதெல்லாம் இதுதான்... ‘போதும்கற மனமே பொன் செய்யும் மருந்து. செலவுகளைச் சுருக்கிக்கறது எப்படி சேமிப்பைக் கூட்டுமோ, தேவைகளைச் சுருக்கிக்கறது எப்படி வசதிகளைப் பெருக்குமோ, அதுபோல துர்சிந்தனைகளைக் குறைத்துக்கொண்டால் நாடெங்கும் பகை விலகும், மனிதாபிமானம் செழிக்கும், வளம் கொழிக்கும்!’ இந்த நன்னாள்ல நகைக்கடையில போய் சேமிப்புத் தொகையைக் கொட்டாம, சமுதாயத்துல நலிஞ்சிருக்கறவங்களுக்கு என்ன உதவி பண்ணலாம்னு யோசிப்போம். பரந்த மனம், பல நன்மைகளை நிலைநிறுத்தும். அதுசரி, அக்ஷய த்ரிதியை என்னிக்கு வருது? ஏப்ரல் 21!

ஏப்ரல் 24 அன்னிக்கு ராமானுஜர் ஜெயந்தி.

ராமானுஜர்னு ஒரு மகான் தோன்றியிருக்காவிட்டால், பக்தியும் கடவுள் வழிபாடும் எல்லோருக்கும் உரியதுங்கற சமத்துவம் உதிச்சிருக்குமாங்கறது சந்தேகம்தான்! 18வது முயற்சியிலதான் தன் குரு திருக்கோட்டி நம்பிகள்கிட்டேயிருந்து உபதேசம் கிடைச்சுது ஸ்ரீராமானுஜருக்கு. தன்னோட இருப்பிடத்திலிருந்து குரு வசித்த திருக்கோஷ்டியூருக்கு அப்படி அவர் நடையாக நடந்த போது ஒரு வைராக்கியம் உரம் பெற்றதுங்க. அது  குருகிட்டேயிருந்து உபதேசம் பெறுவது மட்டுமல்ல... அவரைச் சந்திக்க 18 முறை வந்தபோது வழியில் தான் பார்த்த, தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை உயர்த்தப்படணுங்கறதும்தான். அதனாலதான் குருவின் உத்தரவையும் மீறி, கோயில் கோபுரத்தின் உச்சியில் போய் நின்னுகிட்டு, ஊர் ஜனங்கள் எல்லோரையும் கூவிக் கூப்பிட்டு தான் கற்ற ரகசிய உபதேசத்தை வெளிப்படையாக்கினார். குருவோட சாபத்தால, தான் நரகம் போனாலும் பரவாயில்லை, இத்தனை நூறு பேர் சொர்க்கம் அடையட்டும்கற பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் இவர். ஸ்ரீரங்கம் முதலான பிரபல கோயில்கள்ல இவர் வரையறுத்துத் தந்த ‘ஒழுகுமுறை’தான், இன்னிக்கும் நடைமுறையாகப் பின்பற்றப்பட்டு வருதுங்க.


ஏப்ரல் 2015 விசேஷங்கள்


இந்த மாசத்துல வழக்கமான விசேஷங்கள் என்னென்ன?

பிரதோஷம் -1,16;
பௌர்ணமி - 4;
சங்கடஹர  சதுர்த்தி -7;
சஷ்டி - 10, 24;
ஏகாதசி - 15, 30;
மாத சிவராத்திரி -17;
அமாவாசை - 18;
கிருத்திகை - 20;
சதுர்த்தி - 22.