7ம் வகுப்பு மாணவி உருவாக்கிய அன்புச்சுவர்



பெங்களூரின் ஒய்ட்பீல்ட் பகுதியில் உள்ள அனுமன் கோயில் ஏழைகள் விரும்பும் இடமாக மாறியுள்ளது. தரிசனத்திற்கு வருபவர்களுக்கு அன்னதானம்  வழங்கப்படுகிறது என்பதால் இல்லை. கோயிலின் சுவரில் தொங்க விடப்பட்டுள்ள உடைகள், குடைகள் போன்ற பொருட்களால்தான் இது மற்றவர்கள்  விரும்பும் இடமாகியுள்ளது. ‘அன்புச்சுவர்’ என எழுதப்பட்டுள்ள அந்த சுவரில் தொங்கும் பொருட்களை யாரும் எடுத்துச்செல்லலாம் இலவசமாக.

அன்புச்சுவர், ஈரான் நாட்டில் தான் முதலில் தோன்றியது. அங்கு 16,000 மக்களுக்கு வசிப் பிடம் கிடையாது. அவர்களுக்கு உதவும் வகையில்  முதன்முதலில அன்புச்சுவர் உருவாக்கப்பட்டது. இந்த திட்டம் இந்தியாவிலும்  பிரபலமடைந்து வருகிறது. பெங்களூர், மைசூர், உடுப்பி, ஐதராபாத் என  பல இடங்களில் தன்னார்வலர்கள் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில், நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில், விருதுநகர் மாவட்டம்  திருவில்லிபுத்தூர், சென்னை என பல இடங்களில் அன்புச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரில் ஒயிட்பீல்டில் உள்ள அன்புச்சுவர் நம் கவனத்தை ஈர்க்கக் காரணம் அதை நடத்தி வருவது 7ம் வகுப்பு பள்ளி மாணவி என்பது தான்.  ஸ்ரேயாசி செரின், அன்புச்சுவற்றின் ஒவ்வொரு செங்கல்லையும் அமைத்துள்ளார். 12 வயதே நிரம்பும் செரின் கூறுகையில், ‘‘நாம பயன்படுத்திய  உடைகள் கொஞ்சம் பழசானதும் அதை மறுபடியும் அணிய யோசிக்கிறோம். அதை தூக்கி வீசவும் மனம் இருக்காது. அப்படித்தான் என்னிடம் 20  உடைகள் இருந்தது. அக்கம்பக்கத்தினரிடம் கொடுக்கலாம் என்றால் நாங்கள் என்ன பிச்சைக்காரர்களா என எண்ணுவார்களோ என்ற தயக்கம் இருந்தது.

உண்மையில் பலர் குழந்தைகளுக்கு சரியான உடை வாங்கி தரமுடியாத நிலையில் உள்ளனர். இந்த எண்ணம் தான் அன்புச்சுவர் உருவாக காரணம்.  அன்புச்சுவர் அமைக்க நான் செலவழித்தது ரூ.100 மட்டுமே. கோயில் சுவரில் ஆணி அடிச்சேன், என்னிடம் இருந்த உடைகளை அதில் தொங்க  விட்டேன். சுவற்றில், இது அன்புச்சுவர், விரும்பியவர்கள் எடுத்துச்செல்லலாம். இருப்பவர்கள் பொருட்களை அன்புடன் வைக்கலாம் என எழுதினேன்.

இப்போது இந்த சுவரில் உடைகள், குடைகள், புத்தகங்கள், லஞ்ச் பாக்ஸ்கள் என விதவிதமான பொருட்கள் வைக்கப்படுகின்றன. சிறிது நேரத்தில்  அதனை தேவைப்படுவோர் எடுத்தும் செல்கின்றனர். நான் மட்டுமல்ல என் தோழிகளும் பொருட்களை வைக்கிறார்கள். அன்புச்சுவரை எழுப்பியதுடன்  என் பணி முடியவில்லை. ஒவ்வொரு வாரமும் அக்கம்பக்கத்தினரிடம் பொருட்களை தானம் பெற்று சுவரில் வைக்கிறேன்’’ என்கிறார் சிறுமி ஸ்ரேயாசி  செரின்.

கோமதி பாஸ்கரன்