சம்மதித்தார் சங்கீதா!



உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் மகனும், ஒளிப்பதிவாளரும், ‘சிலம்பாட்டம்’ படத்தின் இயக்குனருமான சரவணனைக் காதலித்து திருமணம் செய்து, 8வது படிக்கும் மகளை கவனித்துக் கொள்வதற்காக நடிப்புக்கு முழுக்குப் போட்டவர், ‘பூவே உனக்காக’ சங்கீதா. மீண்டும் அவரை சினிமாவிலும், டி.வி தொடரிலும் நடிக்க அழைத்தபோது மறுத்தார். கே.பாலசந்தர் கேட்டபோது கூட, ‘ஸாரி’ சொல்லிவிட்டார். இந்நிலையில், 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மலையாளப்படத்தில் நடிக்க வருகிறார் சங்கீதா.

 1998ல் ஸ்ரீனிவாசன் எழுதி, இயக்கி, ஹீரோவாக நடித்த படம், ‘சிந்தாவிஷ்டயாய ஷியாமளா’. ஸ்ரீனிவாசன் ஜோடியாக சங்கீதா நடித்தார். அந்தப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. சங்கீதாவுக்கு சிறந்த நடிகைக்கான கேரள அரசு விருது கிடைத்தது. இப்போது மலையாளத்தில் ‘த்ரிஷ்யம்’, ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’, ‘பெங்களூரு டேஸ்’ போன்ற ஃபேமிலி சென்டிமென்ட் படங்கள் வெற்றிபெறும் நிலையில், குடும்பக்கதை கொண்ட படத்தை எழுதி இயக்கும் ஸ்ரீனிவாசன், ஹீரோயினாக நடிக்க சங்கீதாவிடம் பேசினார். ‘சிந்தாவிஷ்டயாய ஷியாமளா’ கேரக்டரை நினைவுபடுத்துவதால், மீண்டும் நடிக்க வருவதாக சொன்ன சங்கீதா, இந்தப் படத்தில் மட்டும்தான் நடிப்பாராம்.