இயக்குனரை தயாரிப்பாளராக்கிய ஹீரோ!



“நான் மட்டும் இப்போ வெளியே இருந்திருந்தா... உன்னோடு புரமோஷன் நிகழ்ச்சிகள்ல கலந்துகிட்டு இருந்திருப்பேன். என்னோட பிரார்த்தனை உன்கூட இருக்கு. உன்னோட இந்த படமும் 100 கோடி வசூலை நிச்சயம் தாண்டும்.”சிறையில் இருந்தபடி சஞ்சய் தத் தனது ஆத்ம நண்பரான அஜய் தேவ்கனுக்கு எழுதிய கடிதம் இது.

சரியாக 'சிங்ஹம் ரிட்டர்ன்ஸ்” பட ரிலீசுக்கு 3 நாள் முன்பு அஜய்க்கு இந்த கடிதம் வந்து சேர்ந்தது. இப்போது படம் ரிலீசாகி 10 நாள் கடந்துவிட்டது. வசூலோ ரூ.120 கோடியைத் தாண்டிவிட்டது. இந்த கடிதத்தில் இன்னும் பல உருக்கமான விஷயங்களை சஞ்சு பாபா (சஞ்சய் தத்தை பாலிவுட்டார் இப்படித்தான் அழைப்பார்கள்) எழுதியிருந்தார். அதையெல்லாம¢ படித்துவிட்டு அஜய் கண்ணீர் விட்டு அழுதாராம்.

ஒரு படத்தில் நடிக்கும்போதுதான் சஞ்சய் தத்துக்கும் அஜய் தேவ்கனுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அது அதி தீவிர நட்பாகிப் போகும் என அப்போது இருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. அதே போன்ற ஒரு நட்புதான், 'சிங்ஹம் ரிட்டர்ன்ஸ்' டைரக்டர் ரோஹித் ஷெட்டிக்கும் அஜய் தேவ்கனுக்கும் இடையிலானது.

அஜய்யின் அப்பா வீரு தேவ்கன் ஸ்டன்ட் மாஸ்டர். அவரிடம் கடைசி உதவியாளராக இருந்தவர்தான் ரோஹித் ஷெட்டி. அப்போதிலிருந்தே அஜய்யும் ரோஹித்தும் நண்பர்கள். அஜய் ஹீரோ ஆனதும் ரோஹித்தான் அவரது படங்களுக்கு ஸ்டன்ட் அமைப்பார்.

'எத்தனை நாட்களுக்குதான் ஸ்டன்ட் டைரக்டரா மட்டும் இருக்கப்போறே. பிலிம் டைரக்டரா மாறு' என அஜய் கொடுத்த ஊக்கம்தான் இன்று நம்பர் ஒன் டைரக்டராக ரோஹித்தை மாற்றியுள்ளது. அஜய்யை வைத்து மட்டுமே 8 படங்களை அவர் இயக்கி விட்டார். எல்லாமே ரூ.100 கோடி பிசினஸ் செய்த படங்கள்தான். அதில் 'சிங்ஹம்' (தமிழ் சிங்கம் பட ரீமேக்) படமும் அடங்கும். அந்த 'சிங்ஹம்' படத்தின் இரண்டாம் பாகம்தான் இந்த 'சிங்ஹம் ரிட்டர்ன்ஸ்'.

ஆனால் இது தமிழ் 'சிங்கம் 2'வின் ரீமேக் கிடையாது. ரோஹ¤த்தே எழுதிய கதைதான் 'சிங்ஹம் ரிட்டர்ன்ஸ்'.போலிச் சாமியாரின் முகத்திரையைக் கிழிப்பது, கறுப்புப் பணத்தை மீட்பது, நேர்மையான இளம் அரசியல்வாதிகளை ஜெயிக்க வைப்பது என சூப்பர் மேன் ஹீரோவாக இதில் வந்தார் அஜய் தேவ்கன்.

பரபரவென பறக்கும் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்துவிட்டன. அதுவும் அஜய், ரோஹித் ஜோடி சேர்ந்தால் அது ப்ளாக்பஸ்டர் படம்தான் என்பது ரசிகர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் முதல் நாளில் மட்டுமே இந்த படம் நாடு முழுவதும் ரூ.24 கோடியை அள்ளியது.

படத்தில் கரீனா கபூர் ஹீரோயின். கவர்ச்சி குத்தாட்டம் எதுவும் போடவில்லை. அதனால் தனியாக ஐட்டம் சாங் நடிகையின் பாட்டு கூட இதில் சேர்க்கவில்லை. முகம் சுழிக்கும் காட்சியோ, இரட்டை அர்த்த வசனமோ துளி கூட இல்லை. ஃபேமிலி ஆடியன்சை டார்கெட் செய்து மட்டுமே இந்த படம் உருவாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம், அஜய் தேவ்கன். இது வெறும் ரோஹித் படமாக இருந்திருந்தால் மேற் குறிப்பிட்ட அம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நிச்சயம் இருந்திருக்கும்.

ஆனால் அஜய் தேவ்கனே இந்த படத்தை தயாரித்ததால் அவர் போட்ட முதல் கண்டிஷனே இந்த படத்துல இது எல்லாம் இருக்கக்கூடாது என்பதுதான். நண்பன் சொல்லுக்கு மறுபேச்சா என்பது போல் உடனே தலையசைத்துவிட்டார் ரோஹித். அதற்குப் பிறகு அஜய் போட்ட ஒரு உத்தரவுதான் அவரை அதிர்ச்சியடையச் செய்தது. ''இந்த படத்தை என்னோடு சேர்ந்து நீயும் தயாரிக்கிறே.

பட பட்ஜெட்டில் 30 சதவீதம் நீ செலவு பண்ணினா போதும். ஆனால் சம்பளம் போக, லாபத்துல உனக்கு 40 சதவீதம் எடுத்துக்கோ'' என அஜய் சொல்ல, இன்ப அதிர்ச்சியில் ரோஹித்தின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தது. நண்பேன்டா என்ற எக்கோ குரல¢ நான்கு திசையிலிருந்தும் ஒலிக்க, ரோஹித் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டார்.

ஆஜ்மீர் தர்காவுக்கு அடிக்கடி செல்பவர் அஜய். படத்தில் தர்கா சம்பந்தமான காட்சிகள் ஆங்காங்கே வரும். ஒரு காட்சியில் 'இங்கு வந்தா நான் நினைச்சது நடக்கும்'' என அஜய் ஒரு வசனம் பேசுவார். தொடர்ந்து 3 படங்கள் மூலம் ரூ.300 கோடி வசூலை ஈட்டிக் கொடுத்துவிட்டார் அஜய். அவர் நினைப்பது நடக்கிறது.

ஜியா