வரவேற்றார் வைரமுத்து! பாராட்டினார் பாரதிராஜா!



தம்பி ராமையாவின் யதார்த்தமான காமெடியும் பாடிலேங்வேஜும் அவருக்கு ஏராளமான ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்துள்ளது. அப்படி சமீபத்தில் அவருக்கு ரசிகர்களை சம்பாதித்துக் கொடுத்த படங்கள் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. அதுமட்டுமல்ல, புதுமுகங்கள் நடிக்கும் படங்களில் அவர்தான் முதுகெலும்பாக இருந்து ரசிகர்களை மகிழ்விப்பார். அவருடன் ஒரு சந்திப்பு. ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’,

 ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ பட அனுபவம் எப்படியிருந்தது?

குறிப்பிட்ட இயக்குனர்கள்தான் என்னிடம் ரசித்து வேலை வாங்குபவர்கள். அந்த வகையில் என்னுடைய காட் பிரதர் பிரபுசாலமோன், ‘சிறுத்தை’ சிவாவை சொல்லலாம். அதற்கு அடுத்து பார்த்திபன்தான். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு போகும்போதும் வெற்றிப் படத்தில் வேலை செய்கிறோம் என்கிற புத்துணர்வு கிடைத்தது. ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்துல இளம் மாமனார் கேரக்டருக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

உங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு?

 கோவை ஏர்போர்ட்டில் வைரமுத்துவை தற்செயலாக சந்தித்தேன். ‘உங்களுடைய சமீபத்திய படங்களையெல்லாம் பார்த்தேன். மிகவும் பிரமாதமாக நடித்திருக்கிறீர்கள். உங்கள் புதல்வன் உமாபதியை எப்போது அறிமுகப்படுத்தப் போகிறீகள்? ஒட்டுமொத்த திரையுலகமே உங்கள் புதல்வனை வாழ்த்த காத்திருக்கு’ என்றார். இரண்டாவது பாராட்டு,

 ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தைப் பார்த்துவிட்டு  பார்த்திபன் மூலம் பாரதிராஜா என்னை சந்தித்தார். ‘நான், ‘மைனா’, ‘கும்கி’, ‘சாட்டை’ பார்த்தேன். ‘சாட்டை’யில் சேட்டைக்காரனாக பார்த்தேன். ஆனால், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்துல அப்படியே வாழ்ந்துட்டே. அந்தந்த கேரக்டராகவே மாறுவது எல்லாருக்கும் வாய்க்காது. நீ தமிழ் சினிமாவுல அற்புதமான கலைஞன்’ என்று கட்டிப்பிடித்து பாராட்டினார்.

அடுத்து?

விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கும் படம், எஸ்.ஜே.சூர்யாவின் ‘இசை’, ரவி.கே.சந்திரனின் ‘யான்’, ஆர்யாவுடன் ‘யட்சன்’, சரத்குமாருடன் ‘சண்டமாருதம்’, கார்த்தியுடன் ‘கொம்பன்’. தவிர, ‘அமரகாவியம்’,‘காவியத்தலைவன்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘கங்காரு’ உள்ளிட்ட  படங்கள் விரைவில் ரிலீஸாகவுள்ளன.

தோல்வியை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?


சில வருடங்களுக்கு முன் பெரிய தோல்வியை சந்தித்தேன். என்னுடைய நடிப்பையும் கடுமையாக குறை சொல்லி விமர்சித்தார்கள். அந்த சமயத்தில் நான் துவண்டு போகாமல் எனக்கான இடம் இருக்கு, நான்தான் வழிதெரியாம போயிட்டேன் என்று எனக்கு நானே சமாதானம் சொல்லிக் கொண்டு கடுமையாக உழைக்க ஆரம்பித்தேன். இறைவன் அருளால் இப்போது என் வாழ்க்கையில் ஒளி வீச ஆரம்பித்துள்ளது. அன்று என்னை திட்டித் தீர்த்தவர்கள் இன்று அருமையான நகைச்சுவை நடிகர் என்று வாழ்த்துகிறார்கள்.

சுரேஷ்ராஜா