மிரட்ட வருகிறார் மியாவ்!



சமீபத்தில் ஒரு நாயை மாடியிலிருந்து இரு இளைஞர்கள் தூக்கி வீசிய காட்சி வாட்ஸப்பில் பரவி பெரும் சர்ச்சை ஆனது. விலங்குகள் நல ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நாயை மீட்டு சிகிச்சையெல்லாம் அளிக்கப்பட்டது. அந்த உண்மைச் சம்பவத்தைப் போலவே சாயல் கொண்ட ஒரு கதையை ‘மியாவ்’ என்று தலைப்பு வைத்து இயக்கியிருக்கிறார் சின்னா பழனிச்சாமி.

“படத்தோட டைட்டிலே பம்முற மாதிரி இருக்கே?”
“பொதுவா பூனை பம்மும். புலிதான் உறுமும். எங்களோட ‘மியாவ்’ பம்மவேண்டிய நேரத்துலே பம்மி, உறும வேண்டிய நேரத்திலே உறுமும். இந்தப் படத்தோட கதைக்களம் இதுவரை தமிழில் மட்டுமல்ல, இந்திய சினிமாவிலேயே வந்ததில்லை. நாலு இளைஞர்கள் ஒரு பூனையை துன்புறுத்துறாங்க. பாதிக்கப்பட்ட பூனை, ஸ்ப்லிட் பர்சனாலிட்டியா மாறி பழிவாங்குறதுதான் படத்தோட ஒன்லைன். எப்படி... மிரட்டலா இல்லை?”
“குழந்தைகள் படமோ?”

“நிச்சயமா கிடையாது. காமெடி த்ரில்லர். ஆறிலிருந்து அறுபது வரை ரசிக்கலாம். தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலராஜிடம் இந்தக் கதையைச் சொன்னதுமே, அவர் விஷுவலா மனசுக்குள் ஓட்டிப் பார்த்து உடனே ஓக்கே சொல்லிட்டாரு. இது ரிஸ்க்கான கதையாச்சேன்னு அவர் தயங்கியிருந்தாருன்னா ‘மியாவ்’ சாத்தியமே ஆகியிருக்காது.”

“பெரிய ஹீரோக்களோட கால்ஷீட் கிடைக்காதப்போதான் தேவரும், இராம நாராயணனும் விலங்குகளை வெச்சி படம் பண்ணணும்னு நெனைப்பாங்க....”“எங்க தயாரிப்பாளருக்கு சினிமாவில் நீண்ட அனுபவமிருக்கு. அவங்க அப்பாவை தமிழ்நாட்டுக்கே நல்லா தெரியும். ‘கபாலி’ படத்தோட திருச்சி விநியோக உரிமையை எடுத்தவரு அவருதான்.

அவரு நினைச்சிருந்தா முன்னணி ஹீரோவை வெச்சி பண்ணுங்கன்னு சொல்லியிருக்கலாம். எனக்கும் விளம்பரத்துறையில் போதுமான அனுபவமுண்டு. முப்பது செகண்டில் கதை சொல்ல கத்துக்கிட்டவன் நான்.  ‘ப்ளாக் தண்டர்’, ‘அமிர்தா காலேஜ்’, ‘சேலஞ்ச் சோப்’புன்னு நான் எடுத்த விளம்பரங்களே என் திறமையை சொல்லும்.

புதுமையான களத்தில் புதுசா செய்யணும்னு நாங்க ஆசைப்பட்டோம். ‘பூனைதான் சார் ஹீரோ’ன்னு தயாரிப்பாளர் வின்சென்ட் அடைக்கலம் சாரிடம் சொன்னதுமே ஆர்வமானார். உடனே இதுக்கு முன்னாடி பூனையை வெச்சி யாராவது படம் பண்ணியிருக்காங்களான்னு ரிசர்ச் பண்ணினோம். பாம்பு, ஆடு, நாய், மாடு, குரங்குன்னெல்லாம் வெச்சி எடுத்திருக்காங்க. பூனையை ஹீரோவாக்குறது முதன்முதலா எங்க ‘மியாவ்’தான்.
“பூனையோட ஒத்துழைப்பு எப்படி?”

“பிரமாதம். மொத்த ஷூட்டிங்கையும் முப்பதே நாளில் முடிச்சிட்டோம்னா பார்த்துக்கங்களேன். எங்க ஹீரோவா நடிச்ச பூனையோட பேரு செல்பி. பெர்ஷியன் பூனை. தமிழ்நாட்டோட சீதோஷ்ணம் அதுக்கு செட் ஆகாது. எனவே அதுக்குன்னு ஸ்பெஷலா ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட வாகனத்தை தயார் பண்ணினோம்.

பூனையோட ஊரு பெங்களூரு. படப்பிடிப்பு முடிஞ்சதுமே, உடனே திருப்பி அனுப்பிட்டோம். பொதுவா பூனைகளுக்கு பாலுன்னா உயிரு. ஆனா, நம்ம செல்பி, பால் சாப்பிடாது. அதுக்குன்னு தனியா தயாரிக்கிற உணவைத்தான் சாப்பிடும். எங்களுக்கு திருப்தி ஏற்படுகிற வகையில் நடிச்சிக் கொடுத்துட்டாரு மிஸ்டர் மியாவ்.”

“மற்ற நடிக நடிகையர்?”
“குமார், ‘சலீம்’ படத்தில் நடிச்சிருக்கார். அப்புறம் ஹைடன், சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான சஞ்சய் மிக்கி, புதுமுகம் ராஜான்னு திறமையாளர்களைத்தான் பயன்படுத்தியிருக்கோம். ஊர்மிளா காயத்ரி கன்னடத்தில் கலக்கிட்டிருக்காங்க. அவங்களை தமிழுக்குக் கொண்டு வர்றோம்.”“விலங்குகளை வெச்சி படமெடுத்தா இப்போ பிரச்னைன்னு சொல்றாங்களே?”

“நாம கரெக்டா பண்ணினோம்னா எந்தப் பிரச்னையும் இல்லை. படப்பிடிப்பை ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்தவங்க வந்து மேற்பார்வை பண்ணினாங்க. அவங்களுக்கு திருப்தி ஏற்படுறமாதிரிதான் பண்ணினோம். பூனையாருக்கு நாங்க ரொம்ப ரிஸ்க்கெல்லாம் கொடுக்கலை. அதுமாதிரி காட்சிகளை கிராஃபிக்ஸில் உருவாக்கியிருக்கோம்.

படம் பார்க்குறவங்களுக்கு எது ஒரிஜினல் பூனை, எது கிராஃபிக்ஸ் பூனைன்னு வித்தியாசமே தெரியாது. ‘செலவைப்பத்தி கவலையில்லே, ஹாலிவுட் கிராஃபிக்ஸ் கலைஞர்களையே பயன்படுத்திக்கலாம்’னு தயாரிப்பாளர் அபிப்ராயப்பட்டாரு. ஆனா, நம்ம ஊருலேயே ‘தி பெஸ்ட்’ கொடுக்க ஆளிருக்குன்னு சொல்லி நம்ம ஆட்கள் கிட்டேயே வேலை வாங்கினோம். கிராஃபிக்ஸ் நிபுணர் ரமேஷ் ஆச்சார்யா, ஹாலிவுட்டுக்கு சவால் விடுகிற நேர்த்தியை கொண்டு வந்திருக்காரு.”

“உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே?”
“சொந்த ஊரு கோயமுத்தூரு. கல்லூரியில் விலங்கியலை விருப்பப் பாடமா எடுத்துப் படிச்சதாலயோ என்னமோ முதல் படமே ‘மியாவ்’. சினிமாவில் ஆர்வம் என்பதை தவிர்த்து வேறெந்த சினிமா பின்புலமும் எனக்கு இல்லை.

கோவையிலிருந்து கோலிவுட்டுக்கு படையெடுத்து விளையாட்டா பத்தொன்பது வருஷம் ஆயிடிச்சி. விளம்பரப் படங்களில் செஞ்சுரி அடிச்சிட்டேன். சினிமாவில் இப்போதான் பர்ஸ்ட் ரன் எடுத்திருக்கேன். ரசிகர்கள் கொடுக்கிற டிக்கெட் காசுக்கு திருப்தியா நான் இயக்கிய ‘மியாவ்’ அமையும்னு நம்புறேன்.”

- சுரேஷ் ராஜா