வாகா



இன்னுமொரு ரோஜா!

ராணுவத்தில் சேர்ந்தால் ‘சரக்கு அடிக்கலாம்’ என்கிற உயரிய இலட்சியத்தோடு எல்லை பாதுகாப்புப் படைவீரராக பணிக்கு சேர்கிறார் விக்ரம் பிரபு. இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியான வாகாவில் அவருக்கு வேலை. சரக்கு தாராளமாக கிடைத்தாலும் ஒரு கட்டத்தில் தனிமை வாட்டியெடுக்க, ஊருக்கே போய் பொழைப்பைப் பார்க்கலாமா என்று முடிவெடுக்கும் சமயத்தில் நாயகி ரன்யா ராவை சந்திக்கிறார்.

காஷ்மீர் குளிரையும் விரட்டி அந்த சந்திப்பு அவர் மனதில் அனல் மூட்டுகிறது. காவல் பாதி, காதல் மீதியாக நாட்கள் கழிகிறது. அச்சமயத்தில் உள்ளூர் கலவரம். இதனால் தன் தாய்நாடான பாகிஸ்தானுக்கு ரன்யா திரும்புகிறார். அவரை பத்திரமாக ஊர் கொண்டு போய் சேர்க்கிறார் விக்ரம் பிரபு. தன் எல்லைக்குள் புகுந்த இந்திய வீரரை சிறை செய்து பாகிஸ்தான் சித்திரவதை செய்கிறது.

இந்த வாழ்வா சாவா போராட்டத்தில் தன்னோடு சிறைக் கொடுமை அனுபவிக்கும் சகவீரர்களையும் காப்பாற்றி, தன் காதலையும் எப்படி வாகாக தக்கவைத்துக் கொள்கிறார் என்பதே ‘வாகா’.கிராமத்து இளைஞனாக, இராணுவ வீரனாக, உயிருக்குயிரான காதலனாக விக்ரம் பிரபு தன் நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்துகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி. சித்திரவதை காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார்.

வாலிப வயோதிக அன்பர்களை ஏங்கவைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறார் ஹீரோயின் ரன்யாராவ். கடைத்தெருவுக்கு வரும்போதெல்லாம் அவரது கண்ணழகில் படம் பார்க்கும் ரசிகர்கள் காலி ஆகிறார்கள். விஜய், அஜீத் படங்களில் புக் ஆகும் அளவுக்கு திறமை ரன்யாவிடம் கொட்டிக் கிடக்கிறது.

சித்தப்பாவாக நடித்திருக்கும் கருணாஸ், பாகிஸ்தான் ராணுவத் தளபதியாக வரும் பாலிவுட் வில்லன் சாஜி செளத்ரி ஆகியோர் சபாஷ் போட வைக்கிறார்கள்.ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் கேமிரா, காஷ்மீரின் அழகை படம்பிடித்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து வைக்கிறது. இமான் இசையில் ‘ஆணியே புடுங்க வேண்டாம்’ பாடல் ஒன்ஸ்மோர் ரகம்.

‘‘ஒரு நொடி உங்க மனசும் புத்தியும் என்ன சொல்லுதோ அதை மட்டும் செஞ்சி பாருங்க. வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்’’ போன்ற வசனங்களில் கைதட்டலை அள்ளுகிறார் வசனகர்த்தா கெய்சர் ஆனந்த். எடிட்டர் ராஜா முகமதுவின்  கத்திரி கச்சிதம். இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் ‘வாகா’, இன்னொரு ‘ரோஜா’.