ஆசை ஆசையாய் ரவிமரியா



டைட்டில்ஸ் டாக் 11

(சென்ற இதழ் தொடர்ச்சி)


டிகிரி மேலே டிகிரி வாங்கினாலும் காலேஜ் படிக்கிறப்பவே சினிமா மேலே கவனம் திரும்பிடிச்சி. முதன்முதலா நான் வேலை பார்த்தது ஆல் இண்டியா ரேடியோவில். அதுக்கப்புறம் பத்திரிகைத்துறையின் மீது என் கவனம் திரும்பிச்சி. இயக்குநர் லிங்குசாமி மாதிரியானவர்கள் அப்போ பத்திரிகைகளில் கதை, கவிதை எழுதி சினிமாவுக்குள் நுழைஞ்சதாலே நானும் அதே ரூட்டைப் புடிச்சேன்.

சினிமாவில் தீவிரமா முயற்சிக்கலாம்னு முடிவெடுத்தப்போ ஒரே நாளில் ரெண்டு இன்டர்வியூக்கு அழைப்பு வந்துச்சி. ஒண்ணு டெய்லி பேப்பரில் நிருபருக்கான இன்டர்வியூ. இன்னொண்ணு உதவி ஆய்வாளருக்கான இன்டர்வியூ.சப் இன்ஸ்பெக்டர் வேலைக்கு போனா காலம் பூரா காக்கிதான்னு தோணுச்சி.

நிருபராயிட்டா, சட்டுபுட்டுன்னு சினிமாவுக்குள் நுழைஞ்சிடலாம்னு நெனைச்சேன். திருநெல்வேலியில் நடந்த அந்தப் பத்திரிகை இன்டர்வியூக்கு போனேன். கொடுமை என்னன்னா அந்த இன்டர்வியூவில் நான் செலக்ட் ஆகலை. உள்ளதும் போச்சே நொள்ளக்கண்ணா என்பது போல ஆயிடிச்சி.

ஒருவழியா என்னை தேத்திக்கிட்டு சினிமா வாய்ப்பு தேடுவதற்காக சென்னை வந்தேன். வசந்தபாலன் மூலமா ஷங்கரிடம் வேலைக்கு சேர்வதுதான் பிளான். என்னமோ அது அப்போ நடக்கலை. வசந்தபாலன் என்னை காந்திகிருஷ்ணாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்புறம் ஏ.வெங்கடேஷிடம் தொழில் கற்றேன். சினிமாவின் நுணுக்கங்கள் பலவற்றையும் எஸ்.ஜே.சூர்யா சொல்லிக் கொடுத்தாரு.

பல போராட்டங்களை கடந்துதான் முதல் படத்தை இயக்கினேன். ‘ஆசை ஆசையாய்’னு கவிதையா டைட்டில் வெச்சி படம் எடுத்தேன். என்னை நம்பி படம் இயக்க வாய்ப்பு கொடுத் தவரு தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி. இயக்குநர் ஆனதுமே கல்யாணம். காதல்  கல்யாணம்
தான்.

அந்தப் படம் சென்னையிலேயே நூறு நாள் ஓடியும் எனக்கு அடுத்த வாய்ப்பு கிடைக்க ஆறு வருஷமாச்சி. ‘மிளகாய்’ என்னோட ரெண்டாவது படம். அதுக்கப்புறம் படம் இயக்க பெருசா வாய்ப்பு கிடைக்கலை.‘ஆசை ஆசையாய்’ ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்காது. நாம எதிர்பார்க்காதது எதுவோ திடீர்னு கிடைக்கும். அதுதான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே. நான் நடிகன் ஆவேன்னு கொஞ்சமும் எதிர்பார்க்கலை. திடீர்னு ஆயிட்டேன்.

‘வெயில்’ படம் எடுக்குறப்போ வசந்தபாலன் ஒருநாள் டிஸ்கஷனுக்கு கூப்பிட்டிருந்தார். நானும் போயி பேசிக்கிட்டிருந்தேன். அந்தப் படத்துலே வில்லன் ரோலுக்கு ஆளு கிடைக்காம அவஸ்தை பட்டுக்கிட்டிருந்தார். ஒருநாள் திடீர்னு போன் பண்ணி, “தலைவா, வில்லன் ரோலுக்கு ஆள் புடிச்சிட்டேன்” என்றார். “யாரு”ன்னு கேட்டா, “நீதான்”னு சொன்னாரு. பேஜார் ஆயிடிச்சி. “எனக்கு நடிக்க ஆசையில்லை.

டைரக்‌ஷன்தான் என் ரூட்டு”ன்னு சொன்னேன். அவர் வற்புறுத்தி என்னை வில்லனாக்கினார். “என்னை நடிக்க வைக்கிறதுன்னா காமெடியா நடிக்க வைங்க, வில்லனா வேணாம்”னு எவ்வளவோ வற்புறுத்தினேன். அவரோ, “உனக்கு டெர்ரர் ஃபேஸ்தான் இருக்கு. காமெடி இந்த மூஞ்சிக்கு வராது”ன்னு சொல்லிட்டாரு.

‘வெயில்’ படத்துக்கு அப்புறம் ஒரு சினிமா விழாவில் யதேச்சையாக இயக்குநர் எழிலை பார்த்தேன். என்னோட பேச்சில் தெறித்த காமெடியைப் பார்த்துட்டு, “நீங்க காமெடியா நடிக்கலாமே?”ன்னு கேட்டாரு. இப்படித்தான் ‘மனம் கொத்தி பறவை’ படத்துலே காமெடி வில்லன் ஆனேன். அப்புறம் வரிசையா ஏகப்பட்ட படங்கள் காமெடியும், வில்லத்தனமுமா கலந்துகட்டி பண்ணிக்கிட்டிருக் கேன்.

என்னோட ஆசையை விடுங்க. என் பாட்டிக்கு ஒரு ஆசை உண்டு. அவங்க ரொம்ப குள்ளம். என்னோட உயரத்துக்கு வளரணும்னு அவங்களுக்கு ஆசை. நாம என்ன பண்ண முடியும்? அவங்க சின்ன வயசுலேயே வளர்ந்திருக்கணும். அவங்க ஆசையைப் பூர்த்தி பண்ண ஒரு ஸ்டூல் போட்டு நிக்கவெச்சி என் உயரத்துக்கு அவங்களையும் உயரமாக்கிட்டேன். அந்தப் போட்டோவைத்தான் இங்கே பார்க்கிறீங்க.

எழுத்தாக்கம் : சுரேஷ் ராஜா

(தொடரும்)