எய்தவன்



சாது மிரண்டால்?

அப்பா, அம்மா, தங்கை, சொந்த பிசினஸ் என்று மகிழ்ச்சியான வாழ்க்கை ஹீரோ கலையரசனுக்கு. டாக்டராக வேண்டும் என்கிற லட்சியம் அவரது தங்கைக்கு. நடுத்தரக் குடும்பத்தின் தகுதிக்கு மீறிய ஆசைதான். கடன் வாங்கி கல்லூரியில் சேர்க்கிறார்கள். தங்கை சேர்ந்தவுடனேயே கல்லூரியின் அங்கீகாரம் ரத்தாகிறது. சீட்டு வாங்க தான் கொடுத்த பணத்தையும் வாங்க முடியவில்லை, போராட்டத்தில் தங்கையின் உயிரும் பறிபோகிறது. இதற்கு காரணமானவர்களைத் தேடி கலையரசன் பழிதீர்த்தாரா என்பதே மீதி கதை.

கலையரசன், சோலோ ஆக்‌ஷன் ஹீரோவாக மொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்துகிறார். காதலனாக, அண்ணனாக, சமூகப் போராளியாக எல்லா கட்டங்களிலுமே நடிப்பில் கிளாஸ். அவரைத் துரத்தி காதலிக்கும் வேலையை சரியாகச் செய்கிறார் சாட்னா டைட்டஸ்.பிரேம்குமாரின் கேமரா கோணங்கள் அட்டகாசம். பார்த்தவ் பர்கோவின் இசை பரவாயில்லை.கடந்த ஆண்டு பிரபல மருத்துவக் கல்லூரியில் நடந்த பிரச்சனையை வைத்து சுவாரஸ்யமாக கதை அமைத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் சக்தி ராஜசேகரன்.