அர்த்த ராத்திரி பச்சக்! ரெஜினா அசத்தல்
“சந்தீப் - ரெஜினா ஜோடிக்கு ‘மாநகரம்’ எப்படி ஹிட் படமாக அமைந்ததோ, அதேபோல் இந்த ‘மகேந்திரா’வும் திருப்புமுனையாக இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் மகேஷ்பாபு.“இது எந்த மாதிரி படம்?”“ரொமான்ஸ், காமெடி கலந்த கமர்ஷியல் படம். தீயவர்கள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த நாயகன் குழந்தைப் பருவத்திலிருந்தே நல்லவனாக வாழ்கிறான்.
 தங்கள் வழிக்கு அவனைக் கொண்டு வர குடும்பத்தினர் முயற்சிக்க, அவர்களைத் தன் வழிக்கு கொண்டு வர நாயகன் முயற்சிக்கிறார். இந்த ஃபேமிலி யுத்தத்தில் யார் ஜெயித்தார்கள் என்பதுதான் கதை. படம் ஆரம்பத்திலிருந்து க்ளைமாக்ஸ் வரை பாடல், ஆக்ஷன், ரொமான்ஸ் என்று கமர்ஷியல் அம்சங்கள் கலந்திருந்தாலும் இந்தக் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.”“டப்பிங் படமா?”
“இல்லை சார். அப்படி சொல்ல முடியாது. தெலுங்கில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த ‘ரா ரா கிருஷ்ணய்யா’தான் இந்த ‘மகேந்திரா’. நான் ஸ்டாப் என்டர்டெயினராக வெளிவந்த இந்தப் படத்துக்கு தெலுங்கில் செம ரெஸ்பான்ஸ் கிடைத்தது. அதே ரெஸ்பான்ஸ் தமிழிலும் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக சில விஷயங்களை சேர்த்துள்ளோம். டப்பிங் படம்னு எழுதிடாதீங்க.” “ஹீரோ சந்தீப் கிஷன்?”
 “சந்தீப் கிஷன் மீது கோலிவுட்டின் பார்வை முன்பை விட இப்போது அதிகமாக வீழ்ந்துள்ளது. சுசீந்திரன் மாதிரியான குவாலிட்டியான படங்கள் கொடுக்கும் இயக்குநர்களின் கைகளில் கிடைத்திருக்கிறார். சந்தீப் இதுவரை பண்ணிய படங்களில் கேஷுவல் லுக்கில்தான் வந்திருப்பார். இந்தப் படத்தில் அவருடைய லுக், பாடி லேங்வேஜ், பெர்ஃபாமன்ஸ் புதிதாக இருக்கும். ‘பாகுபலி’யில் எப்படி தீய சக்திகள் அழிய வேண்டும் என்று பிரபாஸின் கதாபாத்திரம் போராடியதோ அது மாதிரி சந்தீப் கிஷன் இதில் போராடுகிறார்.” “ரெஜினா?”
“தெலுங்கில் செம ரவுண்டு வந்துகொண்டிருக்கும் ரெஜினா புயல் இப்போது தமிழில் மையம் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்குப் பிறகு அவருடைய கிராஃப், டாப் கியரில் எகிறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ரெஜினாவைப் பற்றி சொல்வதாக இருந்தால் so sweet. ஸ்பாட்டுக்கு வந்ததும் கேரக்டரோடு ஜெல்லாகிவிடுவார். சீன் ஆர்டர் மாற்றி எடுத்தாலும் எந்த சீன் எடுக்கிறோமோ அந்த சீனுக்கு ஏற்ற மாதிரி பின்னி பெடல் எடுத்துவிடுவார்.”“மற்ற நட்சத்திரங்கள்?”
“தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று தென்னிந்திய படங்களில் ரவுண்ட் கட்டி அடிக்கும் ஜெகபதிபாபு வித்தியாசமான ரோல் பண்ணியிருக்கிறார். வழக்கமாக வெள்ளை தாடி, கருப்புக் கண்ணாடி என்று சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வரும் அவரை கலர் ஃபுல்லாகக் காட்டியிருக்கிறோம். இவர்களோடு தணிகலபரணி, ரவிபாபு, காவேரி முக்கியமான ரோல் பண்ணியிருக்கிறார்கள்.” “படத்தைப் பத்தி ஜில்லுன்னு ஒரு மேட்டர் சொல்லுங்களேன்?”
“படத்தில் லிப்-லாக் முத்தக் காட்சி இருக்கிறது. கதைப்படி ரெஜினாவைச் சந்திக்க சந்தீப் கிஷன் அர்த்த ராத்திரியில் சுவர் ஏறிக் குதித்து மீட் பண்ணுவார். அந்தக் காட்சியில் ஒரு வித டென்ஷனுடன் சந்தீப் இருப்பார். அந்த சமயத்தில் பச்சக்குன்னு ரெஜினா முத்தம் கொடுக்க வேண்டும். ஒரே ஷாட்டில் கேஷுவலாக முத்தம் கொடுத்து அசத்தினார் ரெஜினா.
வழக்கமா முத்தக் காட்சி எடுக்கும்போது பல டேக் போகும். ஆனால், சந்தீப், ரெஜினா விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. இரண்டு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ் என்பதால் என்னுடைய வேலை சுலபமாக முடிந்தது. இதற்கு முன் ‘ரொட்டீன் லவ் ஸ்டோரி’ படத்தில் ஜோடியாக பண்ணியிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு படங்கள் சேர்த்து குறுகிய காலத்தில் ஹாட்ரிக் அடித்திருக்கிறார்கள்.”
“வேறென்ன ஸ்பெஷல்?” “இந்தப் படத்துக்கு நான் கேட்ட வசதிகளை எல்லாம் தயாரிப்பாளர் சாய்ராம் செய்துகொடுத்தார். ஒரு இயக்குநருக்கு நல்ல ஒளிப்பதிவாளர் அமைவது அபூர்வம். என் மனசுல கற்பனை பண்ணி வைத்திருந்த விஷயங்களை அங்குலம் அங்குலமாக ஆங்கிள் வைத்து படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சாய் ஸ்ரீராம்.
‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘சுண்டாட்டம்’, ‘யானும் தீயவன்’ உள்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்த அச்சு ராஜாமணி இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பராக வந்துள்ளது. டப்பிங் பணி முடியும் தருவாயில் இருக்கிறது. இனி ஃபைனல் அவுட்புட் எடுக்க வேண்டியதுதான் பாக்கி. படத்தைப் பார்க்கும்போது டப்பிங் படம் என்ற ஃபீல் வரவே வராது. அச்சு அசல் தமிழ்ப் படம் போல் அசத்தலாக வந்துள்ளது.’’
- சுரேஷ்ராஜா
|