பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணமுண்டா?



சினிமாவுக்கு கதை எழுத கத்துக்கலாம்! மாணவன் 46

காலம் காலமாக சொல்லப்படும் கதைகளில் கட்டுடைப்பை நிகழ்த்தி ரசிகர்களை அதிர்ச்சிப்படுத்துவது என்பது கதை சொல்லும் பாணியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மரபு. இம்மாதிரி கதைகளை படமாக எடுக்கும்போது சர்ச்சைகள் எழலாம். ஏன், இயக்குநரின் கொடும்பாவியே கூட எரிக்கப்படலாம்.ஆனால்-சமூகத்தை பீடித்திருக்கும் சனியன்களை ஒரு படைப்பாளி கேள்விகளுக்கு உள்ளாக்குவதும், மக்களிடையே மனம் திறந்த ஒரு விவாதத்துக்கு அடிகோலுவதும் சினிமா என்கிற கலைவடிவின் கடமைகளில் ஒன்றுதானே?

நம்பிக்கைகளுக்கு இடையேயான சண்டையாக இந்த கதைவகை பெரும்பாலும் அமையும்.உதாரணத்துக்கு திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற ஒரு கதையை எடுத்துக் கொள்ளலாம்.பொழுதுபோகாத மன்னன் செண்பகபாண்டியனுக்கு திடீரென்று பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா என்கிற சந்தேகம் எழுந்து தொலைக்கிறது. இதை நேரிடையாக சொல்லாமல், எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை போக்குபவர்களுக்கு தங்க நாணயங்கள் பரிசு என்று அறிவிக்கிறான்.

இந்த பரிசினை வாங்குவதற்கு தருமி என்கிற ஏழை புலவன், இறைவன் சொக்கநாதனிடம் (அவர் சொக்கநாதன் என்பதை அறியாமலேயே) ஒரு கவிதையை வாங்கிப்போய் மன்னனிடம் வாசித்துக் காட்டுகிறான். அந்தக் கவிதையில் தன்னுடைய சந்தேகம் நீங்கியதாகக் கருதும் மன்னன், பரிசினை தருமிக்கே அறிவிக்கிறான்.

அரண்மனைப் புலவர் நக்கீரர் இதை ஆட்சேபிக்கிறார். கவிதையில் கருத்துக் குற்றம் இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து இறைவனே அரசவைக்கு வந்து நக்கீரரோடு தன் தமிழில் என்ன பிழையென்று வாதாடுகிறார். வாதம் முற்றி, ஒருகட்டத்தில் தன்னை வெளிப்படுத்தும் இறைவன் கோபத்தில் நெற்றிக்கண்ணைத் திறக்கிறார்.

‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்று தமிழுக்கு விசுவாசமாக இறைவனை எதிர்க்கிறார் நக்கீரர்.பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணமுண்டு என்பதாக பொருள்தரும் கவிதையை இறைவன் எழுதியது தவறு என்பதே நக்கீரரின் வாதம். கூந்தலுக்கு அவர்கள் பயன்படுத்தக்கூடிய வாசனைத் திரவியங்கள் மூலம்தான் மணம் கிடைக்கும் என்று அறிவியல்பூர்வமாக வாதிடுகிறார்.இன்றளவும் ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற இந்த காட்சி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தான் எதிர்த்து வாதாடுவது இறைவனிடம்தான் என்று தெரிந்ததுமே, அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெறுவதுதான் வழக்கமான சினிமா காட்சி. ஆனால், நக்கீரனோ, இறைவனாக இருந்தாலும் தமிழில் குற்றம் செய்தால், அது குற்றம்தான் என்று தைரியமாக மரபினை உடைத்து வாதாடியதாலேயே அந்த கதைக்கு கிளாசிக்கல் அந்தஸ்து கிடைத்தது.

(கதை விடுவோம்)