மீன்கொடி தேரில் வலம் வந்த வல்லபன்!
அறிவுஜீவி பத்திரிகையாளர் என்று அறியப்பட்டவர் எம்.ஜி.வல்லபன். அவரிடம் பணியாற்றிய பத்திரிகையாளர் அருள்செல்வன், ‘சகலகலா வல்லபன்’ என்ற பெயரில் புத்தகம் தொகுத்திருக்கிறார். சினிமா கலைஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஒளிப்படக்கலைஞர்கள் பலரும் வல்லபன் குறித்த அரிய தகவல்களை அறியத்தருகிறார்கள்.
 ‘சோலைக் குயிலே காலைக்கதிரே’, ‘ஆகாய கங்கை பூந்தேன் மலர்ச்சூடி’, ‘அரிசி குத்தும் அக்கா மகளே’, ‘மீன்கொடி தேரில் மன்மத ராஜன்’ என்று விரிகிறது வல்லபன் எழுதிய திரைப் பாடல் பட்டியல். இது சக பத்திரிகையாளர்களுக்கே ஆச்சர்யம் தரும் தகவல்.
‘பேசும் படம்’ இதழில் ஓவியம் வரைய வைத்ததை நெகிழும் சிவகுமார், பாட்டெழுத வந்த வல்லபனுக்கு பாரதிராஜா வைத்த சோதனை, ‘அன்னக்கிளி’க்கு முன்னரே பிலிமாலயா கட்டுரையின் மூலம் இளையராஜாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது, சொகுசு ஹோட்டலை மறுத்து, வல்லபனுக்காக சாதாரண வீட்டில் தங்கிய சத்யராஜ்,
ஜீனியஸ் கேள்வி - பதில் பகுதியை மெச்சும் நாசர், ரஜினி குறித்த கட்டுரைக்காக பிலிமாலயா அலுவலகத்தில் கல்வீச்சு, ‘வல்லபனின் விமர்சனக் கட்டுரைகள் சிலரது விலா எலும்புகளையே முறித்தன’ என்கிற பாக்யராஜ், வல்லபனின் ‘சாப்பிட்டீங்களா?’ கேள்விக் குணத்தைப் போற்றும் எழுத்தாளர் ராஜேஷ்குமார், எழுத்தாளர் சுஜாதா நடித்த முதலும் கடைசியுமான படம், வல்லபன் இயக்கிய ‘தைப்பொங்கல்’, போட்டி பத்திரிகைக்கும் படைப்புகள் தந்து உதவியதை சிலிர்த்துச் சொல்லும் சித்ரா லட்சுமணன், ஹெல்த் பத்திரிகைகளின் முன்னோடி வல்லபன்,
நிகழ்ச்சிகளை மட்டுமே க்ளிக் செய்த ஸ்டில்ஸ் ரவியை நட்சத்திரங்களை படமெடுக்க வைத்து வளர்த்துவிட்ட வல்லபன், மதர்லாண்ட் பிக்சர்ஸ் வல்லபனுக்காக மாதக்கணக்கில் அட்லாண்டிக் ஹோட்டலில் ரூம் போட்டுக்கொடுத்தது, மணிரத்னம் படத்தில் பணியாற்றியது, உறவினரின் மருத்துவ சிகிச்சைக்காகக் கடனாளியாக நின்றது, சிவாஜிகணேசன் பற்றிய செய்திகளுக்கு தடை விதித்த கோபக்காரப் பத்திரிகையாளர், பாடல்வரியில் இளையராஜா சொன்ன திருத்தத்தை மறுத்து அவருடன் தொடர்பை துண்டித்தவர், ‘சித்தி’ சீரியல் திரைக்கதை வாய்ப்பு கைமாறிய கதை என புத்தகம் முழுக்க சுவைமிகு தகவல்கள் விரவிக் கிடக்கின்றன.
பிறப்பால் மலையாளியான ஒருவர் தமிழ்நாட்டுக்கு வந்து தமிழ் கற்று, பாடலாசிரியராக, கதை வசனகர்த்தாவாக, இயக்குநராக, எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் சினிமா பத்திரிகை உலகின் முடிசூடா மன்னராக கம்பீர வலம் வந்திருக்கிறார் என்பது போற்றுதலுக்குரியது. குருவுக்கான மிகச்சரியான காணிக்கையை எல்லா சீடர்களாலும் கொடுத்துவிடமுடியாது. அருள்செல்வன் கொடுத்துவிட்டார். புத்தகம் குறித்த தொடர்புக்கு : 7358016453
- நெல்பா
|