இணையதளம் டெல்லி கணேஷ்
(சென்ற இதழ் தொடர்ச்சி)
டைட்டில்ஸ் டாக் 25
கண், காது, வாய் பொத்தியபடி அமர்ந்திருக்கும் மூன்று குரங்குகள் பொம்மை, மகாத்மா காந்திக்கும் மிகவும் பிடித்த உருவம் என்பார்கள். ‘தீயதைப் பார்க்காதே’, ‘தீயதைக் கேட்காதே’, ‘தீயதைப் பேசாதே’ என்கிற மூன்று அரிய தத்துவங்களை விளக்கும் பொம்மை இது. வாழ்க்கையில் மட்டுமல்ல, இணையதளங்களில் நாம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதை இந்தப் பொம்மைதான் சொல்லிக் கொடுக்கிறது.
 சமீபத்தில் ஜி.எஸ்.டி. அமலானபோது திரையுலகில் சலசலப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக நெட்டில் சினிமாத்துறைக்கு சம்பந்தமற்ற ரசிகர்கள் பலரும் மோசமான சில வார்த்தைகளால் ஒட்டுமொத்த சினிமாத் துறையையே வசைபாடினார்கள். கருத்து சுதந்திரம் தேவைதான். ஆனால், அதை தவறாகப் பயன்படுத்தி ஒரு துறையையே கேவலப்படுத்தும்போது, அத்துறையின் ஓர் அங்கமாக என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதுபோன்ற நேரத்தில் நம்மால், இணையத்தில் எந்தக் கருத்தையுமே சொல்லமுடியவில்லை. சொன்னால், அதற்கு எதிர்வினை என்கிற பெயரில் ஆபாசமான அச்சுறுத்தல்களைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இணையதளக் கருத்துச் சுதந்திரத்துக்கு கண்காணிப்பு இருந்தால் தேவலை என்றுதான் நினைக்கிறேன்.
அதே நேரம் இணையதளத்தின் சாதகங்களையும் குறிப்பிட வேண்டும். என்னுடைய தலைமுறையில் நல்ல திறமைசாலிகள் பலரும் பத்திரிகைகளில் வாய்ப்பு கிடைக்காமல் முடங்கிக் கிடந்தார்கள். இந்தத் தலைமுறையில் அதுபோன்ற எழுத்துத் திறமை வாய்ந்தவர்கள் சிறுகதை, கட்டுரை, ஜோக்ஸ் என்று இணையதளங்களில் ஜமாய்க்கிறார்கள்.
சமீபத்தில் பல்வலிக்காக ட்ரீட்மென்டுக்கு போயிருந்தேன். ஒரு டாக்டர் ரொம்பவும் பயமுறுத்தினாரே என்று இன்னொரு டாக்டரிடம் போனேன். பழைய டாக்டர் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டையெல்லாம் எனக்கு வாட்ஸப் பண்ணுங்க என்றார். ஒரே நிமிஷத்தில் அதை செய்தேன். உடனே ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அவரால் சரியான ட்ரீட்மென்ட் கொடுக்க முடிந்தது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்துக்கு பேருதவியாக இருக்கிறது என்று கருதுகிறேன்.
அதேபோல என்னுடைய டிரைவரிடம் ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கிவரச் சொல்லி கடைக்கு அனுப்பியிருந்தேன். ‘நீங்க கேட்ட பொருளோட டிசைன் நாலு இருக்கு சார். எது உங்களுக்கு வேண்டும்?’ என்று கடையிலிருந்த பொருட்களை படமெடுத்து வாட்ஸப்பில் அனுப்பினார். உடனே எனக்குத் தேவையானதை சொல்ல முடிந்தது. இப்படி நம் வாழ்க்கையை சுளுவாக்கும் வேலையையும் இணையதளம் செய்கிறது.
கடல்கடந்த நாடுகளில் வசிக்கும் உறவினர்களோடு ஸ்கைப்பில் பேசுவது, துல்லியமான இசையை ஐபாடில் கேட்பது என்று எனக்கு இணையதளங்கள் செய்யும் உதவியை நாள் முழுக்க சொல்லிக்கொண்டே இருக்கலாம். நான் கொஞ்சம் டெக்னாலஜியில் அப்டேட்டான ஆளு. எது லேட்டஸ்டாக வந்தாலும் உடனே வாங்கிப் போட்டுடறது.
ஒரு சினிமாக்காரனாக எனக்கு இந்த இணையதளங்கள் மீது இருக்கும் கோபமே வேறு. ஒரு படம் ரிலீஸ் ஆனதுமே, முதல் காட்சி முடிவதற்குள்ளாகவே அதற்கு தீர்ப்பு கொடுத்துவிடுகிறார்கள் சில இணையதள விமர்சகர்கள்.
நெகட்டிவ்வாக கமென்ட் கொடுத்தால்தான் அவர்களுக்கு ஹிட்ஸ் கிடைக்கிறது என்பதற்காக சினிமாக்காரர்களின் வயிற்றில் அடிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறார்கள். சினிமாத்துறையினருமே கூட இதுபோன்ற போலி விமர்சகர்களுக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள் என்பதுதான் மனசுக்கு கஷ்டமாக இருக்கிறது.
மற்றபடி.... கத்தியைக் கொண்டு காயும் வெட்டலாம், கழுத்தையும் அறுக்கலாம் என்பார்கள். அதுபோலத்தான் இணையதளமும். நல்லவர்கள் பயன்படுத்தினால் நன்மைக்கும், தீயவர்களிடம் சிக்கினால் தீமைக்கும் பயன்படுகிறது.
தொகுப்பு : சுரேஷ்ராஜா
(தொடரும்)
|