கோழி பிடிக்க அலைந்த படக்குழு!



ஸ்கூல் லைஃபை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளிவந்துள்ளன. இதில் ‘துள்ளுவதோ இளமை’ மாதிரி பல படங்கள் சூப்பர் ஹிட்டடித்துள்ளன. அந்த வரிசையில் இடம்பெறுகிறது ‘பள்ளிப்பருவத்திலே’. பிசினஸ் விஷயங்களில் உச்ச கட்ட பரபரப்பில் இருந்த இயக்குநர் வாசுதேவ் பாஸ்கரிடம் பேசினோம்.

“ரசிகர்களுக்கு என்ன கேரண்டி கொடுக்கப் போறீங்க?”

“படம் பார்க்கவரும் ரசிகர்களுக்கு ஒரு விஷயத்தில் என்னால் வாக்குறுதி கொடுக்கமுடியும். இது கண்டிப்பா அரைச்ச மாவை அரைச்ச படமாக இருக்காது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள என்னுடைய சொந்த ஊரான ஆம்பலாப்பட்டு கிராமம்தான் கதைக்களம். சின்ன வயதில் நான் பார்த்த, ரசித்த அனுபவங்களை இதில் இப்போதுள்ள டிரெண்டுக்கு ஏற்ற மாதிரி ஸ்கிரீன்ப்ளே பண்ணியிருக்கிறேன்.

நான் படித்த பள்ளிக் கூடத்தில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறேன். இந்தப் படத்துல பள்ளிப் பருவத்தில் ஏற்படும் இனக் கவர்ச்சி, காதல் போன்ற பிரச்னைகள் என்பதைத் தாண்டி சமூகத்துக்குத் தேவையான மெசேஜும் இருக்கு. அதுக்காக கிளைமேக்ஸ்ல ஹீரோ பக்கம் பக்கமாக ஜாதியைப் பற்றியும், மதத்தைப் பற்றியும் ரவுண்ட் டிராலி ஷாட்ல பேசுகிற மாதிரியான பழைய கான்செப்ட் கிடையாது. இது அதுக்கும் மேல.”
“ரியல் கதையா? ரீல் கதையா?”

“பாஸ்... நான் நிம்மதியா குடும்பம் நடத்தறது உங்களுக்குப் பிடிக்கலையா. வம்புல மாட்டிவிட்டுடாதீங்க. எங்க ஊர்ல நான் பார்த்த, கேள்விப்பட்ட வெவ்வேறு காதல் கதைகள் தான் இந்தப் படத்துக்கு இன்ஸ்பிரேஷன்.”

“படத்துல என்ன மெசேஜ் சொல்லப் போறீங்க?”

“படத்துல ஹீரோ, ஹீரோயின் இருந்தாலும் மெயின் கேரக்டர் ஹீரோவின் அப்பா. ஸ்கூல் ஹெட்மாஸ்டராக வரும் அவர் தன் சொந்த முயற்சியில் சாதாரண பள்ளியை சிறந்த பள்ளியாக செயல்பட வைக்கிறார்.

ஊர் மக்களிடம் நல்லாசிரியர் என்ற பெயரும் மரியாதையும் கிடைக்கிறது. ஊருக்கு நல்லவராகத் தெரியும் அவர் தன் பிள்ளையை நடத்த வேண்டிய விதத்தில் நடத்தத் தெரியாமல் தடுமாறுகிறார். அப்பா-மகன் உறவு எப்படி இருக்கவேண்டும் என்பதை அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்கிறேன்.”

“கே.எஸ்.ரவிக்குமார்?”

“எல்லாருடைய வாழ்க்கையிலும் மறக்கமுடியாத ஒரு ஆசிரியர் இருப்பார். அப்படி என் வாழ்க்கையில் தன் உயர்ந்த செயல்பாடுகளால் மறக்க முடியாத ஆசிரியராக இடம் பெற்றவர் சாரங்கன். தனி மனிதனான அவருடைய முயற்சியால் சிறிய பள்ளியான எங்கள் பள்ளிக்கு தஞ்சை மாவட்டத்திலேயே சிறந்த பள்ளி என்ற அங்கீகாரம் கிடைத்தது.

எங்கள் பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவர்களுக்கு சாரங்கன் ஐயாதான் ரோல் மாடல். அவருடைய கேரக்டரில் கே.எஸ்.ரவிக்குமார் சார் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ரவிக்குமார் சார் நடித்திருக்கிறார் என்பதைவிட வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால்தான் பொருத்தமாக இருக்கும்.”

“படத்துல வேற யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?”

“ஹீரோவின் அம்மாவாக ஊர்வசி பண்ணியிருக்கிறார். வழக்கமான கேரக்டராக இல்லாமல் மனதைத் தொடுகிற மாதிரி நெகிழ்வான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன்ராம் இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

‘காதல் கசக்குதய்யா’ வெண்பா நாயகி. தஞ்சாவூர் பெண் என்பதால் நேட்டிவிட்டி சப்ஜெக்ட்டில் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். ஹீரோயின் அப்பாவாக பொன்வண்ணன், அம்மாவாக ‘பருத்திவீரன்’ சுஜாதா நடித்திருக்கிறார்கள். சித்தப்பாவாக ஆர்.கே.சுரேஷ் வர்றார். காமெடிக்கு தம்பி ராமையா, கஞ்சா கருப்பு.”
“டெக்னீஷியன்ஸ் பற்றி...”

“வினோத்குமார் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். டெல்டா மாவட்டங்களின் அழகை ரொம்ப நாளைக்குப் பிறகு பார்த்த திருப்தி இருக்கும். விஜய் நாராயணன் இசையில் பாடல்கள் செம ஹிட். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குன்னு ஒரு மார்க்கெட் உண்டாகும்.

மூன்று பாடல்களை வைரமுத்துவும், மீதமுள்ள பாடல்களை சாரதா மற்றும் என் தங்கை வாசு கோகிலாவும் எழுதியுள்ளார்கள். இது தெரிந்த முகங்களும் தெரியாத முகங்களும் நடிக்கும் படம். என்னுடைய தயாரிப்பாளர் வேலு, ‘‘எனக்கு அதைப்பற்றி கவலையில்லை. கதை நல்லா இருக்கு”ன்னு தாராளமா செலவு பண்ணியிருக்கிறார்.”

“படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம் ஏதாவது?”

“மறக்கவே முடியாத அனுபவம் அது. அந்தக் காலத்திலிருந்து எங்கள் ஊர் பக்கம் ஷூட்டிங் நடக்கும்போது ஊரே திருவிழா மாதிரி ஒன்று கூடிவிடும். ஆனால் அவர்களால் எந்த தொந்தரவும் இருக்காது. ஒரு காட்சியில் கோழிகள் தேவைப்பட்டது. புரொடக்‌ஷன் டிப்பார்ட்மென்ட்டும் இரவு நேரத்தில் அலைந்து திரிந்து கோழிகளை கொண்டு வந்தார்கள்.

மறுநாள் விஷயத்தை கேள்விப்பட்ட ஊர் பெண்கள் எங்களிடம் கேட்டால் நாங்கள் கோழி தரமாட்டோமா? என்று செல்லமாகக் கடிந்து கொண்டு காட்சிக்குத் தேவையான கோழிகளைக் கொடுத்தார்கள். பல நாள் ஊர் மக்கள் வீட்ல இருந்துதான் எங்களுக்கு சாப்பாடு வரும். கிராமங்களில் இன்னும் வெள்ளந்தியான நல்ல மனுசங்க இருப்பதை நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.”

 “பாரதிராஜா பாராட்டினாராமே?”

“ரிலீஸுக்கு முன் சில வி.ஐ.பிகளுக்கு படத்தை போட்டுக் காட்டினோம். அப்படித்தான், பாரதிராஜா சாருக்கு படத்தைத் திரையிட்டோம். மறுநாள் அவருடைய ஆபீஸுக்கு அழைத்து ‘மண்வாசம் மாறமல் படம் பண்ணியிருக்கீங்க.

‘அலைகள் ஓய்வதில்லை’ ஃபீல் கொடுத்திருக்கீங்க’ன்னு ஒவ்வொரு கேரக்டரையும் சிலாகித்துப் பேசினார். கமல் சார் டிரைலர், பாடல்கள் பார்த்துவிட்டு ‘இது சாதாரண படமாகத் தெரியவில்லை. பார்க்கத் தோணும் படம்’னு சொன் னாரு.”“உங்களைப் பற்றி?”

“சொந்த மண் தஞ்சாவூர். எல்லாருக்கும் அவர்களுடைய ஊர் பாசம் இருக்கும். உலகின் எந்த மூலைக்குப் போனாலும் அவர்களிடம் மண்ணின் சாயல் எந்த வடிவத்திலாவது இருக்கும். அப்படி, நான் சென்னைக்கு பல ஆண்டுகளுக்கு முன் வந்தாலும் தஞ்சாவூர்க்காரன் என்று சொல்லுமளவுக்கு என் ஸ்டைல் இருக்கும்.

டி.ராஜேந்தர் சாரின் தீவிர ரசிகன். ‘தங்கைக்கோர் கீதம்’ படத்தை நூறுமுறையாவது பார்த்திருப்பேன். டைரக்டர் கனவோடு சென்னைக்கு வந்தேன். அந்தக் கனவு நிறைவேறியிருக்கு. ஒரு டைரக்டராக என்னுடைய ஊரில் படப்பிடிப்பு நடத்தியதை நினைக்கும் போது கொஞ்சமா சாதித்த திருப்தி இருக்கு. ‘பள்ளிப் பருவத்திலே’ என் ஆசான் சாரங்கன் சாருக்கு சமர்ப்பணம் பண்ணுகிறேன்.”

- சுரேஷ்ராஜா