சத்யா



குழந்தையை காணோம்!

தெலுங்கில் ஹிட்டான ‘க்ஷணம்’ படத்தின் ரீமேக். ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கிறார். ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் சிபிராஜ், ரம்யா நம்பீசன் இருவரும் காதலர்கள். ரம்யாவின் தந்தை நிழல்கள் ரவியின் எதிர்ப்பால் காதலர்கள் ஒருசேர முடியாமல் பிரிகிறார்கள்.

சிபி, ரம்யாவின் நினைவுகளுடன் தாடி வளர்த்தபடி ஆஸ்திரேலியாவில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, திடீரென ரம்யாவிடமிருந்து  தொலைபேசி அழைப்பு வருகிறது. சென்னைக்கு  வருகிறார் சிபி. ‘என் குழந்தையை யாரோ கடத்திட்டாங்க’ என்று கதறுகிறார் ரம்யா நம்பீசன். பல முனைகளிலும் தேடுதல் வேட்டை நடத்தும் சிபி வெற்றி பெற்றாரா என்பது கதை.

கவனமாக உழைத்தால் நிச்சய வெற்றியைப் பெறலாம் என்பதை உணர்ந்து, அக்கறையோடு நடித்திருக்கிறார் சிபிராஜ். தாடியுடன் வலம் வரும் அவரது கதாபாத்திரத்தின் உடல்மொழியும் வசன உச்சரிப்பும் மெருகேறியிருக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப்பின் முன்னாள் காதலியை சந்திக்கும் காட்சியில்  அவரது ஆக்‌ஷனும் ரியாக்‌ஷனும் அருமை.

நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து ஈடுபாட்டுடன் நடித்திருக்கிறார் ரம்யா நம்பீசன்.  குழந்தை ஏக்க காட்சிகளில் உருக வைக்கிறார். சிபியுடனான காதல் காட்சிகளில் கிறங்க வைக்கிறார்.

`நீ உட்காந்தாலே நிக்கற மாதிரிதான் இருக்கும், எதுக்கு எழுந்து நிக்கற?’ என  சிபிராஜிடம் நக்கல் வசனம் பேசும் போலீஸ் கதாபாத்திரத்தில் கவனம் ஈர்க்கிறார் ஆனந்த்ராஜ். ஒரு காட்சியில் ‘எனக்கு நடிக்க வராது’ என்பார் சிபி. ‘அதான் எல்லாருக்கும் தெரியுமே’ என்று கலாய்ப்பார் யோகிபாபு. அந்த வசனத்தைப் பொறுத்துக் கொண்டது சிபியின் பெருந்தன்மை. முகபாவனையிலேயே சிரிக்கவைக்கிறார் யோகி பாபு.

அனுயா பரத்வாஜாக வரும் வரலட்சுமிக்கு அட்டகாசமான  போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். முதல் பாதியில் குறைந்த காட்சிகளில் வந்தாலும், இரண்டாம் பாதியில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சதீஷ், சீரியஸ் கதாபாத்திரத்தில் வந்து, முக்கியத் திருப்பத்தை அடையாளம் காட்டுகிறார். 

சைமன் கிங்  இசையில் ‘காதல் ப்ராஜெக்ட்’, ‘யவ்வனா’ பாடல்கள் இனிமை. ‘யவ்வனா’வை ரசித்து எழுதியிருக்கிறார் மதன் கார்க்கி.சிட்னியில்  தொடங்கி ஈ.சி.ஆர் வழியே தொடர்ந்து, மந்தைவெளி கடந்து, ஈ.சி.ஆரில் நிறைவடையும் காட்சிகளை கச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அருள்மணி பழனி.  அடுத்தடுத்து திருப்பங்களுடன் அமைந்த கதையை அலுப்புத்தட்டாத வகையில் இயக்கியிருக்கிறார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.