கொடிவீரன்



ஆக்‌ஷன் பாசமலர்!

நல்லதையே நினைக்கும் நாயகன் சசிகுமாருக்கு தங்கை சனுஷா மீது அளவு கடந்த பாசம். கெட்டதை மட்டுமே  நினைக்கும் வில்லன் பசுபதிக்கும் அதே மாதிரி தனது  தங்கை பூர்ணா மீது வரைமுறையற்ற பாசம். வென்றது நல்லவனின் பாசமா, தீயவனின் பாசமா என்பதை வன்முறை, பகை, பாசம் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் முத்தையா.

குறி சொல்லி சாமியாடும் கதாபாத்திரத்தில் வருகிறார் சசிகுமார். ஆக்ரோஷ சாமியாட்டம், அதிரடி சண்டைகள், தாளாத தங்கைப்பாசம், காதலியைக்கண்டு குழைவு என  அத்தனை ஏரியாக்களிலும் கொடியேற்றும் வீரனாக வலம் வருகிறார். கல்லூரி மாணவியாக வரும் மகிமா நம்பியார், கொடுத்த வேலையை கவனமாகச் செய்திருக்கிறார்.

‘எங்கண்ணன் ஆடிப் பார்த்திருப்பே... அடிச்சுப் பார்த்ததில்லையே’, ‘தப்பு பண்ணா தடுக்க கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்’ என்றெல்லாம் அண்ணனுக்கு பஞ்ச் டயலாக் பேசும் தங்கையாக சிட்டுக்குருவியாக சிறகடிக்கிறார் சனுஷா. அண்ணனுக்காக மொட்டையடித்துக் கொள்ளும் வில்லத் தங்கச்சியாக விபரீதமாக வலம் வருகிறார் பூர்ணா.

விதார்த், நல்ல அரசு அதிகாரியாக வந்துபோகிறார். வாய்ப்பு குறைவு என்றாலும் நடிப்பில் நிறைவு. சசிகுமாரின் மைத்துனராக வரும் விக்ரம் சுகுமாரன் மனதில் நிற்கிறார்.  மிரட்டும் விழிகளுடன் அரட்டும் வில்லனாக பசுபதியின் பங்கேற்பு இருக்கிறது.

சசிகுமார் மற்றும் விதார்த்துடன் அவர் சம்பத்தப்பட்ட காட்சிகளில் பரபரப்பு.‘நீங்க நினைச்சவுடனே செய்ய அவன் ஆயிரத்தில ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்’ என்று சசிகுமாரை புகழ்ந்து பேசும் காட்சியில், எதிரியின் பலத்தை எடைபோடும் திறனை வெளிப்படுத்துகிறார்.

பாலசரவணன் மற்றும் இந்தர் குமாரின் காட்சிகளும் கவனம் ஈர்க்கின்றன. சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், தினேஷ் சுப்பராயன் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் மிரட்டுகின்றன.என்.ஆர்.ரகுநந்தனின் இசையில் ‘களவாணி உன்னை எண்ணி...’, ‘அய்யோ ஆதி ஆத்தி..’, ‘ரக ரக ரகளடா...’,  ‘அண்டம் கிடுகிடுங்க..’, ‘தங்கமே உன்னை...’ என  பாடல்கள் வசீகரிக்கின்றன.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் கிராம மற்றும் விழாக்கோலங்கள் பளிச்சிடுகின்றன. குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் சடங்கு சம்பிரதாயங்களை அக்கறையோடு ஆவணப்படுத்தி, அடிதடிப்படத்தை பாசத்தோடு  இயக்கியிருக்கிறார் முத்தையா.