‘அந்த’ மாதிரி படத்தில் நடிக்கிறாரா அஞ்சலி?கேரளாவே இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.ஏனெனில் -சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட ‘ரோசாப்பூ’ படத்தின் டீஸர் அப்படி.
நம்மூர் அஞ்சலியேதான்.ஹோம்லி + கிளாமரில் பின்னுவார் என்பது நமக்குத் தெரியும்.ஆனால் -மலையாளத்தில் ‘அந்த’ மாதிரி படம்?

ஆண்டவா...
அச்சப்பட வேண்டாம். அப்படியெல்லாம் ஒன்றும் ஆகிவிடாது.அஞ்சலி, சினிமாவில் வெற்றிகரமாக பன்னிரெண்டாவது ஆண்டை எட்டியிருக்கிறார். தெலுங்கில்தான் அறிமுகமானார். எனினும் -தமிழில் அறிமுகமான ‘கற்றது தமிழ்’ படத்தில் எடுத்தவுடனேயே டாப்கியர் போட்டு தன்னுடைய நடிப்பாற்றலைப் பறைசாற்றினார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடமென்று சக்கைப்போடு போட்டவரை ஏனோ மலையாளத் திரையுலகம் அவ்வளவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ‘பய்யன்ஸ்’ என்கிற மலையாளப் படத்தில் நடித்திருந்தாலும், ஏனோ தொடர்ச்சியாக அவருக்கு அங்கே வாய்ப்புகள் கிடைக்கவில்லை.கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்ச்சுக்கிட்டுதான் கொடுக்கும் என்பார்கள் இல்லையா?

அதுபோல இப்போது மலையாளத்தில் அடுத்தடுத்து வாய்ப்புகள் அவருக்கு குவியத் தொடங்கியிருக்கின்றன.வினுஜோசப் இயக்கத்தில் ‘ரோசாப்பூ’ இப்போது வெளியாகியிருக்கிறது. அடுத்து மே மாதம் நம்மூர் இயக்குநர் ராம் இயக்கத்தில் மம்முட்டியோடு அஞ்சலி நடித்திருக்கும் ‘பேரன்பு’ வெளியாகப் போகிறது.

கடந்த டிசம்பர் மாதம்தான் ‘ரோசாப்பூ’ படத்தின் டீஸர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.படத்தின் ஹீரோ பிஜூ மேனன், படமெடுப்பதற்காக நண்பர்களோடு சென்னைக்குக் கிளம்புகிறார். லைலா என்கிற நாட்டுக்கட்டை நடிகையை வைத்து அவர்கள் ‘அஜால் குஜால்’ படமெடுக்க திட்டமிடுகிறார்கள். இதைத் தொடர்ந்து அஞ்சலி படுக்கையறையில் (ஃபுல் காஸ்ட்யூமோடுதான்) ஒருவரோடு ஜாலியாக இருப்பதாக அந்த டீஸரில் காட்சிகள் வெளிவந்திருக்கின்றன.

அந்த டீஸரின் அடிப்படையில்தான் ‘ரோசாப்பூ’, ‘அந்த’ மாதிரி படம், அஞ்சலிக்கு ‘அந்த’ மாதிரி கேரக்டர் என்று கேரள ரசிகர்கள் மத்தியில் பரவி பரபரப்பு  ஏற்பட்டிருக்கிறது. படமும் அடல்ட் காமெடி வகையைச் சார்ந்தது என்று நீலக்கலர் ரசிகர்கள் பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

“அடப் பாவிங்களா! ஒரு குத்துவிளக்கை சிகப்பு விளக்கு ஆக்கிட்டீங்களேடா...” என்று அஞ்சலி ரசிகர்கள் இணையமெங்கும் கொதித்துக் கொண்டிருக்கிறார்கள்.படத் தரப்பு பதறிப்போய் விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

“வதந்திகளை நம்பாதீர்கள். ‘ரோசாப்பூ’, குடும்பத்தோடு எல்லோரும் காணக்கூடிய படம்” என்று படத்தின் இயக்குநர் வினுஜோசப், ஊடகங்களை அழைத்து பிரஸ்மீட் வைத்துக் கொண்டிருக்கிறார்.இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டே அம்மாதிரி டீஸர் தயாரித்திருக்கிறார்கள்.

ஆனால் -அதற்கு வேறு மாதிரி எதிர்பார்ப்பு எகிறும் என்பதை தயாரிப்பாளர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.படத்தின் கதை 2001ல் தொடங்கி 2017ல் முடிகிற மாதிரி அமைக்கப்பட்டிருக்கிறதாம்.இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் மலையாளப் படவுலகில் நம்ம ஷகிலா, ரேஷ்மா, மரியா போன்ற ‘அந்த’ மாதிரி அதிரடி நட்சத்திரங்கள், மம்முட்டி - மோகன்லால்களுக்கே டஃப் ஃபைட் கொடுத்துக் கொண்டிருந்த பொற்காலம். அது தொடர்பான சில காட்சிகள் காமெடிக்காகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறதே தவிர, மொத்தப் படமுமே அதுவல்லவாம்.

இந்தப் பஞ்சாயத்து காரணமாக கிறிஸ்துமஸுக்கே ரிலீஸ் ஆகவேண்டிய படத்தை தள்ளிப்போட்டு, இப்போதுதான் ரிலீஸ் செய்கிறார்கள். அந்த வில்லங்கமான டீஸருக்குப் பிறகு, இது ஒரு குடும்பப்படமென நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அடுத்து நல்ல  மாதிரியாகவும் ஒரு டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள்.

யாருக்கு அதெல்லாம் வேண்டும்?

ரசிகர்கள் என்னவோ பழைய எதிர்பார்ப்பில்தான் இருக்கிறார்கள்.படத்தின் ஸ்பெஷல் ‘அது’ மட்டுமல்ல.கதையில் மொத்தம் 142 கேரக்டர்களாம்.ஒட்டுமொத்த கேரள நிலப்பரப்பையும் பிரதிநிதித்துவப் படுத்தும் விதமாக இவ்வளவு கேரக்டர்களை இந்தக் கதைக்குள் கொண்டு வந்திருக்கிறாராம் இயக்குநர்.

கேரளாவின் பல்வேறு தரப்பட்ட கலாச்சாரம், மலையாள மொழியின் பல்வேறு பரிமாணங்களை ‘ரோசாப்பூ’ அடக்கியிருக்கிறதாம். இதெல்லாம் இப்போது செய்யப்பட்டு வரும் பிரச்சாரங்கள். இதை முன்பே செய்து தொலைத்திருக்கலாம் என்று படத்தின் ஹீரோ பிஜூமேனனும், ஹீரோயின் அஞ்சலியும் ஆதங்கப்படுகிறார்கள்.பார்ப்போம், அப்படி என்னதான் ‘ரோசாப்பூ’வுக்குள் இருக்கிறதென்று...

யுவகிருஷ்ணா