ரேக்ளா ரேஸில் கலந்து கொள்கிறார் கதிர்!பாதி படம் முடிந்த பிறகு அர்த்தராத்திரியில் டைட்டில் அறிவிப்பது தான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஃபேஷன். அந்த வரிசையில் பெயரிடப்படாத புதிய படத்தில் நாயகனாக கமிட்டாகியுள்ளார் கதிர்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். ஒளிப்பதிவு பாண்டி அருணாச்சலம், சரவணன் ஜெகதீஸ். இசை நவீன் சங்கர். எம். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது, ‘‘கிராமத்திலிருக்கும் வாலிபனான நாயகன் ஒரு பெரிய பிரச்னைக்காக சென்னை செல்ல வேண்டியிருக்கிறது. நாயகன் அந்தப் பிரச்னையை எப்படி எதிர்கொண்டான் என்பதே கதை. அது என்ன பிரச்னை? சமீபத்தில் நாட்டையே கலங்க வைத்த பிரச்னைதான் அது.

இந்தப் படத்தின் கதையை உருவாக்கி அதற்கான சரியான நாயகன் தேடியபோது வெகு பொருத்தமாகக் கிடைத்தவர்தான் கதிர். கதிருக்கு ‘மதயானைக் கூட்டம்’, ‘கிருமி’, ‘விக்ரம் வேதா’ படங்களுக்குப் பிறகு இந்தப் படம் பெயர் சொல்லும் படமாக இருக்கும்.

தஞ்சைப் பகுதியில் தொடங்கும் படப்பிடிப்பு கடம்பூர் மலைப் பகுதி, சென்னை என்று முடிவடைய இருக்கிறது. ‘பென்ஹர்’, ‘உழவன் மகன்’ படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் வரும் ரேக்ளா வண்டி ரேஸ் பேசப்படும்’’ என்றார் இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா.

- எஸ்