விஜய் சேதுபதி 25



சீதக்காதி : சில குறிப்புகள்!

* ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கும் மூன்றாவது படமாக, விஜய் சேதுபதி நடிக்கும் 25ஆவது  படமாக உருவாகியிருக்கிறது ‘சீதக்காதி’.

* 75 வயது நாடகக்கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக, தேசிய விருது பெற்ற முன்னாள் நாயகி  அர்ச்சனா நடிக்கிறார்.

* விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் பெயர் அய்யா.

* படத்தின் முதல் பார்வை விளம்பரத்தை வடிவமைத்தவர் கோபி பிரசன்னா. கொடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டில்களிலிருந்து  ஒரு பிளாக் அண்ட் ஒயிட் படத்தை தேர்ந்தெடுத்து அமைத்துள்ளார்.

* முதல் பார்வை விளம்பரத்தை முதன்முதலாக இயக்குநர் நண்பர் நலன் குமாரசாமியிடம் காட்டியிருக்கிறார் தரணீதரன். ‘‘பிரமாதம்’’  என்று பாராட்டிய அவர், ‘‘யார் இந்த நடிகர்’’ என்று கேட்டிருக்கிறார். மேக்கப் வெற்றி பெற்றுவிட்டது என்று உற்சாகமடைந்த இயக்குநர்  அவருக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

* முதல் பார்வை போஸ்டரைப் பார்த்த ஒருசிலர் ‘முதல்வன்’ அர்ஜுன் மாதிரி இருக்கிறது என்றும், வேறுசிலர் ‘இந்தியன்’ கமல் மாதிரி  உள்ளது என்றும் கூறியிருக்கிறார்கள். தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி, கரிசல் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் ஆகியோரை மனதில்  வைத்தே விஜய் சேதுபதியின் தோற்றத்தை உருவாக்கினாராம் இயக்குநர்.

* ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை அடுத்து 2013ல் தரணீதரன் உருவாக்கிய கதை இது. விஜய் சேதுபதிக்கு பொருத்தமாக  இருக்கும் என்று முடிவெடுத்த இயக்குநர், அவரது சின்ன வயதுக்கு இது தாங்காது என்று முடிவை மாற்றிக்கொண்டு, அமிதாப்பச்சனை  நடிக்கவைக்க முயற்சி மேற்கொண்டிருக்கிறார். நீண்ட நாட்களாகியும் அதற்கான வாய்ப்பு அமையாததால், ‘சீதக்காதி’யை ஓரம்கட்டிவிட்டு  ‘ஒரு பக்கக் கதை’ படத்தை ஆரம்பித்து விட்டார். அந்தப் படம் சில காரணங்களால் வெளிவராமல் போய்விட்டது. மீண்டும் ‘சீதக்காதி’யைக்  கையில் எடுத்திருக்கிறார். தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கிடைத்தவுடன் விஜய் சேதுபதியை அணுகியிருக்கிறார். அவர், உடனே கால்ஷீட்  தருவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

* விஜய் சேதுபதியின் 75 வயது தோற்றத்துக்கு மேக்கப் போடுவதற்காக சென்னை மற்றும் மும்பையில் கலைஞர்களைத்  தேடியிருக்கிறார்கள். யாரும் சரியாக அமையவில்லை. நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஆஸ்கார்  விருதுபெற்ற ஒப்பனைக்கலைஞர் கெவின் ஹெனியைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அவர் நேரில் வரச் சொல்லியிருக்கிறார். உடனே,  75 வயது முதியவருக்கான தோற்றம் எப்படியெல்லாம் இருக்கவேண்டுமென விஸ்வநாத் சுந்தரம் அமைத்துக் கொடுத்த போட்டோ ஷாப்  படங்களை எடுத்துக்கொண்டு விஜய் சேதுபதி, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மூவரும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விரைந்திருக்கிறார்கள்.  ஆலோசனை நடத்திய கெவின் ஹெனி, உடனடியாக விஜய் சேதுபதியின் முகத்தை அச்செடுத்து பல்வேறு பரிமாணங்களைக்  கொடுத்திருக்கிறார். தனது குழுவில் உள்ள திறமையான கலைஞர் அலெக்ஸ் நோபிளை படக்குழுவுடன்சென்னைக்கு  அனுப்பிவைத்திருக்கிறார்.

* படப்பிடிப்புத்தளத்துக்கு முதல் ஆளாக வந்து, கடைசி ஆளாகச் செல்வாராம் விஜய் சேதுபதி. அவரது முகத்தில் முதியவர் தோற்றத்தை  உருவாக்கும் மேக்கப் போடுவதற்கு நான்கு மணி நேரம் ஆகுமாம். அதைக் கலைப்பதற்கு ஒன்றரை மணிநேரம் பிடிக்குமாம்.

* கலையையும் கலைஞர்களையும் சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால் என்ன ஆகும் என்பதே படத்தின் கதை. ‘‘நாடகக் கலைஞர் பற்றிய  கதை என்பதால், சீரியஸாக இருக்கும் என நினைக்க வேண்டாம். நகைச் சுவை கலந்து சுவாரஸ்யமாகப் படமாக்கியிருக்கிறேன்’’ என்று  உறுதி சொல்கிறார் இயக்குநர்.

* ‘பீட்சா’ படப்பிடிப்பின்போதே தரணீதரனுக்கும் விஜய் சேதுபதிக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது பைக்கில் வந்தபோது எப்படிப்  பழகினாரோ, இப்போது சில கோடி ரூபாய் காரில் வரும்போதும் அப்படியே பழகுகிறார் என்று விஜய் சேதுபதியின் பணிவை வியக்கிறார்  இயக்குநர்.

* ரம்யா நம்பீசனும் பார்வதி நாயரும் தங்கள் பெயர்களில் நடிகைகளாகவே தோன்றுகிறார்கள்.

* இன்னொரு டேக் போகலாம் என்று டைரக்டர் சொன்னால், பிரபல நடிகர்கள் காரணம் கேட்டு மறுத்துவிடுவதுண்டு. எத்தனை டேக்  எடுத்தாலும் களைப்படையாமல் அதே சுறுசுறுப்புடன் நடித்துக் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.

* இயக்குநர் மகேந்திரனுக்கு இந்தப் படத்தில் கனமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

* வெளிவர இயலாமல் போன ‘ஒரு பக்கக் கதை’ படத்துக்கு அக்கறையுடன் இசையமைத்த கோவிந்த் வசந்தா, இந்தப் படத்துக்கு கூடுதல்  உற்சாகத்துடன் இசையமைத்திருக்கிறார்.

தொகுப்பு : நெல்லை பாரதி