அழியாது கூத்து!



‘‘அடிப்படையில் நான் எழுத்தாளர். சமூகம் சார்ந்து இதுவரை சுமார் இருபது புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். ‘அகத்திணை’ என்ற என்னுடைய நாவலைத்தான் இப்போது படமாக எடுத்துள்ளேன். டைட்டில் இன்னும் முடிவாகவில்லை’’ என்று பேச ஆரம்பித்தார் இயக்குநர் ஆதிரை.“இது என்ன மாதிரி படம்?”

“இந்தப் படத்தில் கூத்துக்கலையின் வாழ்வியலைச் சொல்லியிருக்கிறேன். இன்று சினிமாவை உலகளவில் எல்லாரும் கொண்டாடுகிறார்கள். அதன் ஆரம்பப் புள்ளியே கூத்துக் கலைதான். இது நம் மண் சார்ந்த கலை. மற்ற கதைகளையோ அல்லது உலக சினிமாவையோ எடுப்பதற்கு நிறையப் பேர் இருக்கிறார்கள். எனவேதான் நான் நம் கலையை பதிவு செய்ய ஆசைப்பட்டேன்.

இன்று கூத்துக்கலை உட்பட பல கலைகளின் பாரம்பரியத்தை நாம் தொலைத்துவிட்டோம்.  ஆனால், கருத்துகள் எதுவுமே திணிப்பாக துருத்திக்கொண்டு இருக்காது. இது பக்கா கமர்ஷியல் படம். கதையின் போக்கில்தான் நகைச்சுவை உட்பட எல்லா பகுதிகளும் இருக்கும். கூத்துக்கலையின் இன்றைய நிலை என்ன, அவர்கள் வாழ்வியல் எப்படி இருக்கிறது என்பதை மிக மிக யதார்த்தமாக சொல்லியிருக்கிறேன். கூத்துக் கலையோடு பெண் விடுதலையைப் பற்றியும் படம் பேசுகிறது.”

“நடிகர்கள்?”

“நாயகனாக ஆர்.எஸ்.கார்த்திக் நடிக்கிறார். ஏற்கனவே ‘பீச்சாங்கை’ படம் பண்ணியிருக்கிறார். கார்த்திக் என்னுடைய பன்னிரண்டு வருட நண்பர். எப்போது சந்தித்தாலும் சேர்ந்து படம் பண்ணுவோம் என்று பேசி வைத்திருந்தோம். என்னுடைய கதைக்கு கார்த்திக் பொருத்தமாக இருந்ததால் அவரையே நடிக்க வைத்தேன். சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படம் முடிவதற்குள் மூன்று படங்கள் பண்ணிவிட்டார்.

கதைக்குள் வருவதற்காக உடற்பயிற்சி உட்பட நிறைய பயிற்சி எடுத்தார். தமிழ்நாட்டில் கூத்துக் கலைகள் நடக்கும் இடங்களுக்கு ஒரு ரவுண்ட் அடித்து, கேரக்டரோடு தன்னை இணைத்துக் கொண்டு நிஜக்கூத்துக் கலைஞராக இன்வால்வ்மெண்ட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக மனிஷா ஜித் பண்ணியிருக்கிறார். ‘கமர்கட்டு’ உட்பட நிறைய படங்கள் பண்ணியவர். அவருடைய கதாபாத்திரம் அதிகமா பேசப்படும். இந்தப் படத்தில் நடிச்சாங்க என்பதைவிட வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்று சொல்லவேண்டும். நாயகி என்றால் தோழிகளுடன் அரட்டை, டூயட் என்று டெம்ப்ளேட் கேரக்டர் இருக்கும்.

இதில் மனிஷாவுக்கு முகத்தில் எப்போதும் சோகத்தையும் வலியையும் வெளிப்படுத்தக் கூடிய கேரக்டர். அழுத்தமான கேரக்டர் என்பதால் கேரக்டரை உள்வாங்கி சிறப்பாக பண்ணினார். வில்லனாக மாரிமுத்து வருகிறார். நாயகியின் அம்மாவா எலிசபெத் பண்ணியிருக்கிறார். கூத்துக்கலையின் நளினத்தை பாடல்கள் வழியாக வெளிப்படுத்த சிவசங்கர் மாஸ்டர் உதவி யாக இருந்தார்.”

“பாடல்கள்?”

“செல்வ நம்பி மியூசிக் பண்ணியிருக்கிறார். ‘திட்டக்குடி’ உட்பட சில படங்களுக்கு மியூசிக் பண்ணியவர். படத்துலே மொத்தம் நான்கு பாடல்கள். கதையைவிட்டு பாடல்கள் வெளியே போகக்கூடாது என்று நானே எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். ஒரு பாடலை பவதாரிணி பாடியிருக்கிறார். ஒளிப்பதிவு ஜெய்ஸ்.

சமுத்திரக்கனி அண்ணனின் ‘யாவரும் வல்லவரே’ படத்துக்கும் இவர் தான் ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். எடிட்டிங் ‘சகா’ ஹரிகரன். தயாரிப்பாளர் ஜேம்ஸ் விக்டர் தாஸ் சாருக்கு இதுதான் முதல் படம். ஆனால் கதைக்குத் தேவையான நியாயமான செலவுகளை காம்ப் ரமைஸ் செய்து கொள்ளாமல் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்.”“உங்களைப் பற்றி சொல்லுங்களேன்.”

“சொந்த ஊர் கடலூர் மாவட்டம் வடலூர். இளம் வயதிலேயே கவிதை, பாடல்கள் எழுதுவதில் ஆர்வம். அந்த ஆர்வத்துடன் சென்னைக்கு வந்தேன். லயோலாவில் படித்தேன். சன் டி.வி.யில் ‘இளமை புதுமை' உட்பட சில நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராக வேலை பார்த்துள்ளேன்.

இயக்குநர் சீமானிடம் ‘தம்பி’ படத்தில் வேலை செய்தேன். தோழர் பிரான்சிஸ் கிருபா, ராஜு முருகன் ஆகியோர் என்னுடைய நண்பர்கள். நானும் கிருபாவும் ஒன்றாகச் சேர்ந்து சினிமா வாய்ப்பு தேடி இருக்கிறோம். அந்த சமயத்தில் சசிகுமார் என்ற நண்பர்தான் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார்.

அவர்தான் எங்களுக்கு சாப்பாடு, ரூம் வசதியெல்லாம் செய்து கொடுத்தார். பொதுவா கவிஞர்கள் பிற உயிர்களுக்கு தீங்கு இழைப்பது  பற்றி சிந்திக்கமாட்டார்கள். ஆனால் பிரான்சிஸ் கிருபாவைப் பற்றி வந்த சர்ச்சை என் பட வேலைகளைத் தாண்டி மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது.
எழுத்தாளர், உதவி இயக்குநராக இருந்த நான் அடுத்த கட்ட நகர்வாக இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். நிச்சயம் இது வெகுஜனங்களுக்கான படமாக இருக்கும்.”

- சுரேஷ்ராஜா