எலியோடு விளையாடு!



‘‘ஒரு படத்தை துவங்கும்போது போதிய வீட்டுப்பாடம் செய்துவிட்டுத் தான் படப்பிடிப்புக்கு போவேன். இதுதான் கிட்டத்தட்ட எல்லா இயக்குநர்களின் வழக்கமும்கூட. ஆனால், இந்த நடைமுறை கள் ‘மான்ஸ்டர்’ படத்துக்கு போதவில்லை’’ என்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். இவர் ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கியவர்.

நெல்சனிடம் பேசினோம்.“படத்தோட தலைப்பே ஹாலிவுட் பாணியில் இருக்கே?”

‘‘பொட்டன்ஷியல் ஸ்டூடியோ நிறுவனத்துக்கு நான் இயக்கும் இரண்டாவது படம் இது. என் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை அவங்க தயாரிச்சிருக்காங்க. யாருக்கும் தீங்கு செய்யாத ஒருவனுக்கு எலி எப்படி வில்லனாக வருகிறது, இறுதியில் அதை அவன் கொன்றானா என்பதுதான் படத்தின் ஒரு வரிக் கதை.”

“என்னது, எலிதான் வில்லனா?”

“என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்? அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை எலி பிடிக்க ஆள் வைத்திருக்கிறார்கள். எலி கிட்டத்தட்ட மனிதனுடைய டி.என்.ஏ.உடன் ஓரளவுக்கு நெருக்கமானது. முதுகெலும்பு உள்ள விலங்கு. மனிதனை அழிக்கக்கூடிய ஆள் பலத்தோடு இருப்பது எலிதான். ராஜஸ்தான் மாநிலத்தில் எலிக்கு கோயிலே இருக்கிறது.”

“எஸ்.ஜே.சூர்யாவே ஒரு மான்ஸ்டர்தானே?”

“ஆமாம். அவர் மாஸ்டர் மட்டுமல்ல, நடிப்பில் மான்ஸ்டரும்கூட. எஸ்.ஜே.சூர்யா எப்போதுமே பாசிட்டிவ் எனர்ஜி உள்ளவர். அவரிடம் கதை கூறும்போது, ‘நீங்கள் ஒரு எலி’ என்று ஆரம்பித்ததுமே, கேரக்டர் எப்படி இருக்குமோ என்று பயந்தார். முழுக் கதையைக் கேட்டதும் கேரக்டருக்குள் இன்வால்வாகி ஒரு காட்சியை நடித்தே காண்பித்தார். அசந்துவிட்டேன். நான் கற்பனை செய்ததற்கு வேறொரு டைமென்ஷனை அவர் கொண்டு வந்திருக்கிறார்.

காலையிலிருந்து மாலை வரை நடித்தாலும் மனுஷன் கொஞ்சம்கூட டயர்டாக மாட்டார். சில காட்சிகளில் எலிக்குத் தகுந்தாற்போல் முகபாவனை கொடுக்க வேண்டும். நான் எத்தனை முறை கேட்டாலும் சலிப்படையாமல் நடித்துக் கொடுத்தார். ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய கண், காது, கன்னமெல்லாம் தனித்தனியாக நடித்திருப்பதை நீங்கள் திரையில் பார்க்க முடியும். இதுவரை யாரும் பார்த்திராத எஸ்.ஜே.சூர்யாவை இந்தப்படத்தில் பார்க்கலாம்.”

“ஹீரோயின்?”

“பிரியா பவானி ஷங்கர். என்ன மாயமோ தெரியவில்லை, அவருக்கு எங்கு பார்த்தாலும் ரசிகர்களாகவே இருக்கிறார்கள். அழகான, திறமையான, தனித்துவமான நடிகை. அவரையும் மனதில் வைத்து கதாபாத்திரத்தை அமைத்திருக்கிறேன். படத்தின் நாயகன் எஸ்.ஜே.சூர்யா என்றதும் அவருடன் எனக்கு பொருத்தமாக இருக்குமா என்று முதலில் தயங்கினார்.

கதை கேட்டு முடிவு செய்யுங்கள் என்று சொன்னேன். கதை பிடித்திருந்ததால் சின்ன கரெக்‌ஷன் கூட சொல்லாமல் நடிக்க சம்மதித்தார். கருணாகரனுக்கும் படத்தில் முக்கியத்துவம் இருக்கும். எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர், கருணாகரன் ஆகியோர் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தால் படப்பிடிப்புத் தளமே செம ரகளையாக இருக்கும்.”

“டெக்னிக்கல் டீம்?”

“ஷங்கர் கதை எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் ஷங்கர் என்னை நம்பவில்லை. ஆனால், ஒவ்வொரு காட்சியாக எடுக்க எடுக்க என்னைவிட ஆர்வமாக முழு ஈடுபாட்டுடன் பணியாற்றினார். ஒளிப்பதிவாளர் கோகுலுக்கும் எனக்கும் நெருக்கமான உறவு எப்போதும் உண்டு. உண்மையான எலியை வைத்துதான் படப்பிடிப்பு நடத்தினோம். கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் கிடையாது.

ஐந்து பாடல்களும் ரசிக்கும்படியாகவும், வித்தியாசமாகவும் இருக்க வேண்டும் என்று கவனத்துடன் வேலை செய்துள்ளோம். எலியுடன் எஸ்.ஜே.சூர்யாவிற்கு ஒரு பாடல் இருக்கிறது. அந்தப்பாடலை எஸ்.ஜே.சூர்யாவே பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் சினிமாவைத் தவிர்த்து வேறு எதையும் பேசி நான் பார்த்ததில்லை. ஒவ்வொரு காட்சியும் தரமாக வரவேண்டும் என்று சிந்திக்கக்கூடியவர்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தேவையில்லாத அடையாளங்களை விரும்பமாட்டார். எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு தேவையான விஷயங்களை முன்பே கூறிவிடுவார். இந்தப் படம் நன்றாக வருவதற்கு முக்கியகாரணம் என் நண்பர்கள்தான். அதில் கமல்தான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்.”“எப்படி இப்படியொரு வித்தியாசமான படம் யோசிச்சீங்க?”

“என் வீட்டில் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் தான் இந்தப்படம். மூன்று நாட்கள் ஒரு எலி என்னைத் தூங்க விடாமல் செய்தது. அதேபோல் அனுபவம் பெரும்பாலானோருக்கு நடந்திருக்கும். அந்த சம்பங்களின் தொகுப்பே இந்தப்படம். குழந்தைகளுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய உறவு இருக்கும்.

அந்த வகையில் இந்தப்படத்தை குழந்தைகள் மிகவும் ரசிப்பார்கள். எஸ்.ஜே.சூர்யா படம் என்றால் ஃபேமிலியோட தியேட்டருக்கு போக முடியுமா என்ற கேள்வி வரும். அவர் நடித்து முதல் முறையாக கிளீன் ‘யூ’ சான்றிதழ் பெற்ற படம் இந்த ‘மான்ஸ்டர்’தான்.’’

- சுரா